12. கண்கள் கலங்கின
12. கண்கள் கலங்கின
பாடியவர்: கயமனார்
கயம் என்ற சொல்லுக்குப் 'பெருமை' என்பது
ஒரு பொருளாகும். எனவே, கயமனார் என்பது 'பெரியவர்' என்னும் பொருளை உணர்த்தும். இவர்
புறநானூற்றில் ஒரு பாடல் (254), அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்கள் (7, 17, 145,
189, 195, 219, 221, 259, 275, 321, 383, 397), குறுந்தொகையில் நான்கு பாடல்கள்
(9, 356, 378, 396), நற்றிணையில் ஆறு பாடல்கள் (12, 198, 279, 293, 305, 324)
ஆகியவற்றை இயற்றியுள்ளார்.
திணை: பாலை
துறை: தோழி
உடன்போக்கு அஞ்சுவித்தது
துறை விளக்கம்: காதலர்கள்
வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் காட்டில் உள்ள இன்னல்களைக் கூறி, அவர்களைத் தோழி
அச்சமடையச் செய்கிறாள். அவர்கள் உடன்போக்கைத்
தவிர்த்துவிட்டு, ஊரறியத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதைத் தோழி மறைமுகமாகக் கூறுகிறாள்.
பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும்
தற்காலிகமாகச் சந்தித்துக் காதல் வயப்பட்டனர். ஆரம்பத்தில் தோழியின் உதவியோடு
மறைவிடங்களில் கூடிப் பழகியவர்கள், அலர் (பழிச்சொல்) எழும் என்றஞ்சி, இரவில் சந்தித்தனர்.
தலைவன் வீட்டின் வெளியே வந்து எழுப்பும் குறியீட்டு ஒலியைக் கேட்டு,
வீட்டாருக்குத் தெரியாமல் தலைவி அவனைச் சந்தித்தாள். ஆனால், கொடிய விலங்குகள்
நடமாடும் இரவின் வழியும், ஊர்க்காவலர்களின் பார்வையும் அச்சமூட்டுவதாக இருந்தன. இந்தக்
களவு வாழ்க்கையைவிட இல்வாழ்க்கையே சிறந்தது என்று தலைவியும் தலைவனும்
கருதினார்கள். அவர்களின் திருமணத்திற்குத் தலைவியின் பெற்றோர் சம்மதிக்க
மாட்டார்கள் எனக் கருதிய தலைவன், தலைவியைத் தன் ஊருக்கு அழைத்துச் செல்ல (உடன்போக்கு)
முற்பட்டான். அதற்குத் தலைவியும் சம்மதித்தாள். ஆனாலும், தன் பிரிவினால் தன்
பெற்றோரும் தோழியரும் மிகவும் வருத்துவார்கள் என்பதை நினைத்தவுடன் அவள் கண்கள்
நீர் சொரிந்தன.
தலைவியின் இந்தத்
தவிப்பைக் கண்ட தோழி, "உடன்போக்கை விட, பெற்றோர் சம்மதத்தோடு ஊரறியத்
திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே தலைவி விரும்புகிறாள்" என்பதை நயமாக
எடுத்துரைத்து, விரைந்து திருமணம் செய்துகொள்ளுமாறு தலைவனைத் தோழி தூண்டுகிறாள்.
விளம்பழம்
கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ பல் மாண் 5
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவை காண்தோறும் நோவர் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே 10
அருஞ்சொற்பொருள்:
1. விளம்பழம் – விளாம்பழம்; கமழும் – மணக்கும்;
கமம் - நிறைவு; சூல் – கருப்பம்; கமஞ்சூல் – நிறைசூல்; குழிசி – பானை
2. பாசம் – கயிறு; கால் -தண்டு; மத்தம் – மத்து
3. நெய் – வெண்னெய்; இயக்கம் – சுழற்சி (வெண்ணெய்
தோன்றக் கடைதல்)
வெளில் – தயிர் கடைவதற்காக நடப்பட்ட தூண்
4. வைகுதல் - தங்குதல்; புலர்தல் – விடிதல்;
விடியல் – விடியற்காலம் ; கரந்து – மறைத்து
5. அரி - பரற்கற்கள்; கழீஇ - கழற்றி; மாண்
– சிறந்த
6. வரி – கோடு; புனைதல் - அலங்கரித்தல்; வைஇய
– வைப்பதற்கு; செல்வோள் –செல்கின்றவள்
7. நோவர் – வருந்துவார்கள்; மாதோ(மாது+ஓ)
– மாது, ஓ இரண்டும் அசைநிலைகள்
8. அளியர் – இரங்கத் தக்கவர்; ஆயத்தோர் – கூட்டத்தினர்(தோழிகள்)
9. வரவு - வர; அயர்தல் – விரும்புதல்
10. வரைத்து - அளவுக்கு; கலுழ்தல் – கலங்குதல்,
அழுதல்
பதவுரை:
1. விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி - விளாம்பழம்
மணம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில் (நிறைமாதக் கருப்பம் தரித்த மகளிரின்
வயிற்றைப் போன்ற பெரிய பானையில்)
2. பாசம் தின்ற தேய் கால் மத்தம் – தயிர் கடையும்
கயிறு உரசித் தேய்த்த தண்டினையுடைய மத்தின்
3. நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
- வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால் தூணின் அடியிலிருந்து வரும் ஒலிகள் முழங்கும்
4. வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
- இரவில் தங்கியிருந்த இருள் நீங்கிய விடியற்காலத்தில், தன் உடலை மறைத்துக்கொண்டு,
தனது காலின்
5. அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண் - பரற்கற்கள் நிறைந்த சிலம்புகளைக் கழற்றி, பலவிதங்களில்
சிறந்த
6. வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் - வரிகளால்
புனையப்பட்ட பந்தோடு வைப்பதற்காகச் செல்கின்றவள்,
7. இவை காண்தோறும் நோவர் மாதோ - “இவற்றைக்
காணும்போதெல்லாம் வருந்துவார்கள் அன்றோ!
8. அளியரோ அளியர் என் ஆயத்தோர் என - பெரிதும்
இரங்கத்தக்கவர்கள் என் தோழியர்” என்று
9. நும்மொடு வரவு தான் அயரவும் - காதலனாகிய
உன்னோடு வருவதற்குத் தான் உடன்பட்டும்
10. தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே
- தன்னால் கட்டுப்படுத்த முடியாதபடி கலங்கி அழுதன அவளது கண்கள்.
கொண்டு கூட்டு: விடியல்,
மெய்கரந்து, சிலம்பு கழீஇ, வைஇய செல்வோள், நோவர், ஆயத்தோர், அளியர் எனத் தான் வரவு
அயரவும், கண் வரைத்தன்று கலுழ்ந்தன்று எனக் கூட்டி வினை முடிவு செய்க.
உரை:
விளாம்பழம் மணம் கமழும் பெரிய தயிர்ப்பானையில்
தயிர் கடையும்பொழுது, கயிறு உரசித் தேய்த்ததால்
மத்தின் தண்டு தேய்ந்திருக்கிறது. தண்டினையுடைய மத்தின் வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால்
தூணின் அடியிலிருந்து வரும் ஒலி விடியற்காலையில் முழங்குகிறது. அந்த விடியற்காலைப்
பொழுதில், தன் உடலை மறைத்துக்கொண்டு, தனது காலின் பரற்கற்கள் நிறைந்த சிலம்புகளைக்
கழற்றினாள். சிறந்த வரிகளால் புனையப்பட்ட பந்தோடு சிலம்பையும் ஒரே இடத்தில் வைப்பதற்காகச்
சென்றாள். “இவற்றைக் காணும்போதெல்லாம் என் தோழியர் வருந்துவார்களே! அவர்கள் பெரிதும்
இரங்கத்தக்கவர்கள்.” என்று நினைத்தாள். உன்னோடு வருவதற்கு அவள்
விரும்பினாலும், தன்னால் கட்டுப்படுத்த முடியாதபடி அவள் கண்கள் கலங்கி அழுதன.
சிறப்புக் குறிப்பு:
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து
வெண்ணெய் கடைந்தெடுக்கும் தயிர்ப்பானை விளாம்பழத்தின் மணம் கமழும் என்னும் வழக்கு
இன்றும் தமிழ்நாட்டு மக்களிடையே நிலவுகிறது என்று ஔவை துரைசாமிப்பிள்ளை தம் நூலில்
குறிப்பிடுகிறார்.
தான் தலைவனோடு
செல்வது எவருக்கும் தெரியக் கூடாது என்பதற்காகத் தலைவி தன் உடலை மறைத்துக்கொண்டு
விடியற்காலையில் புறப்பட்டாள். அப்போது, தன் காலடிச் சத்தம் வீட்டாருக்குக்
கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தன் காலிலிருந்த சிலம்பைக் கழற்றி வைத்தாள்.
சிலம்பைக் கழற்றியதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
சங்ககாலத் தமிழரின்
திருமண மரபுகளில் ‘சிலம்பு கழி’ என்பது மணப்பெண் வீட்டில் நடைபெறும் சடங்குகளில்
ஒன்றாகும். திருமணத்திற்கு முன் பெண் அணிந்திருந்த சிலம்பைத் திருமண நிகழ்வின்போது
அகற்றும் சடங்கு ‘சிலம்பு கழி’ என அழைக்கப்பட்டது. இச்சடங்கு, பெண் கன்னிப் பருவத்திலிருந்து
இல்லற வாழ்க்கைக்குள் நுழைவதைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.
உடன்போக்கில் செல்லவிருந்த தலைவி, தான் தலைவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதைத்
தன் பெற்றோருக்கு உணர்த்தும் நோக்கில் தன் சிலம்பைக் கழற்றி வைத்திருக்கலாம்
என்றும் கருதலாம்.
காலிலிருந்து
கழற்றிய சிலம்பையும், அதுவரை தான் விளையாடிய பந்தையும் ஒரே இடத்தில்
வைத்துவிட்டுச் செல்ல முற்பட்டபோது, தன் பிரிவால் தோழியரும் பெற்றோரும்
அடையப்போகும் துயரம் அவள் நெஞ்சை உலுக்கியது. அதனால், அவளது கண்கள் அவளையும்
அறியாமல் நீரைச் சொரிந்தன.
Comments
Post a Comment