24. நன்று செய்தனையே!
24. நன்று செய்தனையே!
பாடியவர்: தெரியவில்லை[1]
திணை: பாலை
துறை: 1.
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.
2. பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தலைவியைத் தோழி
உவந்து கூறியது
துறை விளக்கம்: இங்கு
குறிப்பிடப்பட்ட இரண்டு துறைகளுள், முதற் துறையே
உரைநூல்களில் காணப்படும் துறை. ஆனால், அந்தத் துறையைவிட,
இரண்டாவதாகக் கொடுக்கப்பட்டுள்ள துறை பொருத்தமானதாகத் தோன்றுகிறது. தலைவனின் பிரிவை
ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் தலைவியைப் பொறுத்ததுதானே ஒழிய, அது தோழியோடு தொடர்பு உடையது அன்று. பொதுவாகக் கணவனின் பிரிவை
மனைவி ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குவாள். இப்பாடலில், பொருள் ஈட்டச் செல்வது ஆண்களின்
இயல்பு என்று கருதி, தன் கணவன் பொருள் ஈட்டச் செல்வதைத் தலைவி ஏற்றுக்கொள்கிறாள். தலைவியின் செயலைத் தோழி
பாராட்டுவதாக இப்பாடலுக்குப் பொருள்கொள்வது சிறப்பானதாகத் தோன்றுகிறது.
பாடலின் பின்னணி:
குடும்ப வாழ்க்கைக்குப் பொருள்
இன்றியமையாது என்பதை உணர்ந்த தலைவன் பொருள் ஈட்டச் செல்வதற்கு வெளியூருக்குச்
செல்ல முடிவெடுத்தான். தன் முடிவைத் தலைவிக்குத் தெரிவித்தான். அவன் தன்னைவிட்டுப்
பிரிவதைத் தலைவி விரும்பவில்லை. இருந்தாலும், பொருள் இன்றியமையாதது என்பதையும், ஆண்கள்
பொருள் ஈட்டுவதைத் தம் இயல்பாகக் கொண்டவர்கள் என்பதையும் உணர்ந்த தலைவி, அவன்
பிரிவுக்கு உடன்படுகிறாள். தலைவியின் முடிவு நல்ல முடிவு என்று தோழி அவளைப் பாராட்டுகிறாள்.
பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் 5
சேறும் நாம் எனச் சொல்ல சேயிழை
நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனையே
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே
அருஞ்சொற்பொருள்:
1. பார் - நிலம்;
பக – பிளக்கும்படி; வீழ்ந்த – கீழே சென்ற; விழு – சிறந்த; கோடு – கிளை
2. அன்ன – போல; விளவு
– விளாமரம்
3. ஆட்டு - ஆட்டம்;
கோட்டு - கிளையையுடைய; இறுபு – முறிந்துபோய்
4. கம்பலம் – கம்பளம்;
பைம் – பசுமையான; தாஅம் – பரவிக் கிடக்கும்
5. வெள்ளில் – விளாம்பழம்;
வல்சி – உணவு, சோறு; ஆர் - அரிய; இடை - வழி
6. சேயிழை – அழகிய
அணிகலன்கள்
7. செய்தனை – செய்தாய்
8. மனத்தர் – எண்ணத்தை
உடையவர், செய்பொருட்கு – பொருள் ஈட்டுவதற்கு
9. அகலுதல் – நீங்குதல்,
பிரிதல்
பதவுரை:
1. பார் பக வீழ்ந்த வேர் உடை
விழுக்கோட்டு - நிலம் பிளவுபடக் கீழ்ச்சென்ற வேர்களையும், பெரிய கிளைகளையும்
2. உடும்பு அடைந்து அன்ன நெடும்
பொரி விளவின் - உடும்பு அடைந்துகிடந்ததைப் (ஒட்டிக்கொண்டிருந்ததைப்) போன்ற நெடிய செதில்களையுமுடைய
விளாமரத்திலிருந்து
3. ஆட்டு ஒழி பந்தின் கோட்டு
மூக்கு இறுபு - ஆட்டம் முடிந்த பந்து போலக் கிளையில் ஒட்டிய காம்பு அற்றுப்போய்
4. கம்பலத்து அன்ன பைம் பயிர்
தாஅம் - கம்பலத்தை விரித்தாற்போன்ற பசிய பயிர்மீது பரந்துகிடக்கும்
5. வெள்ளில் வல்சி வேற்று நாட்டு
ஆரிடை - விளாம்பழங்களையே உணவாகக் கொண்ட வேற்று நாட்டு அரிய வழியில்
6. சேறும் நாம் என சொல்ல சேயிழை
- செல்வேன் நான் என்று தலைவன் சொல்ல, அழகிய அணிகலன்களை அணிந்தவளே!
7. நன்று என புரிந்தோய் நன்று
செய்தனையே - நல்லது என்று ஏற்றுக்கொண்டாய்! நல்லதையே செய்தாய்!
8. செயல்படு மனத்தர் செய்பொருட்கு
- செயல்புரிவதையே நினைத்தவராய் ஈட்டுதற்குரிய பொருளுக்காகப்
9. அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே - பிரிந்து செல்வர் ஆடவர்; அவ்வாறு செல்லவைப்பது
அந்தப் பொருளின் பண்பாகும்
கொண்டு கூட்டு: சேறும் நாம் எனச் சொல்ல, புரிந்தோய்;
நன்று செய்தனை; ஆடவர் மனத்தராகலின் அகல்வர், அது அதன் பண்பு என மாறிக் கூட்டுக.
உரை:
அழகிய அணிகலன்களை அணிந்தவளே! ”நிலம் பிளவுபடுமாறு விளாமரத்தின் வேர்கள் ஆழப்
பதிந்திருக்கும். அந்த மரத்தின் பெரிய கிளைகளில் உள்ள பட்டைகள் கரடுமுரடாக,
உடும்புகள் ஒட்டியிருப்பதைப் போலக் காட்சியளிக்கும். அந்த மரத்திலிருந்து
விளாம்பழங்கள், சிறுவர்கள் விளையாடிவிட்டுப் போட்ட பந்துகளைப் போல, காம்பு
முறிந்து, கீழே விழுந்து, காண்பதற்குக் கம்பளத்தை விரித்தாற்போன்று இருக்கும்
பசுமையான புல்வெளியில் பரவி இருக்கும்.
அத்தகைய விளாம்பழங்களை உணவாகவுடைய மக்களைக் கொண்ட அயல் நாட்டிற்குச் செல்லுதற்கு
அரிய வழியில் சென்று, நான் பொருள்தேடப் போகிறேன்.” என்று உன் கணவர் உன்னிடம்
கூறினார். அதைக் கேட்ட நீ, உன் பிரிவுத் துயரத்தைக் கருதாமால், பொருள் தேடச்
செல்வது ஆண்களின் இயல்பு என்பதை உணர்ந்து அவர் செல்வதற்கு நீ சம்மதித்தாய். நீ ஒரு நல்ல செயலைச் செய்தாய்.
சிறப்புக் குறிப்பு:
”வினையே ஆடவர்க்கு உயிரே” என்று பாலைபாடிய
பெருங்கடுங்கோ, குறுந்தொகைப் பாடல் 135ல் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
[1]. இப்பாடலைப் பாடியவர் பெயர் குன்றூர் கிழார் மகனார் சாத்தனார் என்று ஒளவை சு.
துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
என்று பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார். புலியூர்க் கேசிகன்
இப்பாடலின் ஆசிரியர் கணக்காயனார் என்று கூறுகிறார். இப்பாடலின் ஆசிரியர் யார்
என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Comments
Post a Comment