97. உழவர் மகள் கொடியவள்
97. உழவர் மகள் கொடியவள்
பாடியவர்:
மாறன் வழுதி
இவருடைய
இயற்பெயர் மாறன். வழுதி என்பது இவர் பாண்டிய மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்
என்பதைக் குறிக்கிறது. இவர் இயற்றியதாக நற்றிணையில் இரண்டு பாடல்களும் (97, 301)
குறுந்தொகையில் ஒரு பாடலும் (270) சங்க இலக்கியத்தில் உள்ளன.
திணை: முல்லை
துறை: பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு
உரைத்தது
துறை
விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகவோ வேறு காரணத்திற்காகவோ தலைவியைப் பிரிந்து
சென்றிருக்கிறான். அவன் குறிப்பிட்ட பருவத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச்
சென்றிருக்கிறான். அந்தப் பருவம் வந்துவிட்டது. ஆனால் தலைவன் இன்னும் திரும்பி
வரவில்லை. அதனால், பருவத்தின் வருகையை உணர்த்தும் இயற்கைக் காட்சிகள் ஒவ்வொன்றும்
தலைவியின் பிரிவுத் துயரத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன. அந்தத் துயரத்தைத் தலைவி
தன் தோழியிடம் கூறுகிறாள்.
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் வருவதாகக் கூறிய
பருவம் வந்துவிட்டது. முல்லைத் திணைக்கு உரிய இயற்கைக் காட்சிகள் இப்போது தலைவியின்
கண்முன் தோன்றுகின்றன. குயில் கூவுகிறது; தெளிந்த நீருடன் ஆறு ஓடுகிறது; குருக்கத்தி,
பித்திகை போன்ற மலர்கள் மலர்ந்துள்ளன. இப்பருவக் காட்சிகள் தலைவனின் வருகையைத் தலைவிக்கு
நினைவூட்டுகின்றன. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால், தலைவிக்குக் குயிலின் கூவல்
துன்பத்தைத் தருகிறது. அதைவிட, ஆற்றின் தெளிந்த நீரோட்டம் மிகுந்த துன்பத்தைத் தருகிறது.
ஆற்றின் நீரோட்டத்தைவிட, குருக்கத்தி, பித்திகை ஆகிய மலர்களை விற்பதற்காகச் சுற்றித்திரியும்
இளம் பெண், “கொள்ளீரோ?” என்று கூவிக்கொண்டு வருவது, தலைவியின் மனத்தில் தலைவனைப் பற்றிய
நினைவை மேலும் தூண்டி, மிகுந்த துன்பத்தை அளிப்பதாகத் தோன்றுகிறது. எனவே, “குயிலின்
குரல் கொடிது; அதனினும் ஆறு கொடிது; ஆனால், அதைவிட இந்தப் பூவிற்கும் பெண் கொடியவள்”
என்று தலைவி கூறுகிறாள். இத்தகைய இயற்கைக் காட்சிகளைத் தனது உள்ளநிலையோடு இணைத்துக்
காட்டுவது இப்பாடலின் சிறப்பாகும்.
அழுந்து படு விழுப் புண் வழும்பு
வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு
எறிந்தாங்கு
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே
அதனினும் கொடியள் தானே மதனின் 5
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே
அருஞ்சொற்பொருள்:
1.
அழுந்து படுதல் – ஆழமாகப் படுதல்;
விழுப் புண் - பெரிய புண்; வழும்பு – நிணம்(தசை); வாய்புலரா – புண்ணின் வாய்
காயாமல்
2.
எவ்வம் – துன்பம்; எஃகு - வேல்
3.
பிரிவில – பிரியாமல்; புலம்பி - வருந்தி;
நுவலும் – கூவும்
4.
தேறு நீர் – தெளிந்த நீர்; கெழீஇய -
பெருகிய; நனி – மிகவும்
5.
கொடியள் – கொடுமை செய்பவள்; மதன் – அழகு
6.
துய்த்தலை – பஞ்சுபோன்ற மென்மையான
மேற்பகுதி; இதழ - இதழையுடைய; பைங்குருக்கத்தி – பசுமையான குருக்கத்தி மலர்
7.
பித்திகை – பித்திகை மலர்; விரவுதல் -
கலத்தல்
8.
வட்டி – கிண்ணம்(கூடை); வட்டியவள் –
வட்டியை உடையவள்; திரிதரும் – சுற்றிவரும்
9.
தண்டலை – பூந்தோட்டம்; தனி மட மகள் –
ஒப்பற்ற இளம்பெண்
பதவுரை:
1. அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய்
புலரா - ஆழமாகப் படிந்த பெரிய புண்ணின்
வாய் நிணத்துடன் காயாமல் இருக்க,
2. எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு - துன்பம் நிறைந்த நெஞ்சில் வேல் பாய்ச்சியதுபோல
3. பிரிவில புலம்பி நுவலும் குயிலினும் -
துணையை விட்டுப் பிரியாமல் இருந்தாலும் துயரத்தோடு கூவும் குயிலைவிட
4. தேறுநீர் கெழீஇய யாறு நனி கொடிதே -
தெளிந்த நீர் பெருகி ஓடும் ஆறு மிகவும் கொடியதாக இருக்கிறது.
5. அதனினும் கொடியள் தானே மதனின் - அந்த
ஆற்றைவிடவும் கொடியவள் அவள், வலிமையற்ற
6. துய்த்தலை இதழ் பைங்குருக்கத்தியொடு – பஞ்சு
போன்ற மென்மையான மேற்பகுதியையுடைய இதழ்களையுடைய பசுமையான குருக்கத்தி மலர்களுடன்
7. பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என -
பித்திகை மலர்களைக் கலந்து, “இந்த மலர்களை வாங்குவீர்களா?” என்று கூவி,
8. வண்டு சூழ் வட்டியள் திரிதரும் -
வண்டுகள் மொய்க்கும் மலர் வட்டியைக் கையில் ஏந்திக்கொண்டு சுற்றித் திரியும்
9. தண்டலை உழவர் தனி மடமகளே - பூந்தோட்டத்து உழவரின் ஒப்பற்ற இளம்பெண்
கொண்டு கூட்டு:
தண்டலை உழவர் தனி
மடமகள் வண்டு சூழ் வட்டியள் திரிதரும் “மதனின் துய்த்தலை இதழ் பைங்குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?” என அதனினும் கொடியள் தானே; தேறு நீர் கெழீஇய யாறு நனி
கொடிதே; பிரிவில புலம்பி நுவலும் குயிலினும் அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு என்று கூட்டுக.
உரை:
தோழி! தலைவன்
வருவதாகக் கூறிய பருவம் வந்துவிட்டது. ஆனால் அவன் இன்னும் வரவில்லை. அதனால் என்
மனம் பிரிவுத் துயரால் மிகவும் வேதனைப்படுகிறது. தன் துணையைவிட்டுப் பிரியாதிருப்பினும் துயரத்தோடு
கூவும் குயிலின் குரல், ஏற்கெனவே ஆழமாக ஏற்பட்ட புண்ணின் மீது மீண்டும் வேல்
பாய்ச்சியதுபோல் என் நெஞ்சைத் துன்புறுத்துகிறது. அந்தக் குயிலைவிடவும் இந்தப்
பருவத்தில் தெளிந்த நீர் பெருகி ஓடும் ஆறு மிகவும் கொடியதாக உள்ளது. ஏனெனில் அந்த
ஆற்றின் பெருக்கையும் ஓட்டத்தையும் காணும்போதெல்லாம் தலைவன் வரவேண்டிய பருவம்
வந்துவிட்டது என்ற நினைவு எழுகிறது.
ஆனால், அந்த ஆற்றைவிடவும் கொடியவள்
அந்தப் பூந்தோட்டத்தில் வாழும் உழவரின் இளம்பெண். அவள் வண்டுகள் மொய்க்கும், அழகிய
குருக்கத்தி மலர்களையும் பித்திகை மலர்களையும் வட்டில் சுமந்துகொண்டு, “மலர்களை வாங்குவீர்களா?” என்று கூவிக்கொண்டு சுற்றித்
திரிகிறாள். அவள் கூறும் அந்தச் சொற்கள் என் பிரிவுத் துயரத்தை மேலும்
அதிகப்படுத்துகின்றன. ஏனெனில், அவளுடைய மலர்களும் அவற்றை விற்பதற்காக அவள்
எழுப்பும் குரலும், தலைவன் திரும்பி வர வேண்டிய பருவம் வந்துவிட்டது என்பதை
மீண்டும் மீண்டும் என் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. எனவே, என்னைச் சுற்றியுள்ள
குயில், ஆறு, மலர்கள், மலர் விற்கும் இளம்பெண் என அனைத்துமே எனக்குக் கொடியவையாகத்
தோன்றுகின்றன.
Comments
Post a Comment