27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே
27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே
பாடியவர்:
குடவாயிற் கீரத்தனார்
இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் என்னும் ஊர் சங்க காலத்தில் குடவாயில்
என்று அழைக்கப்பட்டது. கீரத்தனார் என்பது இப்புலவரின் இயற்பெயர்.
இவர் குடவாயிலைச் சார்ந்தவராக இருந்ததால், இவர் குடவாயிற் கீரத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் குடவாயிலைச் சார்ந்தவரானாலும்,
பல ஊர்களுக்கும் சென்று புரவலர்
பலரையும் கண்டு வந்தார். ஒல்லையூர்
கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இவருக்கு நன்கு தெரிந்தவன். ஆகவே,
அவன் இறந்ததால் புலவர் குடவாயிற்
கீரத்தனார் பெரும் வருத்தமுற்றுப் புறநானூற்றில் ஒரு பாடலை இயற்றியுள்ளார். இவர்
புறநானூற்றில் இயற்றிய ஒரு பாடல் (242) மட்டுமல்லாமல், அகநானூற்றில் பத்துப் பாடல்களும் (44,
60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385), குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (79,
281, 369), நற்றிணையில்
நான்கு பாடல்களும் (27, 42, 212, 379) இயற்றியுள்ளார்.
திணை:
நெய்தல்
துறை:
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது
துறை விளக்கம்: தலைவன்
மறைவாகக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, தலைவியைக் காவலில் வைத்துள்ளதை அவனுக்குத் தெரியும்படி
தோழி மறைமுகமாகக் கூறுவது.
பாடலின் பின்னணி:
தோழியும் தலைவியும் கடற்கரைச் சோலையில் எப்போதும்போல
விளையாடி மகிழ்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த தலைவனுடன் தலைவிக்குக் காதல் மலர்கிறது.
சில நாட்களாக அவர்கள் அங்கு மறைமுகமாகச் சந்திக்கின்றனர். இந்நிலையில், தலைவியின் வீட்டில்
அவளது காதல் ஒழுக்கத்தை ஓரளவுக்கு ஐயமுற்ற அன்னை, அவளை வீட்டை விட்டு வெளியே செல்ல
விடாமல் தடுத்து, வீட்டிற்குள்ளேயே காவல் வைக்கிறாள். இதனையறிந்த தலைவன், காதலியைக்
காண முடியாமல் அவளது வீட்டின் வேலிக்கு வெளியே வந்து மறைவாக நிற்கிறான். அவனது வருகையை
உணர்ந்த தோழி, அவனுக்குக் கேட்கும்படியாகத் தன் வருத்தத்தை வெளிப்படுத்திப் பேசத் தொடங்குகிறாள்.
தோழி
தலைவியிடம் சொல்வதுபோலத் தொடங்கி, மறைந்திருக்கும் தலைவனுக்குப் பின்வருமாறு
அறிவுறுத்துகிறாள்: "தோழியே! நாமும் அவனும் நேற்றுக்கூட இந்த நெய்தல் நிலக்
கடற்கரையில் வண்டுகளை விரட்டியும், அலைகள் வந்து போகும் மணற்பரப்பில் விளையாடியும்
மகிழ்ந்தோம். இதைத் தவிர நாம் மறைவாக வேறு எதையும் செய்யவில்லை. அப்படியே
செய்திருந்தாலும் அதை ஊரார் யாரும் அறியவில்லை. அப்படியிருக்க, நாரைகள் ஒலிக்கும்
கழனியில் கண்போல மலர்ந்திருக்கும் நெய்தல் பூக்களைக் கொய்து வா என்று எப்போதும்
அன்போடு கூறும் நம் அன்னை, இன்று ஏன் நம்மை வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே
பூட்டி வைத்திருக்கிறாள்? அவளது உள்ளத்தில் என்னதான் இருக்கிறது?" என்று
வினவுகிறாள். இதன் மூலம், "அன்னைக்கு நம் காதல் ஓரளவு தெரிந்துவிட்டது, அதனால்தான்
வீட்டில் அடைத்து வைத்துள்ளாள்; இனி இப்படி மறைமுகமாக வந்து சந்திப்பது இயலாது.
எனவே, நீ உடனே வந்து தலைவியை முறைப்படி திருமணம் செய்துகொள்" என்பதைத் தோழி
தலைவனுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறாள்.
நீயும்
யானும் நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் 5
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி
கண்போல் பூத்தமை கண்டு நுண் பல 10
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று எனக் கூறாதோளே
அருஞ்சொற்பொருள்:
1. நெருநல் – நேற்று
2. உறைக்கும் –
சிந்தும், உதிர்க்கும்; ஓப்பி – ஓட்டி
3. ஒழிதிரை – கரையில்
மோதி அழியும் அலைகள்; வரித்த – குவித்த;
அடைகரை – கரையின் பக்கத்தில்
4. கழி - கடலையடுத்த
உப்புநீர்ப் பரப்பு; கானல் – கடற்கரைச் சோலை
5. கரந்து – பிறர்
அறியாமல் மறைவாக
6. பரந்து – பரவலாக
7. எவன் குறித்தனள்
கொல் - என்ன நினைத்துக் கூறினாளோ; கயம் – ஆழமான பொய்கை
8. இற - இறால்;
ஆர்தல் – உண்ணுதல்; சுறவம் – சுறா மீன்
9. கழி - கடலையடுத்த
உப்புநீர்ப் பரப்பு; மருங்கு - பக்கம்; கணைக்கால் - திரண்ட தண்டு; நீடி – நீண்டு
11. பாசடை - பசிய
இலை; நெய்தல் – நெய்தல் மலர்
12. குறுதல் -
பறித்தல்
கொண்டு கூட்டு: தோழீ, நெருநல் நீயும் நானும் வண்டினம்
ஓப்பி ஆடியதன்றிக் கரந்து செய்தது ஒன்றும் இல்லை; உண்டெனில் அது பரந்து பிறர்
அறிந்தன்றும் இலர்; கழிசேர் மருங்கில் பூத்தமை கண்டும் சிறு பாசடைய நெய்தல் சென்று
குறுமோ எனக் கூறாளாயினமையின், அன்னை எவன் குறித்தனள்கொல் என மாறிக் கூட்டுக.
உரை:
தோழியே! நேற்று
நீயும் நானும் கடற்கரைச் சோலையில் உதிர்ந்து விழும் மகரந்தப் பொடிகளை உடைய
மலர்களில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டி விளையாடினோம். அலைகள் குவித்த வெண்மணல்
பரப்பில் உப்பங்கழியை ஒட்டிய சோலையில் விளையாடியதைத் தவிர, நாம் மறைவாக வேறு
எந்தத் தவறும் செய்யவில்லை.
ஒருவேளை நாம் ஏதாவது
செய்திருந்தாலும், அதை ஊரார் யாரும் அறிந்து அலர் பரப்பவும் இல்லையே! நிலைமை
இப்படி இருக்க, நமது அன்னை இன்று நம்மிடம் வந்து, 'குளங்கள் தோறும் இறால் மீன்களை
உண்ணும் நாரைகள் ஒலிக்கும்படியும், உப்பங்கழிகளில் சுறா மீன்கள் உலவும்படியும்
உள்ள நீர்நிலைகளில், திரண்ட தண்டு நீண்டு, பார்ப்பதற்கு மனிதரின் கண்களைப்போலப்
பூத்திருக்கும் நெய்தல் மலர்களைச் சென்று பறித்து வாருங்கள்' என்று ஏன் கூறவில்லை?
அவள் மனதில் என்ன எண்ணம் இருக்கக்கூடும்?
சிறப்புக் குறிப்பு:
’இற
ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்கழி சேர் மருங்கு’ என்றது ஊர்ப்பெண்டிர் தலைவனின்
வரவைக் கண்டு ஆரவாரித்ததால், அன்னை தலைவியை வீட்டில் காவலில் வைத்தாள் என்பதைக்
குறிக்கிறது.
Comments
Post a Comment