14. நட்டனர் நல்குவர்!
14. நட்டனர் நல்குவர்! பாடியவர்: மாமூலனார் முக்காலத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்ற யோகியாக விளங்கிய இவர், அகநானூற்றில் 27 பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் (11), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (14, 75) இயற்றியுள்ளார் திணை: பாலை துறை: இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. துறை விளக்கம்: தலைவனின் பிரிவைத் தாங்க முடியாத தலைவி, மிகுந்த துயரத்துடன் வருந்துகிறாள். அவளைத் தேற்றுவதற்காகத் தோழி, தலைவனை ‘அன்பில்லாதவன்’ என்று பழிக்கிறாள். தோழியின் இச்சொற்களை மறுத்துத் தலைவி, தலைவனின் நற்பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்கிறாள். பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். அவன் பிரிந்து பல நாட்கள் ஆகிவிட்டதால், அவனைப் பிரிந்த துயரத்தால் தலைவி உடல் மெலிந்து, அழகிழந்து காணப்படுகிறாள். தலைவியின் இந்த நிலையைக் கண்ட ஊர்மக்கள், "தலைவன் அவள் மீது அன்பில்லாதவன், அதனால்தான் அவளைத் தவிக்கவிட்டுப் பிரிந்துவிட்டான்" என்று அலர் (அவதூறு) பேசுகின்றனர். ஊராரின் சொற்களைக் கேட்டு வருந்திய தோழி, தல...