81. அரிவையின் இன் நகை காண்கம்

 

81. அரிவையின் இன் நகை காண்கம்

 

 

பாடியவர்: அகம்பன் மாலாதனார்

இவர் இயற்பெயர் ஆதன். ஆதன் என்னும் பெயர் ‘ஆர்’ என்னும் சிறப்பு விகுதி பெற்று ‘ஆதனார்’ எனத் திரிந்தது. ‘மால்’ என்னும் சொல் தலைவன் என்பதைக் குறிக்கும். இவர் அகம்பல் என்னும் ஊருக்குத் தலைவனாக இருந்ததால், ‘அகம்பன் மாலாதனார்’ என அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

 

திணை: முல்லை

 

துறை: வினை முற்றிய தலைவன் தேர்ப்பாகற்கு உரைத்தது

 

துறை விளக்கம்: தலைவன் தன் அரசனுக்காகச் செய்த போர் முடிந்ததால், இனிமேல் அங்கே தங்க வேண்டியதில்லை. தன்னைப் பிரிந்து வருந்தும் தலைவியை விரைவாகச் சென்று பார்க்கத் தலைவன் விரும்புகிறான். எனவே, தேர்ப்பாகனிடம் குதிரைகளை விரைவாகச் செலுத்துமாறும், தலைவியைச் சென்று காண்போம் என்றும் அவன் கூறுகிறான்.

 

பாடலின் பின்னணி:

தலைவன் அரசனுக்காகச் சென்ற போர் முடிந்ததும், தன்னைப் பிரிந்து வருந்தும் தலைவியைச் சந்திக்க விரைந்து வீடு திரும்ப விரும்புகிறான். எனவே, தேர்ப்பாகனிடம் தேரை வேகமாகச் செலுத்துமாறு கூறுகிறான். தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் துயரம் நீங்கி, அவள் முகத்தில் மலரும் மகிழ்ச்சியைக் காண வேண்டும் என்ற ஆவல் அவனை விரைந்து செல்லச் செய்கிறது.

 

இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப
பூண்கதில் பாக நின் தேரே பூண் தாழ்              5
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே        10

 

அருஞ்சொற்பொருள்:

1.   இரு – பெரிய; குறைய - பள்ளமாக; கொட்டிப் பரிந்து – அழுத்தி நடந்து, மிதித்து நடந்து

2.   ஆதி – குதிரையின் நேரோட்டம்; அசைவு - தளர்ச்சி; நோன் தாள் – வலிமையான கால்கள்

3.   மாண் வினை – சிறந்த ஓட்டம், திறமை; புரவி – குதிரை

4.   கொய்ம் மயிர் – வெட்டிச் சீர்செய்யப்பட்ட மயிர்; எருத்து – கழுத்து; பெய்ம் மணி – கட்டித் தொங்கவிடப்பட்ட மணி; ஆர்ப்ப – ஒலிக்க

5.   பூண்க – பூட்டுக;  தில் - விருப்பத்தைக் குறிக்கும் இடைச்சொல் ; பாக – தேர்ப்பாகனே; பூண் – அணிகலன்

6.   ஆகம் – மார்பு; வன முலை – அழகிய முலை; கரை – முலையின் முகடு; வலம் - இடம்; தெறிப்ப – தெறித்து விழ

7.   அம் மா – அழகிய மாமைநிறம்; அரிவை - பெண் (தலைவி)

8.   அயர்தல் - செய்தல்; விருப்பொடு – விருப்பத்துடன்; அசைஇய – களைப்படைந்த

9.   முறுவல் – புன்னகை; இன் நகை – இனிய சிரிப்பு; காண்கம் – காண்போம்

10.  உறு - மிக்க; தணித்தனன் - அடக்கினான்; உரவு – வலிமை; வாள் வேந்தன் – வலிமையான வாட்படையையுடைய வேந்தன்.

 

பதவுரை:

1.   இரு நிலம் குறைய கொட்டிப் பரிந்தின்று - பெரிய நிலம் பள்ளமாகும்படி தன் காலால் கொட்டி மிதித்து நடந்து விரைந்து

2.   ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் - நேராக ஓடுகின்ற, தளர்ச்சியுறாத வலிமையான கால்களையுடைய

3.   மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி - மன்னர்கள் மதிக்கும் சிறந்த ஓட்டத்தையுடைய குதிரைகளின்

4.   கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப – வெட்டிச் சீர்செய்யப்பட்ட மயிருடைய பிடரியில் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க,

5.   பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ் - பாகனே! உன் தேரில் அவற்றைப் பூட்டுக! அணிகலன்கள் தாழ்ந்து தொங்கும்

6.   ஆக வன முலை கரைவலம் தெறிப்ப - மார்பிலுள்ள அழகிய முலைகளின் முகட்டில் கண்ணீர் தெறித்துவிழ

7.   அழுதனள் உறையும் அம் மா அரிவை - அழுதுகொண்டு இருக்கும் அழகிய மாமைநிறத்தையுடைய தலைவியின்

8.   விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய – விருந்தளிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் முயன்று களைப்படைந்த,

9.   முறுவல் இன் நகை காண்கம் - இனிய புன்னகையையும்  சிரிப்பையும் காண்போம்;

10.  உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே - மிக்க பகையை வலிமைமிக்க வாட்படையையுடைய வேந்தன் அடக்கிவிட்டான்.

 

கொண்டு கூட்டு: உரவு வாள் வேந்தே உறு பகை தணித்தனன். ஆதலின், பாக, இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்து, ஆதி போகிய அசைவு இல் நோன் தாளையுடைய, மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவிகளைக் கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப, நின் தேரில் பூண்க. பூண் தாழ. ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப, அழுதனள் உறையும் அம் மா அரிவை, விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன் நகை காண்கம் என்று கூட்டுக.

 

உரை:

தேர்ப்பாகனே! வலிமையான வாட்படையையுடைய நம் வேந்தன் மிக்க பகையை அடக்கிவிட்டான். பெரிய நிலம் பள்ளமாகும்படி காலால் கொட்டி நடந்து, விரைந்து ஓடுகின்ற தளர்ச்சியற்ற வலிமையான கால்களையுடைய, மன்னர்களால் மதிக்கப்படும் சிறந்த குதிரைகளைத் தேரில் பூட்டுவாயாக. அவற்றின் வெட்டிச் சீர்செய்யப்பட்ட மயிருடைய பிடரியில்  கட்டப்பட்ட மணிகள் ஒலிக்குமாறு தேரை விரைவாகச் செலுத்துவாயாக.

நம்மைப் பிரிந்து வருந்தும் அழகிய மாமைநிறத்தையுடைய நம் தலைவி, தன் அணிகலன்கள் தாழ்ந்து தொங்கும் மார்பிலுள்ள அழகிய முலைகளின் முகட்டில் கண்ணீர் தெறித்து விழும்படி அழுதுகொண்டிருப்பாள். மேலும், நமக்கு விருந்து படைக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு உழைத்துக் களைப்படைந்திருப்பாள். நாம் விரைந்து சென்று அவளைக் காண்போம். நம்மைக் கண்டவுடன் அவளுடைய துயரம் நீங்கி, அவள் முகத்தில் தோன்றும் அந்த இனிய புன்னகையையும் சிரிப்பையும் நாம் காண்போம்.


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே