83. கடுங் குரல் பயிற்றாதீமே!

 

83. கடுங் குரல் பயிற்றாதீமே!

 

பாடியவர்: பெருந்தேவனார்

இவர் இயற்றியதாக அகநானூற்றில் ஒரு பாடலும் (51), நற்றிணையில் ஒரு பாடலும் (83) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

திணை: குறிஞ்சி

துறை: இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக தோழி சொல்லியது

துறை விளக்கம்: இரவுக்குறி என்பது தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக இரவில் வரும் இடம் அல்லது நேரம். இங்குத் தலைவன் வந்து சிறைப்புறத்தில் - அதாவது தலைவியின் வீட்டிற்கு அருகிலுள்ள மறைவிடத்தில் - நிற்கிறான். அவனிடம் நேரடியாக, “இரவில் இவ்வாறு வராதே; ஆபத்து” என்று கூற முடியாத நிலையில், தோழி தலைவன் கேட்கும்படி வேறொரு செய்தியைச் சொல்கிறாள்.

பாடலின் பின்னணி:

தலைவன் இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க வருகிறான். அவன் தலைவியின் வீட்டிற்குப் புறத்தே, மறைவாக நிற்கிறான். அவன் அங்கே இருப்பதைத் தோழி அறிகிறாள். தலைவனிடம் நேரடியாகப் பேசாமல், அவன் கேட்கும்படி கூகையிடம் பேசுவதுபோலத் தோழி கூறுகிறாள். ஊரின் வாயிலில் உள்ள நீர்த்துறைக்கு அருகிலுள்ள கடவுள் வாழ்வதாகக் கருதப்படும் மரத்தில் வாழும் கூகை, இரவில் கடுமையாகக் குரல் எழுப்புகிறது. அந்தக் குரல் தலைவனின் வருகையை ஊராருக்குத் தெரிவித்து விடக்கூடும். எனவே, “நாங்கள் உனக்கு விரும்பிய உணவைப் படையலாகத் தருவோம்; எங்கள் காதலர் வருவதை எதிர்பார்த்து நாங்கள் தூங்காமல் இருக்கும் இரவில், அச்சத்தை உண்டாக்கும் உன் கடுமையான குரலை எழுப்பாதே” என்று தோழி கூகையிடம் கூறுகிறாள். இந்தக் கூற்று மறைமுகமாகத் தலைவனையும் எச்சரிக்கிறது.

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய்ப் பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்           5
எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே

 

அருஞ்சொற்பொருள்:

1.   வாயில் – ஊரின் நுழைவிடம்; உண்துறை - மக்கள் நீர் உண்ணும் இடம், நீர் பெறும் இடம்; தடைஇய – பெருத்த, தழைத்துள்ள

2.   முது மரம் – பழைமையான மரம்; உடன் உறை -அதனுடன் தங்கி வாழும்

3.   தேயா – தேயாத;  வளை வாய் – வளைந்த  அலகு; தெண் கண்  - தெளிந்த கண்; கூர் - கூர்மையான; உகிர் – நகம்

4.   வாய்ப் பறை - வாயிலிருந்து எழும் பறை போன்ற ஒலி (இங்கு கூகையின் குரல்); அசாஅம் - ஓயாத; வலி முந்து ் வலி மிக்க; கூகை – ஆந்தை

5.   மை – ஆடு; ஊன் –இறைச்சி; நெய் வெண் புழுக்கல் – நெய்யில் சமைக்கப்பட்ட வெள்ளை நிற உணவு

6.   எலி வான் சூடு – வெள்ளெலியின் இறைச்சி; மலிய – மிகுதியாக; பேணுதும் - பேணிப் பாதுகாப்போம், படைப்போம்

7.   எஞ்சா - குறையாத; கொள்கை – எண்ணம்; வரல் – வர வேண்டும் என்று விரும்பி

8.   துஞ்சாது – உறங்காமல்; அலமருதல் - கலங்குதல்

9.   அஞ்சு வர – அச்சம் வருமாறு; கடுங் குரல் – கொடுங் குரல், அச்சமூட்டும் குரல்; பயிற்றாதீமே – கூவாமல் இருப்பாயாக

 

பதவுரை:

1.   எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய – எங்கள் ஊரின் நுழைவாயிலில் உள்ள குடிநீர்த் துறையருகே பருத்து வளர்ந்த,

2.   கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய – கடவுள் உறையும் பழைய மரத்தில் தங்கி வாழப் பழகிய,

3.   தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் – தேயாத வளைந்த அலகையும் தெளிந்த கண்களையும் கூரிய நகங்களையும் உடைய,

4.   வாய்ப் பறை அசாஅம் வலி முந்து கூகை – வாயாகிய பறையால் ஓயாது ஒலி எழுப்பும் வலிமைமிக்க கூகையே!

5.   மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – ஆட்டிறைச்சியுடன் நெய் சேர்த்துச் சமைத்த வெள்ளைச் சோற்றையும்,

6.   எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும் – வெள்ளெலியின் சுட்ட இறைச்சியையும் சேர்த்து, உனக்கு நிறைய உணவாகக் கொடுப்போம்;

7.   எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் – குறையாத அன்புடன் எம் காதலர் வருவதை விரும்பி,

8.   துஞ்சாது அலமரு பொழுதின் – நாங்கள் தூங்காமல் வருந்திக்கொண்டிருக்கும் இரவு வேளையில்,

9.   அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே – அச்சம் தோன்றுமாறு உன் கடுமையான குரலை எழுப்பிக் கூவாதே.

கொண்டு கூட்டு: எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய கடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய தேயா வளைவாய் தெண்கண் கூருகிர் வாய்ப்பறை அசாஅம் வலி முந்து கூகை, எம் காதலர் வரல் நசைஇத் துஞ்சாது அலமரு பொழுதின், மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும்; அஞ்சு வரக் கடுங்குரல் பயிற்றாதீமே என்று கூட்டுக.

உரை:

எங்கள் ஊரின் நுழைவாயிலில் உள்ள நீர்த்துறையில், கடவுள் வாழும் பெரிய பழைய மரத்தில் வாழும் கூகையே! வளைந்த வாயும் கூரிய நகங்களும் உடைய வலிமையான கூகையே! உன் வாயிலிருந்து பறை போன்ற கடுமையான ஒலி தொடர்ந்து எழுகிறது. ஆட்டு இறைச்சியுடன் நெய் சேர்த்துச் சமைத்த வெண்மையான சோற்றையும், சுட்ட வெள்ளெலியின் சுட்ட இறைச்சியையும் கலந்து உனக்கு நிறைய உணவாகத் தருவோம். எங்கள் தலைவர் வருவதை விரும்பி, நாங்கள் இரவில் தூங்காமல் வருந்துகிறோம். எனவே, அச்சத்தை ஏற்படுத்தும் உன் கொடிய குரலால் இரவில் கூவாமல் இருப்பாயாக!

 

 


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே