89. வாடை இன்னும் வருமே, தோழி!
89. வாடை இன்னும் வருமே, தோழி!
பாடியவர்:
இளம்புல்லூர்க் காவிதி
இவருடைய
இயற்பெயர் தெரியவில்லை. இவர் சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்த இளம்புல்லூர் என்னும் ஊரைச் சார்ந்தவர். காவிதி என்பது நல்லொழுக்கங்களாலும்
நற்செய்கைகளாலும் சிறந்து விளங்கிய நன்மக்களுக்கு அரசர்களால் வழங்கப்படும் பட்டம்.
இவர் அத்தகைய பட்டம் பெற்றவர். இவர் இயற்றியதாக இப்பாடல் ஒன்று மட்டுமே சங்க
இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை
துறை: பொருள் முற்றி மறுத்தந்தான் எனக் கேட்ட
தோழி தலைவிக்கு உரைத்தது
துறை
விளக்கம்: தலைவன் பொருள்
தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றான். “அவன் பொருள் தேடும் செயலை
முடித்துவிட்டு, திரும்பி வந்துவிட்டான்” என்று தோழி கேள்விப்படுகிறாள். அந்தச்
செய்தியைத் தலைவியிடம் தெரிவிக்கிறாள். ஆனால் தலைவன் இன்னும் தலைவியிடம் வந்து
சேரவில்லை. அதனால் தலைவி பிரிவுத் துயரத்தில் இருக்கிறாள். மழைக்காலம் முடிந்து
முன்பனிப் பருவமும், கடுமையான வாடைக் காற்றும், துன்பம் தரும் மாலைப்பொழுதும்
வந்துவிட்ட நிலையில், தலைவன் இன்னும் வராததை எண்ணித் தோழி வருந்துகிறாள்.
பாடலின் பின்னணி:
தலைவன் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து
சென்றான். “பொருள் தேடும் வினையை முடித்துவிட்டு விரைவில் திரும்புவேன்” என்று
அவன் கூறிச் சென்றிருக்கலாம். இப்போது அவன் பொருளீட்டும் செயலை முடித்துவிட்டு ஊர்
திரும்பிய செய்தி தோழிக்குக் கிடைக்கிறது. ஆனால், தலைவன் இன்னும் தலைவியைச்
சந்திக்க வரவில்லை. இதற்கிடையில் பருவமும் மாறிவிட்டது. பெருமழை பெய்து
முடிந்துவிட்டது; முன்பனிக்காலம் தொடங்கிவிட்டது; வாடைக் காற்று இடைவிடாமல்
வீசுகிறது; மாலையும் வந்து தலைவியின் தனிமைத் துயரத்தை மேலும் பெருக்குகிறது. அதனால்
தோழி, “பொருள் முடித்துவிட்டுத் திரும்பிய தலைவன் இன்னும் வராதது ஏன்?” என்று
வியப்புடன் தலைவியிடம் கேட்கிறாள். பாடலின் இறுதியில், தலைவனுடைய வருகையைவிட அவன்
வராமையால் ஏற்படும் தலைவியின் துயரமும் மாலைப்பொழுதின் கொடுமையும் முன்னதாகவே
வந்து துன்புறுத்துகின்றன என்ற அழகான கருத்து வெளிப்படுகிறது.
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த 10
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே
அருஞ்சொற்பொருள்:
1.
கொண்டல் – கிழக்கிலிருந்து வீசும்
காற்று; ஆற்றி – செலுத்தி; விண் தலை – வானத்தின் மேற்பகுதி; செறீஇயர் – செறிவுறச்
செய்தன
2.
திரை - அலை; பிதிர் – சிதறும்
நீர்த்துளி; கடுப்ப - போல; முகடு – மலையின் உச்சி; உகந்து – விரும்பி
3.
நிரத்து - முழுமையாக; கமம் - நிறைவு;
மா - கரிய; மழை – மேகம்
4.
அழி துளி – மிக்க துளி, பெருமழைத் துளி;
கழிப்பிய - ஓய்ந்து; வழி பெயல் – தொடர்ந்து பெய்தல்; கடைநாள் – இறுதி நாள்
5.
பனிப் பருவம் – குளிர்காலம்; மயிர்க்
காய் – மயிர்போன்ற
நுண்முடிகளையுடைய காய்
6.
அகல் இலை – அகன்ற இலை; அகல வீசி –
அகலும்படி வீசி; அகலாது – நீங்காமல்
7.
அல்கலும் – நாள்தோறும்; அலைக்கும் –
துன்புறுத்தும்; நல்கா – அன்பு செலுத்தாத; வாடை – வடக்கிலிருந்து வீசும் காற்று
8.
பரும யானை – பருத்த யானை; அயா
உயிர்த்தாங்கு – சோர்வினால் பெருமூச்சு விட்டாற்போல்
9.
வாரா – வராமல் இருந்த
10. வன்கணாளர்
- இரக்கமற்றவர்; இயைந்த – பொருந்திய
11. புன்கண்
– துன்பம்; புலம்பு – தனிமைத் துயரம்; முந்துறுத்தல் – முன்னதாக வந்து
துன்புறுத்தல்
பதவுரை:
1. கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர் –
கிழக்குக் காற்று மேகங்களைச் செலுத்தி வானத்தில் செறிவுறச் செய்து,
2. திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
– கடல் அலைகளிலிருந்து சிதறும் நுரையைப் போன்றவையாக, மலை உச்சிகளை விரும்பி ஏறி,
3. நிரைத்து நிறை கொண்ட கமஞ்சூல் மாமழை –
ஒழுங்காக நீரால் நிறைந்த கருவுற்ற கரிய மழைமேகம்,
4. அழிதுளி கழிப்பிய வழிபெயற் கடைநாள் –
மிக்க மழைத்துளிகளைப் பொழிந்து முடித்த கார்காலத்தின் இறுதி நாளைக் கடந்து,
5. இரும்பனிப் பருவத்த மயிர்க்காய்
உழுந்தின் – மிகுந்த பனியுடைய பருவத்தில், மயிர்போன்ற நுண்முடிகளையுடைய உழுந்துச்
செடியின்
6. அகலிலை அகல வீசி அகலாது – அகன்ற இலைகளை
உதிரும்படி வீசி, நம்மை விட்டு நீங்காமல்
7. அல்கலும் அலைக்கும் நல்கா வாடை – நாள்தோறும்
வருத்துகின்ற, அன்பு செய்யாத வாடைக் காற்று,
8. பரும யானை அயா உயிர்த்தாங்கு – பெரிய
யானை சோர்வினால் பெருமூச்சு விடுவதுபோல,
9. இன்னும் வருமே தோழி வாரா – இன்னும்
வந்து கொண்டிருக்கிறது, தோழி! வந்து சேராத
10. வன்கணாளரோடு இயைந்த – இரக்கமற்ற
தலைவனுடன் சேர்ந்து,
11. புன்கண் மாலையும் புலம்பும்
முந்துறுத்தே – துன்பம் தரும் மாலைப்பொழுதும் தனிமைத் துயரமும் நம்மை முன்னதாகவே
வந்து வருத்துகின்றன.
கொண்டு கூட்டு: தோழி, வழிபெயற் கடைநாள் கழித்து
இரும்பனிப் பருவத்தும், மயிர்க்காய் உழுந்தின் அகலிலை அகல வீசி, அகலாது அல்கலும்
அலைக்கும் நல்கா வாடை, பரும யானை அயா உயிர்த்தாங்கு இன்னும் வருமே. வாரா
வன்கணாளரோடு இயைந்த புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே என்று கூட்டுக.
உரை:
தோழி! பெருமழை பெய்து முடிந்துவிட்டது. இப்போது மிகுந்த பனியுடைய பருவம்
தொடங்கிவிட்டது. வானத்தில் திரண்டிருந்த மழைமேகங்கள் மழையைப் பொழிந்து
கலைந்துவிட்டன. இப்பருவத்தில், மயிர்போன்ற நுண்முடிகளைக் கொண்ட உழுந்துச் செடியின்
அகன்ற இலைகளைக்கூட உதிரச் செய்யும் அளவுக்குக் குளிர்ந்த வாடைக் காற்று வீசுகிறது.
அந்த வாடைக் காற்று நம்மை விட்டு நீங்காமல் நாள்தோறும் வருத்துகிறது. அது பெரிய
யானை சோர்வினால் பெருமூச்சு விடுவதைப்போலத் தொடர்ந்து வீசுகிறது. நம் தலைவன்
பொருள் தேடும் தன் செயலை முடித்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டான் என்று நான் கேள்விப்பட்டேன்.
ஆனால் அவன் இன்னும் நம்மிடம் வரவில்லை. அவன் வராத நிலையிலும், அவனுடைய
வருகைக்காகக் காத்திருக்கும் நமக்குத் துன்பம் தரும் மாலைப்பொழுதும் தனிமைத்
துயரமும் அவனைவிட முன்னதாகவே வந்து நம்மை வருத்துகின்றனவே.

உழுந்துச்
செடி
Comments
Post a Comment