9. வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே!
9. வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே! பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ இவன் முடிசூடிய மூவேந்தருள் ஒருவனாகச் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமையும் உடையவனாக விளங்கினான். இவன் புறநானூற்றில் 282-ஆம் பாடலையும், அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்களையும் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379), குறுந்தொகையில் பத்துப் பாடல்களையும் (16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398), நற்றிணையில் பத்துப் பாடல்களையும் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகையில் பாலைக்கலி முழுவதையும் (1–35) இயற்றிய பெரும்புலவன். இவன் பாலைத் திணைப் பாடல்களை இயற்றுவதில் மிகுந்த புலமையுடையவனாக இருந்தான். இவன் பாடல்கள் அனைத்தும் இலக்கிய நயமும் கருத்துச் செறிவும் மிக்கவை. புறநானூற்றின் 1 1-ஆம் பாடலில் புலவர் பேய்மகள் இளவெயினி , இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். திணை: பாலை துறை: உடன்போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது துறை விளக்கம்: தலைவி தலைவனோடு அவன் ஊருக்குச் செல்லும்போது, தலைவன் கூறியது. பாடலின் ப...