88. தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?
88. தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?
பாடியவர்:
நல்லந்துவனார்
இவர் இயற்பெயர் அந்துவன். இவர் ‘நல்’ என்னும் அடைமொழியையும் ‘ஆர்’ என்னும் மரியாதைப் பொருளுடைய விகுதியையும் பெற்று ‘நல்லந்துவனார்’ என அழைக்கப்பட்டார். அந்துவன் என்ற பெயருடைய பிற புலவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக இவர் ‘ஆசிரியர் நல்லந்துவனார்’ என்றும் அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் மதுரை மருதன் இளநாகனாரால், “அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” என்று புகழப்பட்டவர். இவர் இயற்றியதாக அகநானூற்றில் ஒரு பாடலும் (43), கலித்தொகையின் நெய்தற்கலியில் 33 பாடல்களும், நற்றிணையில் ஒரு பாடலும் (88), பரிபாடலில் நான்கு பாடல்களும் (6, 8, 11, 20) உள்ளன.
திணை:
குறிஞ்சி
துறை: சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு
உரைப்பாளாய்ச் சொல்லியது
துறை விளக்கம்: தலைவியை விரைந்து திருமணம்
செய்துகொள்ளாமல், மறைமுகமாகச் சந்திக்கும் களவொழுக்கத்தையே தலைவன் தொடர்ந்து
விரும்புகிறான். ஒருநாள், அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தின் அருகே தலைவன்
மறைந்து வந்து நிற்பதைத் தோழி கவனிக்கிறாள். அவனது மனதை மாற்றி, விரைவில் திருமணம்
செய்துகொள்ளத் தூண்டத் தோழி ஓர் உத்தியைக் கையாளுகிறாள். தலைவனுக்குக் கேட்கும்
வகையில், தலைவியைப் பார்த்துக் கூறுவதுபோல, "நீ இப்படி உருகி அழாதே; உன்னைப்
பிரிந்த தலைவனின் மலையே உனக்காக அருவியாகக் கண்ணீர் வடித்து அழுகிறது" என்று
சொல்லி ஆற்றுவிக்கிறாள். இதன் மூலம் தலைவியின் துன்பத்தை உணர்ந்து தலைவன்
விரைவாகத் திருமணம் செய்துகொள்வான் என்பதே இதன் பின்னணியாகும்.
பாடலின் பின்னணி:
தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாமல்
வருந்துகிறாள். அவளது துயரத்தைக் கண்ட தோழி, “கடலில் விளையும் உப்பு மழைநீரைப்
பட்டவுடன் கரைவதைப்போல நீயும் உருகி வருந்துகிறாய்; அதைக் கண்டு நான் அஞ்சுகிறேன்”
என்று கூறித் தேற்றுகிறாள்.
பின்னர், “நம் தலைவன் நமக்குச் செய்த
கொடுமையை நினைத்து, நம்மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் தாங்கிக்கொள்ள
முடியாமல், அவன் வாழும் பழமுதிர் குன்றமே அருவியாகக் கண்ணீர் வடித்து அழுகிறது”
என்று கூறுகிறாள்.
தலைவன் சிறைப்புறத்தில் மறைந்து நிற்பதை
அறிந்த தோழி, அவனுக்குக் கேட்கும் வகையில் இவ்வாறு கூறுகிறாள். இதன் மூலம்
தலைவியின் துயரத்தைத் தலைவன் உணர்ந்து, விரைந்து வந்து தலைவியை மணந்துகொள்ள
வேண்டும் என்பதே தோழியின் நோக்கமாகும். இது வரைவு கடாவுதல் என்னும் துறைக்குரிய
சூழலைக் காட்டுகிறது.
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண் 5
தம்மோன் கொடுமை நம் வயின் ஏற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி யாக
அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே
அருஞ்சொற்பொருள்:
1. தொல்வினை – முற்பிறவியில் செய்த வினை,
பழவினை; எவன் – ஏன்; பேதுற்றனை – மனம் கலங்கினாய், வருந்தினாய்
2. வாழி – நீ வாழ்க
3. உரைத்தனம் – சொல்வோம்; வருகம் –
வருவோம்; எழுமதி – எழுந்திரு; புணர்திரை – ஒன்றோடொன்று மோதும் அலைகள்
4. கடல் விளை அமுதம் – கடலில் விளையும்
அமுதம் போன்ற உப்பு; பெயற்கு ஏற்றாங்கு – மழை பெய்வதை ஏற்றுக்கொண்டாற்போல.
5. உகுதல் - உருக்குலைதல், வருந்துதல்,
மனம் தளர்தல்; உதுக்காண் – அதோ பார்
6. தம்மோன் – தலைவன்; நம் வயின் –
நம்மிடத்தில், நம்மீது; ஏற்றி – ஏற்று, நினைத்து
7. நயம் – அன்பு; தாங்கல் செல்லாது – தாங்க
முடியாமல்
8. கண்ணீர் - கண்ணீர்
9. பழமுதிர் குன்று – பழங்கள் உதிர்கின்ற
குன்று
பதவுரை:
1. யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை
– நாம் செய்த பழவினையின் பயனாக இவ்வாறு நேர்ந்திருக்க நீ ஏன் இவ்வாறு மனம்
கலங்குகிறாய்?
2. வருந்தல் வாழி தோழி யாம் சென்று – வருந்தாதே;
நீ வாழ்க! நாம் சென்று
3. உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரை–
நாம் அவனிடம் சொல்லிவிட்டு வருவோம்; எழுவாயாக,
ஒன்றோடொன்று மோதும் அலைகளையுடைய
4. கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாங்கு –
கடலில் விளையும் அமுதமாகிய உப்பு, மழையை
ஏற்றுக்கொண்டாற்போல
5. உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண் – நீ
மனம் தளர்ந்து வருந்துவதைக் கண்டு நான் அஞ்சுகிறேன். அதோ பார்!
6. தம்மோன் கொடுமை நம் வயின் ஏற்றி – நம்
தலைவன் நமக்குச் செய்த கொடுமையை நினைத்து
7. நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
– நம்மீது மிகவும் அன்பு உள்ளதால் தன் வருத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்,
8. கண்ணீர் அருவி யாக– கண்ணீர் அருவியாகப்
பெருகும்படி.
9. அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே –
அழுகின்றதே, தோழி தலைவனுடைய பழங்கள் உதிர்ந்து விழும் குன்று
கூட்டு: யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை;
வருந்தல், வாழி தோழி; யாம் சென்று உரைத்தனம் வருகம்; எழுமதி. புணர்திரைக் கடல்
விளை அமுதம் பெயற்கு ஏற்றாங்கு உருகி உகுதல் அஞ்சுவல். உதுக்காண்! தம்மோன் கொடுமை
நம் வயின் ஏற்றி, நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது, கண்ணீர் அருவியாக அழுமே,
தோழி, அவர் பழமுதிர் குன்றே என்று கூட்டுக.
உரை:
நாம் செய்த பழைய வினை இவ்வாறு இருக்க,
அதை ஆராயாது, எதற்காக நீ ஏன் இவ்வாறு மனம் கலங்குகிறாய்? வருந்தாதே! தோழி, நீ வாழ்க! நாம் தலைவனிடம் சென்று அவனிடம் நம்
நிலைமையைச் சொல்லிவிட்டு வருவோம். நீ
எழுவாயாக. ஒன்றோடொன்று மோதும் அலைகளையுடைய கடலில் விளைந்த உப்பு, மழைநீர்
பட்டவுடன் கரைவதைப்போல, நீயும் உருகி மனம் தளர்ந்து வருந்துவதைக் கண்டு நான்
அஞ்சுகிறேன். அதோ பார்! நம் தலைவன் நமக்கு இழைத்த கொடுமையை நினைத்து,
நம்மீது மிகுந்த அன்பு உள்ளதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பழங்கள் உதிர்ந்து விழுகின்ற தலைவனுடைய குன்று
தன்னுடைய கண்ணீரை அருவியாக வடித்து அழுகின்றது.
Comments
Post a Comment