28. கள்வர்போலக் கொடியன்!

 

28. கள்வர்போலக் கொடியன்!

 

பாடியவர்: முதுகூற்றனார்

இவர் பெயர் உறையூர் முதுகூற்றனார் என்றும் முதுகூத்தனார் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. இவர் அகநானூற்றில் இரண்டு பாடல்களும் (137, 329) குறுந்தொகையில் நான்கு பாடல்களும் (221, 353, 371, 390), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (28, 58), புறநானூற்றில் ஒரு பாடலும் (331)  இயற்றியுள்ளார்.

 

திணை: பாலை

 

துறை: பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது

 

துறை விளக்கம்: தலைவன் பிரிந்து சென்றதைத் தாங்க முடியாமல் வருந்தும் தலைவிக்கு, அவளது தோழி ஆறுதல் கூறித் தேற்றுவது.

 

பாடலின் பின்னணி:

மலைவளமும் இயற்கை எழிலும் கொழிக்கும் பெருமலை நாட்டைச் சேர்ந்த தலைவன், தன் காதலியைத் தழுவி, அவளது கையைத் தன் கண்கள் மீது ஒற்றிக் கொண்டும், அவளது அழகிய நெற்றியைத் தன் கைகளால் மென்மையாக வருடிக்கொண்டும், ஒரு தாயைப்போல அவளுக்கு இன்மொழிகள் கூறித் தேற்றினான்; ஆனால், சொன்ன சொற்களையெல்லாம் மறந்து, தற்போது அவளைத் தவிக்கவிட்டுப் பிரிந்து சென்றதன் மூலம் அவன் ஒரு கள்வனைப்போலக் கொடியவனாக மாறிவிட்டான் என்று தோழி தலைவியின் ஆற்றாமைக்காக இரங்குவதாக இப்பின்னணி அமைகிறது. பொன்னென மலர்ந்த வேங்கை மலர்கள் வீழும் அருவிகளையும், மேகங்கள் தவழும் மூங்கில்கள் நிறைந்த உயர்ந்த மலைச்சிகரங்களையும் கொண்ட நாடன், இத்தகைய துன்பத்தைத் தலைவிக்குத் தந்துவிட்டுப் பிரிந்த கொடுமையை இப்பாடல் விளக்குகிறது.

 

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என       5
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே

 

அருஞ்சொற்பொருள்:

2. நுதல் – நெற்றி; நீவி – தடவி

5. மணி – நீலமணி

7. நிவந்த – ஓங்கி வளர்ந்த; பைங்கண் – பசிய கணுக்களையுடைய

8. சென்னி – தலை

9. கோடு - மலையுச்சி

 

கொண்டு கூட்டு: மலைகிழவோன், என் கை கொண்டு ஒற்றியும், தன் கை கொண்டு நீவியும், இனிய கூறியும் பிரிந்தனாகலின், கள்வன் போலச் சொல்வேறு செயல்வேறுபடும் கொடியன் என மாறிக் கூட்டுக.

 

உரை:

நீலமணி நிறத்தில்  விழும்  அருவிகளையும், பொன்னிற வேங்கை மலர்கள் உதிர்ந்து கிடக்கும் உயர்ந்த மலைப்பக்கங்களையும் கொண்டது அவனது நாடு. அங்குக் காற்றில் அசையும் பசுமையான மூங்கில்கள், வானில் ஓடும் மேகங்களைக் கிழிப்பது போன்ற உயரமான சிகரங்களை உடைய பெரிய மலைகள் சூழ்ந்துள்ளன. அத்தகைய மலைநாட்டின் தலைவன், முன்பு என் கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்; என் அழகிய நெற்றியை மென்மையாகத் தடவிக் கொடுத்தான்; ஒரு தாயைப்போல என்னிடம் இனிமையான சொற்களைக் கூறி அன்பும் அருளும் காட்டினான்.  ஆனால், இப்பொழுது அவன் என்னைவிட்டுப் பிரிந்து சென்று, ஒரு கள்வனைப்போலக் கொடியவனாக மாறிவிட்டான்.

 

சிறப்புக் குறிப்பு:

சங்க இலக்கியத்தில், தலைவியும் தோழியும்  வேறு வேறு அல்லர். ஒருவருக்கு ஒருவர் மறைத்தல் இல்லாத அளவிற்கு இருவர் உள்ளமும் கலந்திருக்கும். அவர்கள் ஓருயிர் ஈருடல் போன்றவர்கள். பல சூழ்நிலைகளில் தலைவியின் அனுபவங்களைத் தன் அனுபவமாகவே தோழி கருதுவாள். அதனால்தான், இந்தப் பாடலில், தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டு, தோழி, ’என் கைக்கொண்டு தன்கண் ஒற்றியும் தன்கை கொண்டு என் நன்னுதல் நீவியும்’ என்கிறாள். தோழிக்கு அத்தகைய உரிமை உண்டு என்ற கருத்து தொல்காப்பியத்தில் காணப்படுகிறது[1].


 



[1]. தலைவரும் விழும நிலைஎடுத்து உரைப்பினும்

போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்

நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்

வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித்

தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்

நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோளை

அழிந்தது களையென மொழிந்தது கூறி

வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு

என்றிவை எல்லாம் இயல்புற நாடின்

ஒன்றித் தோன்றுந் தோழி மேன. (தொல்காப்பியம், அகத்திணையியல், நூற்பா 42)

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே