98. என் நார் இல் நெஞ்சே!
98. என் நார் இல் நெஞ்சே!
பாடியவர்: உக்கிரப்
பெருவழுதி
இவன் பாண்டிய மன்னர்களில் ஒருவன். கானப்பேரெயில்
என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சி செய்த வேங்கைமார்பன் என்ற அரசனை
வென்றதால், இவன் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
என்று அழைக்கப்பட்டான். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்,
சேரமான் மாரி
வெண்கோவும் இவனுடன் நட்புடையோராக விளங்கினர். இவன் கடைச்சங்கத்தை நிறுவியதாகவும்,
அகநானூற்றைத்
தொகுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இவனுடைய
அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாகவும் சில
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவன் இயற்றியதாக நற்றிணையில் ஒரு பாடலும்
(98), அகநானூற்றில் ஒரு பாடலும் (26) சங்க இலக்கியத்தில்
இடம்பெற்றுள்ளன.
திணை: குறிஞ்சி
துறை: இரவுக்குறி
வந்து ஒழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது.
துறை
விளக்கம்: இரவில் தலைவியைச்
சந்திக்க வரும் தலைவனைத் தோழி, இனி இரவில் வராமல் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியது.
இப்பாடல், தலைவி
கூற்றைத் தன் கூற்றாகத் தோழி கொண்டு கூறியது. தலைவி தன் வேட்கையைத் தலைவனிடம்
நேரடியாகக் கூறும் உரிமை இல்லாதவள் என்பதைக் “தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை” (தொல்காப்பியம், களவியல் 28) என்னும் நூற்பா
உணர்த்துகிறது. அதன் அடிப்படையில், தலைவியின் உள்ளக்கருத்தைத் தோழி தன் கூற்றாக
எடுத்துக்கொண்டு, தலைவியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தோழி, இரவில் வரும் தலைவனை
வற்புறுத்துகிறாள்.
பாடலின் பின்னணி:
தலைவன் இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்தித்து
வருகிறான். அவ்வாறு இரவில் அவன் வருவது காவலர்கள் அறியாமல் வர வேண்டிய ஆபத்தான வழியாகவும்,
தலைவிக்கும் தோழிக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, தோழி தலைவனிடம்,
இனி
இரவில் வந்து தலைவியைச் சந்திப்பதைத் தவிர்த்து, முறைப்படி அவளை மணந்துகொள்ள வேண்டும்
என்று வலியுறுத்துகிறாள்.
எய்ம்
முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென 5
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே 10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே
அருஞ்சொற்பொருள்:
1.
எய்ம் முள்- முள்ளம்பன்றியின் முள்ளைப் போன்ற; பரூஉ - அடர்த்தியான; எருத்து – பிடரி,
கழுத்து
2.
செய்ம்ம் மேவல் – வயலில் சென்று மேயும்
விருப்பமுள்ள; சிறு கட் பன்றி – சிறிய கண்களையுடைய பன்றி
3.
ஓங்கு - உயர்ந்த; வியன் - அகன்ற; புனம்
– தினைப்புனம்; படீஇயர் – சென்று மேயும் பொருட்டு, உண்பதற்காகச் செல்லும்; வீங்கு
– பெரிய. பெரிதாக அமைந்த
4.
நூழை – பொறியின் நுழைவாயில்; தாழாது –
விரைந்து, தாமதிக்காமல்
5.
பாங்கர் பக்கத்து – அருகில், பக்கத்தில்
6.
பிறக்கே - பின்னால்; பெயர்ந்து – விலகி
7.
அளை - குகை; பள்ளி – தங்கும் அல்லது
உறங்கும் இடம்; வதியும் – வசிக்கும், தங்கியிருக்கும்; நாடன் – நாட்டையுடையவன்,
தலைவன்
8.
எந்தை – எம் தந்தை (தலைவியின் தந்தை);
ஓம்பும் – காக்கும், பாதுகாக்கும்; கடியுடை – காவலுடைய; வியல் நகர் – அகன்ற பெரிய
மாளிகை
9.
துஞ்சா – உறங்காத; இகழ் பதம் –
சோர்ந்துபோகும் சமயம்
10. வரூஉம்
– வருகின்ற
11. வைகலு
- நாள்தோறும்; பொருந்தல் - சேர்ந்து இருத்தல்; ஒல்லா – இயலாத
12. கண்ணொடு வாரா -
கண்களும் திரும்பி வராத; நார் - அன்பு
பதவுரை:
1. எய்ம் முள்
அன்ன பரூஉ மயிர் எருத்தின் - முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக்
கொண்ட,
2. செய்ம்ம்
மேவல் சிறு கண் பன்றி - வயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது,
3. ஓங்கு மலை
வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி - உயர்ந்த மலையிலுள்ள அகன்ற தினைப்புனத்தில் சென்று
மேயும் பொருட்டு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின்,
4. நூழை நுழையும்
பொழுதில் தாழாது – நுழைவாயிலில் நுழையும்பொழுது, விரைவாக
5. பாங்கர்
பக்கத்து பல்லி பட்டு என – அருகில் பக்கத்திலிருக்கும் பல்லி ஒலியெழுப்ப,
6. மெல்லமெல்ல
பிறக்கே பெயர்ந்து தன் - மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து, தன்
7. கல் அளை
பள்ளி வதியும் நாடன் - கல் குகையான தங்குமிடத்தில் வசிக்கும் மலைநாட்டுத் தலைவனே,
8. எந்தை ஓம்பும்
கடி உடை வியல் நகர் - எமது தந்தை பேணும் காவலுடைய அகன்ற மாளிகையின்,
9. துஞ்சா காவலர்
இகழ் பதம் நோக்கி - தூங்காமல் காக்கும் காவலர் சோர்ந்துபோகும் நேரம் நோக்கி,
10. இரவின் வரூஉம்
அதனினும் கொடிதே - இரவில் நீ வந்து என்னைச் சந்தித்துச் செல்வதைக் காட்டிலும் கொடுமையானது,
11. வைகலும்
பொருந்தல் ஒல்லா - நாள்தோறும் நீ வரும் வழியின் கொடுமையை நினைத்து உறங்க முடியாத
12. கண்ணொடு
வாரா என் நார் இல் நெஞ்சே - என் கண்களும், உன்னோடு சென்று திரும்பி வராத என் அன்பற்ற
நெஞ்சமும்
கொண்டு கூட்டு: எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் செய்யம்
மேவல் சிறு கட் பன்றி, ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில்,
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, தாழாது மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் கல்
அளைப் பள்ளி வதியும் நாடன், எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர் துஞ்சாக் காவலர் இகழ்
பதம் நோக்கி இரவின் வரூஉம் அதனினும், வைகலும் பொருந்தல் ஒல்லாக் கண்ணொடு வாரா என் நார்
இல் நெஞ்சே கொடிதே என்று கூட்டுக.
உரை:
முள்ளம்பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த
மயிரை உடைய பிடரியினைக் கொண்ட, வயலில் மேய விரும்பும் சிறிய கண்களை உடைய பன்றி,
உயர்ந்த மலையில் உள்ள அகன்ற தினைப்புனத்தில் மேயச் சென்றது. அப்போது, விலங்குகளைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த
பெரிய பொறியின் நுழைவாயிலில் அது நுழையும்போது, அருகில் இருந்த பல்லி திடீரென்று
ஒலி எழுப்பியது. அதைக் கேட்ட பன்றி அச்சமடைந்து, மெல்ல மெல்லப் பின்னால் சென்று,
தன் குகைக்குள் தங்கியது. இத்தகைய ஆபத்துகள் நிறைந்த வழியைக் கடந்து தலைவன் இரவில்
என்னைச் சந்திக்க வருகிறான். என் தந்தையின்
காவல் மிகுந்த பெரிய மாளிகையில் இரவு முழுவதும் விழித்திருந்து காவற்காவலர்கள்
காவல் காக்கின்றனர். காவற்காவலர்கள் சிறிது அயரும்பொழுது தலைவன் இரவில் வருவதைவிட, நாள்தோறும் தூங்க முடியாத என் கண்களும்,
தலைவனிடத்தில் சென்று மீண்டும் என்னிடம் வராத
என் அன்பு இல்லாத நெஞ்சமும் கொடுமையானவை.
சிறப்புக் குறிப்பு:
உள்ளுறை: பன்றி
பொறியின் நுழைவாயிலில் நுழையும்போது பல்லியின் ஒலி கேட்டு அஞ்சி, மெல்லப் பின்னால்
சென்று தன் குகைக்குள் தங்குவதுபோல, தலைவனும் இரவில் தலைவியின் வீட்டை அணுகும்போது
காவல் மிகுந்திருப்பதை உணர்ந்து, ஆபத்தைத் தவிர்த்து மீண்டும் தன் இடத்திற்குத்
திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய ஆபத்தான இரவுவரவைத் தவிர்த்து,
தலைவன் முறைப்படி தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதே தோழியின் கருத்தாகும்.
Comments
Post a Comment