80. மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே!

 

80. மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே!

 

 

பாடியவர்: பூதன் தேவனார்

இவர் இயற்றியதாக குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (285) நற்றிணையில் ஒரு செய்யுளும் (80) மட்டுமே சங்க இலக்கியத்தில் உள்ளன.

திணை: மருதம்

துறை: சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன் தோழி கேட்ப தன் நெஞ்சிற்கு உரைத்தது

துறை விளக்கம்: தலைவன், தலைமகளைப் பிரிந்து இருக்கிறான். அவளை மீண்டும் காண வேண்டும் என்ற விருப்பம் மிகுந்ததால், பிரிவைத் தாங்க முடியாமல் வருந்துகிறான். அப்போது, தலைமகளின் தோழி கேட்கும் வகையில், தன் நெஞ்சோடு பேசுகிறான். தைத் திங்களில், தன் தோழியருடன் குளிர்ந்த குளத்தில் நீராடும் பெரிய தோள்களையுடைய தலைவியை நினைத்துப் பார்க்கிறான். தான் அவளுக்குத் தழையாடையையும் மாலையும் கொடுத்த நிகழ்வையும் நினைவுகூர்ந்து, அவளே தான் அடைந்த காதல் நோய்க்கு ஒரே மருந்து; அவளைத் தவிர வேறு மருந்து இல்லை என்கிறான்.

 

பாடலின் பின்னணி:

மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார் கன்று விட்டு
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என              5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே

 

அருஞ்சொற்பொருள்:

1.   மன்றம் – தொழுவம்; மலர் தலை – அகன்ற தலை; காரான் – கரிய எருமை

2.   இன் தீம் பாற்பயம் – மிக இனிய பாலாகிய பயன்; கொண்மார் – கொள்ளும் பொருட்டு

3.   குறுமாக்கள் – இளஞ்சிறுவர்கள்; மேற்கொண்டு – எருமையின் மீது ஏறிக்கொண்டு; கழியும் – சென்றுகொண்டிருக்கும்

4.   போத்தந்து – வந்து

5.   தழை – தழையாடை; தார் - மாலை

6.   இழை அணி – அணிகலன்களை அணிந்த; ஆயம் – தோழியர் கூட்டம்; நாண் – நாணம்; தடைஇ – தடைப்பட்டு, கட்டுப்பட்டு

7.   தைஇத் திங்கள் – தை மாதம்; தண் – குளிர்சியான; கயம் – நீர்நிலை (குளம்); படியும் – நீராடும்

8.   பெருந்தோள் – பெரிய தோள்களையுடைய; குறுமகள் – இளம்பெண் (இங்கு தலைவி)

9.   உற்ற - அடைந்த

பதவுரை:

1.   மன்ற எருமை மலர் தலை காரான் - தொழுவத்திலுள்ள அகன்ற தலையையுடைய கரிய எருமையின்

2.   இன் தீம் பால் பயம் கொண்மார் கன்று விட்டு - இனிய சுவையுள்ள பாலாகிய பயனைக் கொள்வதற்காக, கன்றினைவிட்டுக் கறந்துகொண்டு,

3.   ஊர் குறு_மாக்கள் மேற்கொண்டு கழியும் - ஊரிலுள்ள இளஞ்சிறுவர்கள் அந்த எருமைகளின் மேல் ஏறிச் சென்றுகொண்டிருக்கும்

4.   பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்து - பெரிய இருள் நீங்கும் விடியற்காலத்தில் விருப்பத்தோடு வந்து,

5.   தாரும் தந்தனன் இவன் என - உடுக்கும் தழையாடையையும் , மாலையும் இவன் தந்தான் என்று

6.   இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ - அணிகலன்களை அணிந்த தோழியரோடு தகுந்த நாணத்தால் கட்டுப்படுத்தப்பட்டு

7.   தைஇ திங்கள் தண் கயம் படியும் - தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்

8.   பெரும் தோள் குறுமகள் அல்லது - பெரிய தோள்களைக் கொண்ட இளம்பெண்ணாகிய தலைவியைத் தவிர

9.   மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே - மருந்து வேறு இல்லை நான் அடைந்த இந்த நோய்க்கு

 

கொண்டு கூட்டு: பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து, “தழையும் தாரும் தந்தனன் இவன்” என, இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ, தைஇத் திங்கள் தண் கயம் படியும் பெருந் தோட் குறுமகள் அல்லது, யான் உற்ற நோய்க்கு மருந்து பிறிது இல்லை என்று கூட்டுக.

உரை:

தொழுவத்தில் உள்ள அகன்ற தலையையுடைய கரிய எருமைகளின் மிக இனிய பாலைப் பெறுவதற்காக, அவற்றின் கன்றுகளை முதலில் பால் குடிக்கவிட்டு, பின்னர் ஆயர்கள் எருமைகளைப் பால் கறப்பார்கள். அதன் பின்னர், ஊரில் உள்ள மாடுகளை மேய்க்கும் இளஞ்சிறுவர்கள் அந்த எருமைகளின் மீது ஏறி அமர்ந்து, அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். அத்தகைய இருள் மிகவும் நீங்கி விடியும் காலையில், ”விருப்பத்துடன் வந்து, தழையாடையையும் அணிய வேண்டிய மாலையையும் இவன் தந்தான்” என்று என்னைப் பற்றி நினைத்து, அணிகலன்களை அணிந்த தோழியருடன், தன் பெண்மைக்குரிய நாணத்தால் கட்டுப்பட்டு, தை மாதத்தில் குளிர்ந்த குளத்தில் நீராடும் பெரிய தோள்களையுடைய தலைவியைத் தவிர, நான் அடைந்த காதல் நோய்க்கு வேறு மருந்து இல்லை.

 

சிறப்புக் குறிப்பு:

இறைச்சி 1:
கன்றைப் பின்தங்கச் செய்து, எருமையை மட்டும் வெளியே அழைத்துச் செல்வதைப்போல, தோழி தலைவியைத் தலைவனுடன் உடனடியாகச் சேர்க்காமல், அவனைச் சேட்படுத்தி வருந்தச் செய்து,
 வரைவாகிய மணத்தின் பயனைப் பெற எண்ணுகிறாள் என்று தலைவன் குறிப்பாக உணர்த்துகிறான்.

இறைச்சி 2:
கன்றை வீட்டில் விட்டுவிட்டு, ஊரிலுள்ள சிறுவர்கள் எருமையை மட்டும் மேற்கொண்டு செல்வதைப்போல,
 தலைவியைத் தோழியிடம் விட்டுவிட்டு, அவளைப் பிரிந்த ஏக்கத்துடனும் மனக்கலக்கத்துடனும் தான் செல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் தலைவன் குறிப்பாக உணர்த்துகிறான்.

 


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே