94. என்ன மகன்கொல் தோழி?

 

94. என்ன மகன்கொல் தோழி?

 

பாடியவர்: இளந்திரையனார்

இவர் சங்ககாலப் புலவரும் அரசருமாவார். தொண்டைமான் இளந்திரையன் என்பவரும் இளந்திரையனார் என்பவரும் ஒருவரே என அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆட்சி செய்தவர். பத்துப்பாட்டில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்  இயற்றிய பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவனாகவும் இவர் விளங்கினார்.

இளந்திரையனார் சிறந்த புலவராகவும் விளங்கினார். இவரது பாடல்கள் நற்றிணையில் 94, 99, 106 ஆகிய மூன்று பாடல்களாகவும், புறநானூற்றில் 185-ஆம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன.

இவரது பிறப்பைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில் ஒரு மரபுக்கதை கூறப்படுகிறது. கடல் அலைகளால் கரைக்குக் கொண்டு வரப்பட்டவன் என்பதால் “திரையன்” என்றும், தொண்டைக் கொடியுடன் வந்ததால் “தொண்டைமான்” என்றும் பெயர் பெற்றதாகப் பழைய உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.

பெரும்பாணாற்றுப்படை இளந்திரையனின் வீரம், செங்கோன்மை, கொடை, விருந்தோம்பல் ஆகிய சிறப்புகளைப் புகழ்ந்து கூறுகிறது. புலவர்களையும் இரவலர்களையும் ஆதரித்து அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை வழங்கிய வள்ளலாகவும் இவர் சித்தரிக்கப்படுகிறார்.

திணை: நெய்தல்

துறை: தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி தோழிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

துறை விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்திக்க வந்திருக்கிறான்; ஆனால் அவன் சிறைப்புறமாக, அதாவது தலைவியும் தோழியும் பேசுவதைக் கேட்கும் அளவுக்கு அருகில் மறைந்து நிற்கிறான். தலைவி அவன் கேட்கும்படி தோழியிடம் பேசுகிறாள். காதல் நோயால் தான் வருந்தியபோது, தலைவன் வந்து அன்பான சொற்களால் தன்னை ஆற்றவில்லை என்று தலைவி வருத்தப்படுகிறாள். ஆனால், தன் பெண்மை நாணத்தால் தன் காதல் வேட்கையை வெளிப்படுத்தாமல் பொறுத்துக்கொண்டதாகவும் கூறுகிறாள். இவ்வாறு தலைவியின் மறைமுகமான குற்றச்சாட்டு தலைவனுக்குச் சென்று சேரும் வகையில் அமைந்துள்ளது.

பாடலின் பின்னணி:

தலைவனும் தலைவியும் காதலில் ஈடுபட்டுள்ளனர். தலைவனுடைய பிரிவாலும் அவனைச் சந்திக்க இயலாத நிலையாலும் தலைவி காமநோயால் வருந்துகிறாள். அவளுடைய மனமும் உடலும் தளர்கின்றன. இத்தகைய நிலையில், தலைவன் அன்புடன் வந்து, தன் அன்பை வெளிப்படுத்தித் தலைவியின் துயரத்தைப் போக்குவது ஆண்மகனுக்குரிய இயல்பாகும் என்று தலைவி கருதுகிறாள். ஆனால் தலைவன் அவ்வாறு செய்யவில்லை. தலைவி தன் பெண்மை நாணத்தால் தன் காதல் வேட்கையை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டாள். தன் உள்ளத்தில் தலைவன்மீது கொண்டுள்ள ஆர்வத்தையும், அவன் மார்பைத் தழுவ விரும்பி வருந்துவதையும் அவன் அறியவில்லை என்று தலைவி தோழியிடம் வருத்தத்துடன் கூறுகிறாள். உண்மையில், தலைவன் அருகிலேயே இருந்து அவள் கூறுவதைக் கேட்கிறான். எனவே, தலைவி அவனை நேரடியாகக் குறை கூறாமல், “என்ன மகன்கொல்?” என்று தோழியிடம் கேட்பதுபோல் கூறி, தன் உள்ளக்குறையை அவனுக்கு உணர்த்துகிறாள்.

 

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப குவி இணர்ப்          5
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல் தோழி தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்குறுநரை அறியாதோனே

 

அருஞ்சொற்பொருள்:

1.   நோய் – காதல் நோய்; அலைக் கலங்கிய -அலைத்தலால் கலக்கமுற்ற ; மதன் - வலிமை; அழி பொழுதில் – அழியும் பொழுதில்

2.   காமம் - நிறைந்த அன்பு; செப்பல் – சொல்லுதல்

3.   தட்ப - தடுத்துக்கொண்டு; நுண்ணிதின் – நுட்பமாக

4.   கை வல் கம்மியன் – கைத்தொழிலில் வல்ல பொற்கொல்லன்; கவின் – அழகு; கழாஅ - கழுவி

5.   மண்ணா – கழுவாத; பசு முத்து – புதிய முத்து

6.   புலவு நீர் – புலால் நாற்றமுள்ள நீர்; சேர்ப்பன் – நெய்தல்நிலத் தலைவன் ஆர்வம் – அன்பு

7.   தன்வயின் – தன்னிடம்

8.   ஆர்வம் – அன்பு

9.   அணங்குறுநர் – வருத்தமுற்றவர்

பதவுரை:

1.   நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் - காம நோய் அலைத்தலால் கலங்கிப்போய் வலிமை அழிந்த வேளையில்

2.   காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் - அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;

3.   யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி - நானோ எனது பெண்மையுணர்வு தடுக்க அந்நோயை வெளிப்படுத்தாதவாறு தாங்குகிறேன்;

4.   கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ - கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவி

5.   மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர் - தூய்மைசெய்யாத புதிய முத்தைப்போல குவிந்த கொத்துக்களையுடைய

6.   புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் - புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற புலால் நாற்றமுள்ள கடற்கரைத் தலைவனாகிய அவன்

7.   என்ன மகன்-கொல் தோழி தன்வயின் - என்னவிதமான ஆண்மகனோ? தோழி! தன்பால்

8.   ஆர்வம் உடையர் ஆகி - பேரன்புடையவராகி,

9.   மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே - தன் மார்பைத் தழுவும் வேட்கையால் துன்பப்படுவோரை அறியாத அவன்

கொண்டு கூட்டு: நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில், காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்; யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி, கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன், தன் வயின் ஆர்வம் உடையர் ஆகி மார்பு அணங்குறுநரை அறியாதோனே; என்ன மகன்கொல், தோழி என்று கூட்டுக.

உரை:

தோழி! காதல் நோய் என்னை அலைக்கழித்து, என் உடல் வலிமையும் மன வலிமையும் குறைந்து போகும் வேளையில், தன் காதலை வெளிப்படுத்தி அன்பான சொற்களால் என்னை ஆற்றுவது ஓர் ஆண்மகனுக்குப் பொருத்தமான செயலாகும். ஆனால், நான் என் பெண்மை நாணத்தால் என் காதல் வேட்கையை வெளிக்காட்டாமல், மிகவும் அடக்கமாகத் தாங்கிக்கொண்டிருக்கிறேன். இது, கைத்தொழிலில் வல்ல கம்மியனால் அழகுபெறும்படி கழுவி மெருகூட்டப்படாத புதிய முத்து தன் இயற்கையான ஒளியை வெளிப்படுத்தாமல் இருப்பதைப் போன்றது.

 

குவிந்த மலர்க்கொத்துகளையுடைய புன்னை மலர்களில் கடல்நீர் தெறித்து அவை அரும்பும் கடற்கரைக்குத் தலைவனான அவன், அவன்மீது காதல் வேட்கை கொண்டிருந்து, அவன் மார்பைத் தழுவ விரும்பி வருந்துகின்ற என்னுடைய நிலையை அறியாதவனாக இருக்கிறானே! அவன் என்ன ஆண்மகனோ!

சிறப்புக் குறிப்பு:

உள்ளுறை: புன்னையில் தோன்றும் புலால் நாற்றத்தை அதன் மலர்கள் அகற்றுவதுபோல, தலைவன் தலைவியைத் திருமணம் கொள்வதன் மூலம் அவனுடைய குற்றம் அல்லது குறை நீங்கும் என்ற கருத்து இப்பாடலில் உள்ள உள்ளுறை.

 


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே