93. பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!

 

93. பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!

பாடியவர்: மலையனார்

இவர் இயற்றியதாகச் சங்க இலக்கியத்தில் இப்பாடல் ஒன்று மட்டுமே காணப்படுகிறது.

திணை: குறிஞ்சி

துறை: வரைவு கடாயது

துறை விளக்கம்: தலைவியின் உடல் மெலிவையும் பசலையையும் சுட்டிக்காட்டி, தலைவனை விரைவில் திருமணம் செய்துகொள்ளத் தூண்டும் தோழியின் கூற்று.

பாடலின் பின்னணி:

தலைவனும் தலைவியும் காதலித்து வந்தனர். இது களவுக் காலமாகும். தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதில் காலம் தாழ்த்துகிறான். தலைவனுடைய மலைநாடு மிகுந்த வளம் உடையது. அங்கு தேன்கூடுகள் தொங்குகின்றன; பெரிய பழங்கள் குலைகளாகத் தொங்குகின்றன; மலையிலிருந்து வெள்ளை அருவிகள் மாலைபோல இறங்குகின்றன; பலவகையான தானியங்கள் நிலத்தில் நிறைந்துள்ளன.

இத்தகைய வளம் மிக்க மலைநாட்டை உடைய தலைவனிடம் தோழி, “உன்னைப் பிரிந்திருக்கும் தலைவி பெரிதும் வருந்துகிறாள். அவளுடைய உடல் மெலிந்து, இயற்கையான நிறம் மாறிவிட்டது; உடல் மெலிவால் அணிகலன்கள் தாழ்ந்து காணப்படுகின்றன. நீ விரைந்து வந்து திருமணம் செய்துகொள்ளாவிட்டால், திருமணத்தை அறிவிக்கும் முரசின் ஒலியைக் கேட்பதற்கு முன்பே அவள் உயிரிழந்துவிடுவது அரிதாகாது” என்று கூறுகிறாள்.

பிரசம் தூங்க பெரும் பழம் துணர
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம்புஉக நாளும்
மல்லற்று அம்ம இம் மலை கெழு வெற்பு எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட              5
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்         10
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே

அருஞ்சொற்பொருள்:

  1. பிரசம் – தேன்கூடு; தூங்க – தொங்க; பெரும் பழம் – பெரிய பழம்; துணர் – குலை, கொத்து.
  2. வரை – மலை; வெள் அருவி – வெள்ளை நிற அருவி; மாலையின் – மாலைபோல; இழிதர – கீழே இறங்க.
  3. கூலம் – நெல், தினை முதலிய தானிய வகைகள்; புலம்புஉக – நிலத்தில் பரவுமாறு.
  4. மல் அற்று – வளம் குறையாத; அம்ம – அசைநிலை இடைச்சொல்; கெழு – பொருந்திய,வளர்ந்த; வெற்பு – மலை.
  5. பிரிந்தோர் – பிரிந்து சென்றோர்; இரங்கும் – வருந்தும்; கல் – மலை; நாடு – நாடு.
  6. செல்கம் – செல்வோம்,செல்வதாக; எழுமோ – எழுவாயாக; ஊழி – வாழ்நாள்,காலம்.
  7. மருங்கு – பக்கம்; திருந்து இழை – சிறப்பாக அமைந்த அணிகலன்; பணைத் தோள் – மூங்கில் போன்ற பருத்த தோள்.
  8. நல்கூர் நுசுப்பு – மெலிந்த இடை; மெல் இயல் – மெல்லிய இயல்பு; குறுமகள் – இளம்பெண்.
  9. பூண் – அணிகலன்; தாழ் – தாழ்ந்து நிற்க; ஆகம் – மார்பு; நாண் அட – நாணம் வருமாறு, நாணம் அழியுமாறு
  10. பழங்கண் – துன்பம்; மாமை – மாந்தளிர் நிறம்; தழங்கு குரல் – முழங்கும் குரல்.
  11. மயிர்க்கண் முரசு – மயிர் கொண்ட தோலால் போர்த்தப்பட்ட முரசு.
  12. உயிர்க்குறி – உயிருடன் இருப்பதற்கான அடையாளம்; எதிர்ப்பு – எதிர்நோக்குதல்; அருங்குரைத்து – அரிதாகும்.

பதவுரை:

  1. பிரசம் தூங்க பெரும் பழம் துணர – தேன்கூடுகள் தொங்கவும், பெரிய பழங்கள் குலைகளாகத் தொங்கவும்,
  2. வரை வெள் அருவி மாலையின் இழிதர – மலையிலுள்ள வெள்ளை அருவிகள் மாலைபோல கீழே இறங்கவும்,
  3. கூலம் எல்லாம் புலம்புஉக நாளும் – பலவகையான தானியங்கள் அனைத்தும் நிலத்தில் பரவுமாறு நாள்தோறும் விளங்கவும்,
  4. மல் அற்று அம்ம இம் மலை கெழு வெற்பு என – வளம் குறையாத இந்த மலைநாடு என்று,
  5. பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட – உன்னைப் பிரிந்து சென்றோர் நினைத்து வருந்தும் பெரிய மலைநாட்டை உடையவனே!
  6. செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி – நாங்கள் செல்கிறோம்; நீ எழுவாயாக; உன் வாழ்நாள் சிறக்கட்டும்.
  7. மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள் – பக்கங்களை மறைக்கும் சிறப்பாக அமைந்த அணிகலன்களால் விளங்கும் மூங்கில் போன்ற தோள்களையும்,
  8. நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள் – மெலிந்த இடையையும் மெல்லிய இயல்பையும் உடைய இளம்பெண்ணின்,
  9. பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய – உடல் மெலிவால் அணிகலன்கள் தாழ்ந்து காணப்படும் மார்பும், நாணம் வருத்திய,
  10. பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் – துன்பத்தால் நிறம் மாறிய உடல் நிறத்தையும் உடையவளின் நிலையை எண்ணி, முழங்கும் குரலையுடைய
  11. மயிர்க்கண் முரசினோரும் முன் – மயிர் கொண்ட தோலால் போர்த்தப்பட்ட முரசின் ஒலி எழுவதற்கு முன்பே,
  12. உயிர்க்குறி எதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே – அவள் உயிருடன் இருப்பதைக் காண்பது அரிதாகிவிடும்.

கொண்டு கூட்டு: பெருங் கல் நாட, நின் ஊழி சிறக்க, செல்கம் எழுமோ? பிரிந்தோர் இரங்கும், மல் அற்று அம்ம இம் மலை கெழு வெற்பு என, பிரசம் தூங்க, பெரும் பழம் துணர, வரை வெள் அருவி மாலையின் இழிதர, கூலம் எல்லாம் நாளும் புலம்புஉக, மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள், நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள், பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய பழங்கண் மாமையும் உடைய, தழங்கு குரல் மயிர்க்கண் முரசினோரும் முன் உயிர்க்குறி எதிர்ப்பைப் பெறல்

 

உரை:

தேன்கூடுகள் தொங்குகின்றன; பெரிய பழங்கள் குலைகளாகத் தொங்குகின்றன; வெள்ளை நிற அருவிகள் மாலைபோல மலையிலிருந்து கீழே இறங்குகின்றன; நெல், தினை முதலிய பலவகையான தானியங்கள் நிலத்தில் நிறைந்துள்ளன. இவ்வாறு வளம் குறையாத மலைநாட்டை உடைய தலைவனே! உன்னைப் பிரிந்து சென்றவர்கள் உன் நாட்டை நினைத்து வருந்துவர்.

நாங்கள் இங்கிருந்து செல்கிறோம்; நீயும் எழுந்து வருவாயாக; உன் வாழ்நாள் சிறக்கட்டும். ஆனால், உன்னைப் பிரிந்திருக்கும் தலைவி மிகவும் வருந்துகிறாள். அவளுடைய உடல் மெலிந்ததால் அணிகலன்கள் தாழ்ந்து காணப்படுகின்றன; அவளுடைய இயற்கையான உடல் நிறமும் துன்பத்தால் மாறிவிட்டது. இத்தகைய நிலையில் இருக்கும் அவள், நீ வந்து திருமணம் செய்துகொள்வதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நீ மேலும் காலம் தாழ்த்தினால், திருமணத்தை அறிவிக்கும் முரசின் ஒலி எழுவதற்கு முன்பே அவள் உயிருடன் இருப்பதைக் காண்பது அரிதாகிவிடும்.

 


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே