14. நட்டனர் நல்குவர்!
14. நட்டனர் நல்குவர்!
பாடியவர்: மாமூலனார்
முக்காலத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றல்
பெற்ற யோகியாக விளங்கிய இவர், அகநானூற்றில் 27 பாடல்களும், குறுந்தொகையில் ஒரு
பாடலும் (11), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (14, 75) இயற்றியுள்ளார்
திணை: பாலை
துறை:
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
துறை விளக்கம்: தலைவனின்
பிரிவைத் தாங்க முடியாத தலைவி, மிகுந்த துயரத்துடன் வருந்துகிறாள். அவளைத் தேற்றுவதற்காகத்
தோழி, தலைவனை ‘அன்பில்லாதவன்’ என்று பழிக்கிறாள். தோழியின் இச்சொற்களை மறுத்துத் தலைவி,
தலைவனின் நற்பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்கிறாள்.
பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப்
பிரிந்து சென்றுள்ளான். அவன் பிரிந்து பல நாட்கள் ஆகிவிட்டதால், அவனைப் பிரிந்த
துயரத்தால் தலைவி உடல் மெலிந்து, அழகிழந்து காணப்படுகிறாள். தலைவியின் இந்த
நிலையைக் கண்ட ஊர்மக்கள், "தலைவன் அவள் மீது அன்பில்லாதவன், அதனால்தான்
அவளைத் தவிக்கவிட்டுப் பிரிந்துவிட்டான்" என்று அலர் (அவதூறு) பேசுகின்றனர்.
ஊராரின் சொற்களைக் கேட்டு வருந்திய தோழி, தலைவியிடம் வருகிறாள்.
அவளுக்கு ஆறுதல் கூறாமல், அவளது ஆற்றாமையை (பிரிவுத் துயரத்தை)
மாற்றுவதற்காகத் தலைவனைப் பழித்துப்
பேசுகிறாள்: "உன் கணவர் உன்னைத் தவிக்கவிட்டுப் பிரிந்து சென்று பல நாட்கள்
ஆகிவிட்டன. நீயோ உடல் மெலிந்து அழகிழந்து காணப்படுகிறாய். உன் மீது உண்மையான அன்பு
இருந்தால் அவர் இப்படிச் செய்திருப்பாரா? ஊர்மக்கள் சொல்வதுபோல அவர்க்கு உன்மீது
அன்பில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன்" என்கிறாள்.
தோழி அவ்வாறு தலைவனைப் பழித்துக்
கூறியதைக் கேட்டுப் பொறுக்காத தலைவி, அவளுக்கு மறுமொழியாக, "என் கணவர் என் மீது மிகுந்த அன்பும் நட்பும் கொண்டவர்;
அவர் தன் கடமையை முடித்துவிட்டு, குறித்த காலத்தில் கண்டிப்பாக என்னிடம் திரும்பி
வருவார்; வந்து அன்பு காட்டுவார்" என்று தலைவனின் நற்பண்புகளை
எடுத்துக்கூறிப் போற்றுகிறாள்.
தொல்
கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர்ஆயினும் நல்குவர்
நட்டனர் வாழி தோழி குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது 5
அலர் எழச் சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும் 10
கடு மான் புல்லிய காடு இறந்தோரே
அருஞ்சொற்பொருள்:
1. தொல்கவின் - பழைய அழகு; சாஅய – மெலிந்து
2. நல்கார் - அன்பு செய்யாராய்; நீத்தனர்
– பிரிந்தார்; நல்குவர் –அன்பு செய்வார்
3. நட்டனர் – நட்புக்கொண்டவர்; குட்டுவன்
– சேரமான் பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
4. அகப்பா – குட்டுவனின் கோட்டை; நூறுதல்
- இடித்தல்; செம்பியன் – சோழன்
5. வேட்டல் – தீயிடுதல் ; ஞாட்பு - போர்;
6. அலர் - பழிச்சொல்
7. மா - பெரிய; அவிழ்ந்த – விரிந்த; காந்தள்
- காந்தள் மலர்; அம் – அழகிய; சாரல் – மலைப்பக்கம்
8. சாலுதல் – பொருந்துதல்; வயக் களிறு - வலிமையான
ஆண் யானை; பாந்தள் - மலைப்பாம்பு; பட்டென – அகப்பட்டதென
9. துஞ்சா - தூக்கமில்லாத; பிடி - பெண் யானை;
பூசல் – ஆரவாரம்
10. நெடு வரை – நெடிய மலை; விடர் - மலை வெடிப்பு,
குகை; இயம்பும் – எதிரொலிக்கும்
11. கடுமான் – விரைவாகச் செல்லும் குதிரை;
புல்லி - ‘புல்லி’ என்னும் அரசன்; இறந்தோர்- கடந்து சென்றவர்
பதவுரை:
1. தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய - நமது
பழைய அழகு தொலைய, நமது தோளின் அழகு அழிந்துபோக
2. நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் - நமக்கு
அருள் செய்யாது நம்மைவிட்டு நீங்கினார் எனினும் அருள்செய்வார்
3. நட்டனர் வாழி தோழி குட்டுவன் - நம்மீது
நட்புக்கொண்டவர்!, வாழ்க! சேரனின்
4. அகப்பா அழிய நூறி செம்பியன் - அகப்பா என்னும்
கோட்டை அழிய இடித்து செம்பியன்
5. பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது -
பகலில் தீயை மூட்டிய போர்க்களத்திலும் மிகப் பெரிதாக
6. அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
- ஊரார் பழிச்சொல் எழும்படி சென்றுவிட்டாரெனினும்,
மலர்கள் தலைகவிழ்ந்து
7. மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் - பெரிதான
மடல்கள் விரிந்த காந்தள் செடிகளையுடைய அழகிய சாரலில்
8. இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என -
தம் இனத்தில் உயர்ந்த வலிமையான ஆண்யானை மலைப்பாம்பின் வாயில் சிக்கியதால்
9. துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் - நீங்காத
துயரத்துடன் அச்சங்கொண்ட பெண்யானையின் ஆரவாரம்
10. நெடு வரை விடர்அகத்து இயம்பும் - நீண்ட மலையின் குகைகளிலே எதிரொலிக்கும்
11. கடு மான் புல்லிய காடு இறந்தோரே – விரைந்து
செல்லும் குதிரையையுடைய புல்லி என்பானது வேங்கடமலையைக் கடந்து சென்றவர்
கொண்டு கூட்டு: தோழி, கவின் தொலைய, நலம் சாய நல்கார் நீத்தனர்
என்றி; காடு இறந்தோர் சென்றனராயினும், நல்குவர் நட்டனர் ஆதலின் என மாறிக் கூட்டுக.
உரை:
தோழீ! என் காதலர்
என்னுடைய பழைய அழகெல்லாம் கெடும்படியாகவும், தோள்களின் அழகு அழியும்படியாகவும்
என்னிடம் அன்பு காட்டாமல் என்னைப்
பிரிந்து சென்றுவிட்டார்.
சேர மன்னனாகிய
குட்டுவன் என்பவனுடைய 'அகப்பா' என்னும் கோட்டை அழியும்படி, சோழ மன்னனாகிய
செம்பியன் பகல் பொழுதிலேயே தீயிட்டு அழித்தான். அந்தப் பெரும் போர்க்களத்தில்
எழுந்த ஆரவாரத்தை விடவும் மிகப் பெரிய அளவில், என் காதலர்
என்னைப் பிரிந்து சென்ற செய்தி இந்த ஊரெங்கும் அலராக (பழிச்சொல்லாக) பரவி
ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படிப்பட்ட அலர்
எழும்படி என்னைப் பிரிந்து சென்ற அவர், காட்டில் ஒரு காட்சியைக் காண்பார்: மலர்கள்
கவிழ்ந்து, அழகிய பெரிய இதழ்கள் அவிழ்ந்து மலர்ந்திருக்கும் காந்தள் மலர்கள்
நிறைந்த மலைச்சாரலில், தன் கூட்டத்தை வழி நடத்தும் வலிமையான ஆண் யானை (களிறு)
ஒன்று பெரிய மலைப்பாம்பின் (பாந்தள்) வாயில் அகப்பட்டுக் கொள்ளும். அதைக் கண்டு,
தூங்காத துயரத்தோடு அச்சமடைந்த அதன் பெண் யானை (பிடி) எழுப்பும் கதறல் சத்தம்
(பூசல்), அந்த நீண்ட மலையின் குகைகளிலெல்லாம் எதிரொலிக்கும்.
விரைந்து செல்லும்
குதிரைகளை உடைய புல்லி என்பவனுடைய நாட்டில் உள்ள
இத்தகைய கொடிய காட்டுவழியைக் கடந்துதான் அவர் பொருள் தேடச் சென்றுள்ளார்.
இப்போது அவர் அன்பு காட்டாமல் பிரிந்திருந்தாலும், விரைவில் திரும்பி வந்து அருள் செய்வார்.
அவர் நீடூழி வாழ்க!
சிறப்புக் குறிப்பு:
வரலாற்றுச் செய்தி:
இப்பாடலில் குட்டுவன் என்று குறிப்பிடப்படுபவன் சேரமான் பல்யானைச்
செல்கெழுகுட்டுவன் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார்.
இப்பாடலில் செம்பியன் என்று குறிப்படப்படுபவன்
கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் என்று பின்னத்தூர் நாராயணசாலமி ஐயர் தம்
நூலில் கூறுகிறார். புல்லி என்பவன் வேங்கட மலைப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன்.
இறைச்சிப் பொருள்:
ஆண் யானை பாம்பின் வாயில் அகப்பட்டுத் துடிப்பதையும், பெண் யானை அதைக் கண்டு
கதறுவதையும் காணும் தலைவன், "நான் பிரிந்து வந்ததால் என் தலைவியும்
இப்படித்தானே ஊராரின் பழிச்சொல்லில் (பாம்பின் வாய் போன்ற அலரில்) சிக்கிக்கொண்டு,
துடித்துக் கொண்டிருப்பாள்." என்று எண்ணித் தன் பயணத்தை முடித்துக் கொண்டு
விரைவாகத் திரும்புவான் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
Comments
Post a Comment