9. வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே!

 

9. வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே!

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ

இவன் முடிசூடிய மூவேந்தருள் ஒருவனாகச் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமையும் உடையவனாக விளங்கினான். இவன் புறநானூற்றில் 282-ஆம் பாடலையும், அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்களையும் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379), குறுந்தொகையில் பத்துப் பாடல்களையும் (16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398), நற்றிணையில் பத்துப் பாடல்களையும் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகையில் பாலைக்கலி முழுவதையும் (1–35) இயற்றிய பெரும்புலவன். இவன் பாலைத் திணைப் பாடல்களை இயற்றுவதில் மிகுந்த புலமையுடையவனாக இருந்தான். இவன் பாடல்கள் அனைத்தும் இலக்கிய நயமும் கருத்துச் செறிவும் மிக்கவை. புறநானூற்றின் 11-ஆம் பாடலில் புலவர் பேய்மகள் இளவெயினி, இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

 

திணை: பாலை

 

துறை: உடன்போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது

 

துறை விளக்கம்: தலைவி  தலைவனோடு அவன் ஊருக்குச் செல்லும்போது, தலைவன் கூறியது.

 

பாடலின் பின்னணி: காதலை வீட்டார் ஏற்றுக்கொள்ளாததால், தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு அவனுடைய ஊருக்குப் புறப்படுகிறான். காட்டின் வழியே நடந்து செல்லும்போது, மென்மையான இயல்புடைய தலைவி காட்டின் கடுமையான வெப்பத்தாலும், நடப்பதனாலும் சோர்வடைந்து விடுவாளோ என்று தலைவன் அஞ்சுகிறான். அவளது அச்சத்தையும் சோர்வையும் போக்கி, வழியின் எளிய தன்மையைக் கூறி அவளை உற்சாகப்படுத்தும் விதமாகத் தலைவன் பேசுகிறான்.

 

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழ நின்
நலமென் பணைத் தோள் எய்தினம் ஆகலின்
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி              5
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி
நிழல் காண்தோறும் நெடிய வைகி
மணல் காண்தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்                 10
நறுந் தண் பொழில கானம்
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே

அருஞ்சொற்பொருள்:

1. முயலும் – முயற்சி செய்கின்ற; மாக்கள் – மக்கள்

2. கண்டாஅங்கு – கண்டதைப்போல்

3. அலமரல் – மனக்கலக்கம்; யாழ –  அசைநிலை

4. பணை – மூங்கில்; எய்தினம் – பெற்றோம்

5. புன்கு – புன்க மரம்; அழல் - நெருப்பு; தகை - தன்மை; ஒண் முறி – ஒளிபொருந்திய தளிர்

6. சுணங்கு – தேமல்; வனப்பு - அழகு; அணங்குதல் – பொருந்துதல்; திமிரி – பூசி

7. வைகி – தங்கி

8. வண்டல் – மணலால் கட்டப்படும் சிறுவீட்டு விளையாட்டு; தைஇ – அலங்கரித்து (விளையாடி)

9. ஏகுமதி - செல்வாயாக; வால் – வெண்ணிறமான ; எயிறு – பல்

10. மா – மாமரம்; நனை - அரும்பு; கொழுதி - கொத்தி; ஆலும் – மகிழ்ந்து

11. பொழில் - சோலை; கானம் – காடு

12. ஆறு - வழி

 

பதவுரை:

1. அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் - ஊக்கம் குன்றாதவராய் முயல்கின்ற ஆர்வம் மிக்க மக்கள்

2. வழிபடு தெய்வம் கண் கண்டாங்கு - வழிபடுகின்ற தெய்வத்தை நேரில் கண்டதைப்போல்

3. அலமரல் வருத்தம் தீர யாழ நின் – மனக்கலக்கம் தீர, உன்னுடைய

4. நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின் - நலம் மிக்க மென்மையான மூங்கில்போன்ற தோள்களைப் பெற்றோமாதலின்

5. பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி - பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை

6. சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி  - அழகுத்தேமல் பரந்த அழகிய முலைகளில் பொருந்தும்படி பூசி

7. நிழல் காண்தோறும் நெடிய வைகி - நிழல் கண்டவிடமெல்லாம் நெடுநேரம் தங்கி,

8. மணல் காண்தோறும் வண்டல் தைஇ - மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி

9. வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே - வருத்தமில்லாமல் செல்வாய், வெண்மையான பற்களையுடையவளே!

10. மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் - மாமரத்தின் அரும்புகளைக் கொத்தி உதிர்த்த குயில்கள் கூவித் திரியும்

11. நறும் தண் பொழில கானம் - மணமிக்க குளிர்ந்த சோலைகளையுடையன இக் காடுகள்;

12. குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே - பல சிற்றூர்களையும் உடையது நாம் செல்லும் இந்த வழி

 

கொண்டுகூட்டு: வாலெயிற்றோய்‌, எய்தினம் ஆகலில்‌ திமிரி, வைகி, தைஇ ஏகுமதி எனக் கூட்டுக.

 

உரை:

வெண்மையான பற்களை உடையவளே! சோர்வில்லாமல், தளராத ஊக்கத்துடன் ஒரு செயலை முயன்று செய்யும் பக்திமிக்க மனிதர்களுக்கு, அவர்கள் வழிபடும் தெய்வமே நேரில் வந்து காட்சி அளித்தால் எவ்வளவு மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்குமோ, அதுபோல, என் நெஞ்சில் பிரிவினால் இருந்த மனக்கலக்கமும் வருத்தமும் தீரும்படியாக, உன்னுடைய அழகான, மென்மையான, மூங்கில் போன்ற தோள்களைத் தழுவும் பேற்றினை நான் பெற்றுவிட்டேன். வழியில் பொரிபோன்ற மலர்களை உடைய புன்க மரத்தின், நெருப்பைப் போன்ற சிவந்த அழகிய தளிர்களைப் பறித்து, உன்னுடைய தேமல் படர்ந்த அழகிய மார்பில் வெப்பம் தாக்காதவாறு நீ அப்பிக் கொள்வாயாக. நாம் செல்லும் காட்டில் எங்கெல்லாம் மரங்களின் நிழல் தென்படுகிறதோ, அங்கெல்லாம் நீண்ட நேரம் தங்கி, மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடிச் செல்லலாம். நீ சற்றும் வருத்தப்படாமல் நடந்து வருவாயாக! வழியெங்கும் மாமரத்தின் அரும்புகளைக் கொத்தித் தின்றுவிட்டு, மகிழ்ச்சியோடு குயில்கள் கூவித் திரியும்  நறுமணமிக்க குளிர்ந்த சோலைகள் உள்ளன. அத்தோடு, பல சிறிய ஊர்களும் வழியில் இடையிடையே உள்ளன. எனவே அச்சமின்றி வா!

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!