99. மடவ ஆகலின் மலர்ந்தன!

 

99. மடவ ஆகலின் மலர்ந்தன!

 

பாடியவர்: இளந்திரையனார்

இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 94-இன் உரையில் காணலாம்.

திணை: முல்லை

துறை: பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி பருவம் அன்று என்று                       

வற்புறுத்தியது

 

துறை விளக்கம்: தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன், “கார்ப்பருவம் வருவதற்குள் திரும்பி வருவேன்” என்று சொல்லிச் சென்றிருக்கிறான். ஆனால், மழை பெய்வதற்கான அறிகுறிகளையும் மலர்கள் மலர்வதையும் கண்ட தலைவி, “கார்ப்பருவம் வந்துவிட்டது; ஆனால் தலைவன் இன்னும் வரவில்லையே!” என்று வருந்துகிறாள். தலைவியின் துயரத்தை உணர்ந்த தோழி, அவள் காணும் பருவ அறிகுறிகளுக்கு வேறுவிதமான விளக்கம் அளித்து அவளைத் தேற்றுகிறாள்.

பாடலின் பின்னணி:

தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றபோது, “கார்ப்பருவம் வருவதற்குள் திரும்பி வருவேன்” என்று உறுதியளித்துச் சென்றான். காலம் செல்லச் செல்ல, வானத்தில் மழை தோன்றுகிறது. மேலும், பிடவம், கொன்றை, கோடல் முதலிய மலர்கள் மலரத் தொடங்குகின்றன. இதைக் கண்ட தலைவி, “தலைவன் வருவதாகக் கூறிய கார்ப்பருவம் வந்துவிட்டதே! ஆனால் அவன் இன்னும் வரவில்லையே!” என்று வருந்துகிறாள்.

தலைவியின் துயரத்தை உணர்ந்த தோழி, அவள் காணும் பருவ அறிகுறிகளை வேறுவிதமாக விளக்குகிறாள். கடலில் நீரை முகந்த கரிய மேகம் தான் சுமந்த நீரைத் தாங்க முடியாமல் மழையைப் பெய்துவிட்டது. ஆனால், இது முழுமையான கார்ப்பருவம் அன்று. மலர்களும் பருவம் அறியாமல் மலர்ந்துவிட்டன. ஆகவே, தலைவன் வருவதாகக் கூறிய உண்மையான பருவம் இன்னும் வரவில்லை என்று தோழி கூறுகிறாள்.

நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று            5
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே                 10

அருஞ்சொற்பொருள்:

1.   நீர் அற – நீர் இல்லாமல்; வறந்த - வறண்ட; நிரம்பா – நிரம்பாத; நீள் இடை – நீண்ட வழி

2.   துகில் – ஆடை, துணி; விரித்தன்ன – விரித்தது போன்ற; அவிர் - ஒளிரும்; உருப்பு – வெப்பம்

3.   அஞ்சுவர – அச்சம் வருமாறு; பனிக்கும் – நடுங்கச் செய்யும்; வெஞ் சுரம் – பாலை நிலம் ; இறந்தோர் – கடந்து சென்றவர் (கடந்து சென்ற தலைவன்)

4.   காண்வர – காணும்படி

5.   என்றிசின் – என்று கேட்கின்றாய்; மடந்தை – பெண் (தலைவி); மதி – அசைச்சொல்

6.   கமம் – நிறைவு; சூல் - கரு; மா – கரிய

7.   செல்லாது - இயலாது; இறுத்த – ஒழித்த (பெய்து தீர்த்த); வண் பெயல் – வளம் தரும் மழை

8.   கார் – கார் காலம்; அயர்ந்த – மயங்கிய, கலங்கிய; தேர்வு இல – தெளிவு இல்லாத

9.   பிடவமும் – பிடவ மலரும்; கொன்றையும் – கொன்றை மலரும்; கோடலும் – காந்தள் மலரும்

10.  மடவ – அறிவில்லாத; மலர்ந்தன பலவே – பல மலர்களும் மலர்ந்துவிட்டன.

பதவுரை:

1.   நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை - நீர் இல்லாமல் வறண்ட, நீர் நிரம்பாத நீண்ட பாலைவழியில்,

2.   துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் - துணியை விரித்தது போன்ற பரந்து காணப்படும் வெயிலின் வெப்பத்தில்,

3.   அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர் - அஞ்சும்படியாக நடுங்கச் செய்யும் கொடிய சுரவழியைக் கடந்து சென்ற தலைவன்,

4.   தாம் வரத் தௌத்த பருவம் காண்வர - தாம் திரும்பி வருவதாகத் தெளிவாகக் குறிப்பிட்ட பருவம் வந்ததுபோல் தோன்ற,

5.   இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று - “இதுதானோ அந்தப் பருவம்?” என்று நீ கேட்கிறாய், தோழி! அறிவில்லாமல்

6.   மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை – பருவத்தை மறந்து கடலிலிருந்து நீரை முகந்து நீரால் நிறைந்த கரிய மேகம்,

7.   பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் - அந்த நீரைத் தாங்க முடியாமல் பெய்த வளம் தரும் மழையும்,

8.   கார் என்று அயர்ந்த உள்ளமொடு - அதைக் கார்ப்பருவம் என்று எண்ணி மயங்கிய மனத்துடன்,

9.   தேர்வு இல பிடவமும் கொன்றையும் கோடலும் - ஆராயாமல் பிடவமும், கொன்றையும், கோடலும்,

10.  மடவ ஆகலின் மலர்ந்தன பலவே - பருவத்தை அறியாததால் மிகவும் மலர்ந்துவிட்டன

உரை:

தோழி! தலைவன் கடந்து சென்றது நீர் வற்றிய நீண்ட சுரவழி. அங்கு வெள்ளை ஆடையை விரித்தாற்போன்று வெயில் பரந்து கிடக்கும். அந்தக் கொடிய வெப்பம் காண்பவர்களை அஞ்சும்படியாக நடுங்கச் செய்யும். அத்தகைய பாலை  நிலத்தில் சென்ற தலைவன் தான் வருவேன் எனத் தெளிவாகக் கூறிய பருவம் இதுவோ என்று நீ கேட்கின்றாய். அறிவில்லாமல், பருவத்தை மறந்து,  கடலில் இருந்து நீரை முகந்த கரிய மேகம், தான் சுமந்த நீரைத் தாங்க முடியாமல் மழையைப் பெய்து தீர்த்துவிட்டது. அதைக் கண்டு, இது  கார்காலம் என்று எண்ணி பிடவம், கொன்றை, கோடல் மலர்கள் பருவத்தை அறியாமல் மிகவும் மலர்ந்துவிட்டன.


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே