12. கண்கள் கலங்கின
12. கண்கள் கலங்கின பாடியவர்: கயமனார் கயம் என்ற சொல்லுக்குப் 'பெருமை' என்பது ஒரு பொருளாகும். எனவே, கயமனார் என்பது 'பெரியவர்' என்னும் பொருளை உணர்த்தும். இவர் புறநானூற்றில் ஒரு பாடல் (254), அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்கள் (7, 17, 145, 189, 195, 219, 221, 259, 275, 321, 383, 397), குறுந்தொகையில் நான்கு பாடல்கள் (9, 356, 378, 396), நற்றிணையில் ஆறு பாடல்கள் (12, 198, 279, 293, 305, 324) ஆகியவற்றை இயற்றியுள்ளார். திணை: பாலை துறை: தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது துறை விளக்கம்: காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் காட்டில் உள்ள இன்னல்களைக் கூறி, அவர்களைத் தோழி அச்சமடையச் செய்கிறாள். அவர்கள் உடன்போக்கைத் தவிர்த்துவிட்டு, ஊரறியத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதைத் தோழி மறைமுகமாகக் கூறுகிறாள். பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் தற்காலிகமாகச் சந்தித்துக் காதல் வயப்பட்டனர். ஆரம்பத்தில் தோழியின் உதவியோடு மறைவிடங்களில் கூடிப் பழகியவர்கள், அலர் (பழிச்சொல்) எழும் என்றஞ்சி, இரவில் சந்தித்தனர். தலைவன் வீட்டின் வெளியே வ...