87. தோழி, கனவு கலைந்தது!

 

87. தோழி, கனவு கலைந்தது!

 

 

பாடியவர்: நக்கண்ணையார்

இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19-ன் உரையில் காணலாம்.

திணை: நெய்தல்

துறை: வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு தோழிக்கு உரைத்தது.

துறை விளக்கம்: தலைவன் தலைவியை மணம் செய்துகொள்வதற்காக வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் விரைவில் திரும்பி வந்து மணம் முடிப்பான் என்று எதிர்பார்த்த தலைவி, அவன் பிரிவைத் தாங்க முடியாமல் வருந்துகிறாள். ஒருநாள் அவள் கனவில் தலைவன் வாழும் நாட்டையும், அங்குள்ள இயற்கைக் காட்சிகளையும், மக்களின் மகிழ்ச்சியையும் காண்கிறாள். கனவு கலைந்ததும், தோழியிடம் அந்தக் கனவை எடுத்துரைக்கிறாள்.

பாடலின் பின்னணி:

தலைவன் தலைவியை மணம் செய்துகொள்வதற்காகப் பொருள் தேடவோ, தன் குடும்பத்தினரிடம் பேசி மணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ பிரிந்து சென்றிருக்கிறான். அவன் விரைவில் திரும்பி வந்து மணம் முடிப்பான் என்று தலைவி எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். ஆனால் அவன் வரவு தாமதமாகிறது. அவனுடைய பிரிவைத் தாங்க முடியாமல் தலைவி வருந்துகிறாள்.

ஒருநாள் தலைவி தூங்கும்போது, கனவில் தலைவன் வாழும் நாட்டில் உள்ள காட்சிகளைக் காண்கிறாள். அங்கே நெல்லி மரத்தின் புளிப்புச் சுவை, புன்னை மரத்தின் மலர்கள், கடற்கரையில் வாழும் பரதவர்களின் மகிழ்ச்சி, குளிர்ந்த கடற்கானல் ஆகியவற்றைக் காண்கிறாள். அவை அனைத்தும் தலைவன் வாழும் நாட்டை நினைவூட்டுகின்றன.

கனவு கலைந்ததும், தலைவி தன் கனவில் கண்ட காட்சிகளைத் தோழியிடம் கூறுகிறாள். தலைவனுடைய நாட்டைக் கனவில் கண்ட மகிழ்ச்சியும், விழித்தபின் அவன் இன்னும் திரும்பி வராததால் ஏற்படும் ஏக்கமும் இப்பாடலில் வெளிப்படுகின்றன.

உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்       5
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே

அருஞ்சொற்பொருள்:

1.   மா -  மாமரம்; அத்தம் – அத்து என்னும் சாரியை அத்தம் என்று திரிந்தது; முள் எயிற்று – முட்களைப் போன்ற பற்களையுடைய; வாவல் – வௌவால்.

2.   ஓங்கல் – உயர்ந்த; அம் சினை – அழகிய கிளை; தூங்கு துயில் – தொங்கியவாறு கொள்ளும் உறக்கம்.

3.   வெல் போர் – வெற்றியைத் தரும் போர்; அழிசி – சோழர் படைத்தலைவன்; பெருங் காடு – பெரிய காடு.

4.   நெல்லி – நெல்லி மரம்; அம் புளிச் சுவை – அழகிய புளிப்புச் சுவை; கனவி – கனவில் கண்டது.

5.   அது கழிந்தன்று – அந்தக் கனவு கலைந்தது; அவர் நாடு – தலைவன் வாழும் நாடு.

6.   பனி அரும்பு – பனித்துளி; உடைந்த – மலர்ந்த; பெருந் தாள் – பெரிய அடிப்பகுதி; புன்னை – புன்னை மரம்.

7.   துறை மேய் – கடற்கரையில் திரியும்; இப்பி – சிப்பி; ஈர்ம் புறத்து – ஈரமான முதுகில்; உறைக்கும் – உதிர்ந்து விழும்.

8.   சிறுகுடி – சிறிய குடியிருப்பு; பரதவர் – கடலில் மீன்பிடித்து வாழும் மக்கள்

9.   பெருந் தண் கானல் – பெரிய குளிர்ந்த கடற்கரைச் சோலை; அப் பகல் – அந்த பகற்பொழுது

பதவுரை:

1.   உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் -  நம் ஊரிலுள்ள மாமரத்தில் இருக்கும் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால்,

2.   ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் – உயர்ந்த அழகிய கிளையில் தொங்கியபடி உறங்கும் நேரத்தில்.

3.   வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு – வெற்றிபெறும் போரையுடைய சோழர்களின் அழிசி என்பவனுடைய அழகிய பெரிய காட்டில்.

4.   நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு – நெல்லிக்கனியின் அழகிய புளிச்சுவையைச் சுவைப்பதுபோல் கனவுகண்டாற்போன்று

5.   அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப் – அந்தக் கனவு கலைந்துவிட்டது, தோழி! அவருடைய நாட்டில்.

6.   பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை – குளிர்ச்சியான அரும்புகள் உடைந்த, பெரிய அடிமரத்தைக் கொண்ட புன்னையின் தாதுக்கள்

7.   துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் – கடல்துறையில் மேயும் சிப்பியின் ஈரமான முதுகில் உதிர்ந்துவீழும்

8.   சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் – சிறிய குடியிருப்பில் வாழும் பரதவர்களின் மகிழ்ச்சியையும்.

9.   பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே – பெரிய குளிர்ந்த கடற்கரைச் சோலையையும் நான் நினைத்த பகல் பொழுதில்

கொண்டு கூட்டு: உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, அது கழிந்தன்று தோழி! அவர் நாட்டுப் பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை, துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே என்று கூட்டுக.

உரை:

தோழி! தலைவன் வாழும் நாட்டில் பெரிய அடியையுடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் உடைந்து, அவற்றின் தாதுக்கள், கடலின் துறையில் மேய்கின்ற சிப்பியின் ஈரமான முதுகில் விழுவதையும், சிறுகுடியில் உள்ள பரதவர் அடைந்த மகிழ்ச்சியையும், பெரிய குளிர்ந்த கரையில் உள்ள சோலையையும் நான் நினைத்தபடியே, ஒருநாள்  பகற்பொழுதில்  கனவு கண்டேன். அந்தக் கனவில், தலைவனின் ஊரில் உள்ள மாமரத்தில் இருக்கின்ற முள் போன்ற பற்களையுடைய வௌவால் உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடி தூங்கும் பொழுதிலே, போர்களில் வெற்றி அடையும் சோழர் குடியில் தோன்றிய அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையைச் சுவைப்பதையும் நான் கண்டேன்.  அந்தக் கனவு கலைந்தது.

 

சிறப்புக் குறிப்பு:

அழிசி: இவர் சங்க காலத்தில் காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு நாட்டை ஆண்ட ஒரு குறுநில மன்னன் ஆவார். நற்றிணை (87, 190) மற்றும் குறுந்தொகை (258) ஆகிய நூல்களில் அழிசி மற்றும் அவரது ஆர்க்காடு நாட்டின் வளம், நலம் குறித்துப் பாடப்பட்டுள்ளது. அழிசி சோழப் பேரரசோடு மிக நெருங்கிய, அணுக்கமானத் தொடர்பு உடையவராக விளங்கினார். இதன் காரணமாகவே சங்கப் பாடல்களில் இவர் "வெல்போர்ச் சோழர் அழிசி" என்று சிறப்பித்துக் கூறப்படுகிறார்

 

தலைவி தன் கனவைத் தோழியிடம் கூறுவதன் மூலம், தலைவனுடைய நாட்டை நினைத்து ஏங்கும் தன் உள்ளநிலையை வெளிப்படுத்துகிறாள். கனவில் தலைவனுடைய நாட்டைக் காண்பது அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், விழித்தபின் தலைவன் இன்னும் திரும்பி வராதது அவளுடைய ஏக்கத்தை அதிகரிக்கிறது.

 

உள்ளுறை: இப்பியின் புறத்தைப் புன்னையின் தாது மூடிக்கொள்ளும் என்பது, பசலை தலைவியின் மேனியை மறைக்குமாறு பரவும் என்பதைக் குறிக்கிறது.

 

மரங்களின் வரங்கள்!               சிப்பி - தமிழ் விக்கிப்பீடியா

    புன்னை மரம்                       சிப்பிகள்

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே