78. நாம் இவண் உய்கம்!
78. நாம் இவண் உய்கம்!
பாடியவர்: கீரங்கீரனார்
இவர் இயற்றியதாக இப்பாடல் ஒன்று மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்
துறை: வரைவு மலிந்தது
துறை விளக்கம்: களவொழுக்கத்தில் இருந்த தலைவன்,
தலைவியைப் பிரிந்திருக்கும் துன்பத்தைப் போக்கும் பொருட்டு, அவளை விரைந்து
மணந்துகொள்ளத் தேவையான முயற்சிகளை மேற்கொள்கிறான். அவன் மணம் முடிக்கும்
நோக்கத்துடன் தேரில் விரைந்து வருகிறான். அவனுடைய தேரின் ஓசையைக் கேட்ட தோழி,
தலைவியிடம், “நமது துன்பம் தீரப்போகிறது; தலைவன் நம்மை மணந்துகொள்ள வருகிறான்”
என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறாள்.
பாடலின் பின்னணி:
தலைவன் இரவிலோ பகலிலோ
இரகசியமாக வந்து தலைவியைச் சந்தித்துவிட்டுப் பிரிந்து சென்று கொண்டிருந்தான்.
தலைவனின் பிரிவாலும் ஊராரின் அலர் காரணமாகவும் தலைவி கடும் துன்பத்தில்
ஆழ்ந்திருந்தாள். மாலைப்பொழுது வந்ததும் அவளது பிரிவுத் துயரம் மேலும்
அதிகரித்தது. அந்நேரத்தில், தலைவன் தலைவியை மணந்துகொள்ளும் பொருட்டுத் தனது தேரில்
விரைந்து வருகிறான். அவனுடைய தேரில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஓசை தூரத்திலிருந்து
கேட்கிறது. அந்தத் தேர்மணியின் ஓசையைக் கேட்ட தோழி மிகுந்த மகிழ்ச்சியடைந்து,
தலைவியிடம் அவர்களது துன்பம் இனி தீரப்போகிறது என்று கூறுகிறாள். இதுவே இப்பாடலின்
பின்னணியாகும்.
கோட் சுறா வழங்கும்
வாள் கேழ் இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை 5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா 10
உரவு நீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரலே
அருஞ்சொற்பொருள்:
1. கோட்சுறா – கொல்லும் சுறாமீன்; வழங்கும்
– உலவும், திரியும்; வாள் – ஒளிரும்; கேழ் – நிறப்பொலிவு, அழகு; இருங் கழி – பெரிய
உப்பங்கழி.
2. மணி – நீலமணி; ஏர் – போன்ற; மா – பெரிய.
3. நேர் – ஒத்த, போன்ற; நுண் தாது –
நுண்ணிய பூந்தாது; தூஉம் – தூவும்.
4. வீழ் தாழ் – வீழ்ந்து தாழ்ந்த; கமழ் –
மணக்கும்; கானல் – கடற்கரைச் சோலை.
5. படர் – துன்பம்; நலியும் – வருத்தும்;
சுடர் – கதிரவன்; சுடர்செல் மாலை – கதிரவன் மறையும் மாலைப்பொழுது.
6. நோய் – காதல் நோய்; மலி – மிகுந்த;
பருவரல் – துன்பம், வருத்தம்; உய்கம் – தப்பித்து வாழ்வோம்.
7. கேட்டிசின் – கேட்பாயாக; வாழி – வாழ்க;
தெண் – தெளிந்த.
8. வள் வாய் – கூரிய விளிம்புடைய; ஆழி –
சக்கரம்; உள் வாய் – உட்பகுதி; தோயினும் – ஆழ்ந்து பதிந்தாலும், அமிழ்ந்தாலும்.
9. புள்ளு நிமிர்ந்தன்ன – பறவை மேலெழுந்து
பறப்பதைப் போன்ற; பொலம் – பொன்; படை – அணிகலன்; கலி மா – செருக்கும் விரைவும் உடைய
குதிரை.
10. வலவன் – தேர்ப்பாகன்; கோல் உற –
தாற்றுக்கோல் படும்படி; அறியா – அறியாதவாறு.
11. உரவு – வலிமைமிக்க; சேர்ப்பன் –
கடற்கரைத் தலைவன்; தேர்மணி – தேரில் கட்டப்பட்ட மணி; குரல் – ஓசை.
பதவுரை:
1.
கோட்சுறா வழங்கும் வாள்கேழ் இருங்கழி – கொல்லும் சுறாமீன்கள் உலவும் ஒளிரும்
அழகிய நிறமுடைய பெரிய உப்பங்கழியில்,
2.
மணியேர் நெய்தல் மாமலர் நிறைய – நீலமணியைப் போன்ற அழகிய நெய்தலின் பெரிய
மலர்கள் நிறையும்படி,
3.
பொன்னேர் நுண்தாது புன்னை தூஉம் – பொன்னை ஒத்த நுண்ணிய பூந்தாதுகளைப் புன்னை
மரங்கள் தூவும்,
4.
வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல் – வீழ்ந்து தாழ்ந்த தாழைப் பூக்கள் மணம்
கமழும் கடற்கரைச் சோலையில்,
5.
படர்வந்து நலியும் சுடர்செல் மாலை – துன்பம் வந்து வருத்தும் கதிரவன்
மறையும் மாலைப்பொழுதில்,
6.
நோய்மலி பருவரல் நாம் இவண் உய்கம் – காதல் நோய் மிகுதியால் ஏற்பட்ட
துன்பத்திலிருந்து இனி நாம் இங்கு தப்பித்து வாழ்வோம்.
7.
கேட்டிசின் வாழி தோழி தெண்கழி – தோழியே! நீ வாழ்க! தெளிந்த நீரையுடைய
உப்பங்கழியில்,
8.
வள்வாய் ஆழி உள்வாய் தோயினும் – கூரிய விளிம்புடைய தேர்ச்சக்கரத்தின்
உட்பகுதி மணலில் ஆழ்ந்து பதிந்தாலும்,
9.
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா – பறவை மேலெழுந்து பறப்பதைப் போன்ற,
பொன்னாலான அணிகலன்களை அணிந்த செருக்குமிக்க குதிரைகள்,
10.
வலவன் கோல் உற அறியா – தேர்ப்பாகனின் தாற்றுக்கோல் படுவதை அறியாதவாறு
விரைந்து செல்லும்,
11.
உரவுநீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரல் – வலிமைமிக்க கடற்கரைத் தலைவனின்
தேரில் கட்டப்பட்ட மணியின் ஓசை.
கொண்டு கூட்டு:
கோட்சுறா வழங்கும்
வாள்கேழ் இருங்கழியில், மணியேர் நெய்தல் மாமலர் நிறைய, பொன்னேர் நுண்தாது புன்னை
தூஉம், வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானலில், படர்வந்து நலியும் சுடர்செல் மாலையில்,
நோய்மலி பருவரலுடன் நாம் இவண் உய்கம். தோழி! தெண்கழியில் வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா வலவன் கோல் உற அறியா செல்லும் உரவுநீர்ச்
சேர்ப்பன் தேர்மணிக் குரலைக் கேட்டிசின் என்று கூட்டுக.
உரை:
தோழி! நீ வாழ்க!
தெளிந்த நீரையுடைய உப்பங்கழியில் தேர்ச்சக்கரங்களின் கூரிய விளிம்புகள் மணலில்
ஆழ்ந்து பதிந்தாலும், பொன்னாலான அணிகலன்களை அணிந்த செருக்குமிக்க குதிரைகள், பறவை
மேலெழுந்து பறப்பதைப்போல் விரைந்து செல்கின்றன. வலிமைமிக்க கடற்கரைத் தலைவனின்
தேரில் கட்டப்பட்ட மணியின் ஓசையை நீ கேட்பாயாக! கொல்லும் சுறாமீன்கள் உலவுகின்ற
ஒளிரும் அழகிய நிறமுடைய பெரிய உப்பங்கழியில், நீலமணியைப் போன்ற நெய்தலின் பெரிய
மலர்கள் நிறையும்படி, பொன்னை ஒத்த நுண்ணிய பூந்தாதுகளைப் புன்னை மரங்கள்
தூவுகின்றன. வீழ்ந்து தாழ்ந்த தாழைப் பூக்கள் மணம் கமழும் கடற்கரைச் சோலையில், துன்பம்
வந்து வருத்தும் கதிரவன் மறையும் மாலைப்பொழுதில், காதல் நோய் மிகுதியால் ஏற்பட்ட
துன்பத்திலிருந்து இனி நாம் தப்பித்து வாழ்வோம்.
சிறப்புக் குறிப்பு:
இறைச்சி – 1: “இருங்கழி மணியேர் நெய்தல் மாமலர்
நிறைய, பொன்னேர் நுண்தாது புன்னை தூஉம்” என்பது, தலைவியின் உறவினர்கள்
ஏற்றுக்கொள்ளும் வகையில், சேர்ப்பன் தலைவியை மணந்துகொள்வதற்குத் தேவையான அளவு
பொற்குவியலைக் கொடுக்கத் தயாராக இருக்கிறான் என்பதைக் குறிப்பதாகும்.
இறைச்சி – 2: “கோட்சுறா வழங்கும் வாள்கேழ் இருங்கழி”
என்பது, தலைவியைக் கடுமையாகக் காவலில் வைத்திருக்கும் அவளது உறவினர்களின் கடுமையான
செயலைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
Comments
Post a Comment