77. மலையன் உயிர்த்தாங்கு உய்த்தன்று!
77. மலையன் உயிர்த்தாங்கு உய்த்தன்று!
பாடியவர்:
கபிலர்
இவரைப்
பற்றிய செய்திகளைப் பாடல் 1-ன் உரையில் காணலாம்.
திணை: குறிஞ்சி
துறை: பின்னின்ற தலைவன் நெஞ்சிற்கு உரைத்தது
துறை விளக்கம்: தலைவன் தலைவியுடன் கூடி மகிழ்ந்த பின்னர், அவளைப் பிரிந்து செல்ல வேண்டிய
சூழல் ஏற்படுகிறது. ஆனால், தலைவியின் அழகும் இனிய பார்வையும் அவன் மனத்தை
விட்டகலவில்லை. பிரிந்து செல்லும் தலைவன், தலைவியை நினைத்துத் தன் நெஞ்சிடம் கூறுகிறான்.
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியை அடைவதற்காக அவளது தோழியிடமும் பிறரிடமும் பலவாறாக இரந்து
நின்று (பின்னின்று) முயற்சி செய்கிறான். அத்துணை முயற்சிகளுக்குப் பிறகும் தலைவியோடு
பழகும் வாய்ப்புக் கிடைக்காததால், அவளது பிரிவையும்
அறியாமையையும் எண்ணி அவனது நெஞ்சம் பேரளவில் துயரமும் அமைதியின்மையும் அடைகிறது. அத்தகைய
நிலையில், ”பகைவரின் அரிய அரண்களைப் போரிட்டு அழித்த மலையன் என்பவன், போர் முடிந்ததும்
பெரும் பெருமூச்சு விட்டுத் தன் களைப்பைத் தீர்த்துக் கொண்டதுபோல, தலைவியின் குவளை
மலர் போன்ற மையுண்ட கண்களின் அன்பான மடப்பம் பொருந்திய பார்வை, அவளை அடைவதற்கான செயல்களைச்
செய்ய நம்மை ஊக்குவிக்கிறது.” என்று தனக்குள்
கூறிக்கொள்கிறான்.
மலையன்
மா ஊர்ந்து போகி புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர்
அருங் குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்று மன்னே நெஞ்சே செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் 5
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊரலஞ் சேரிச் சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒள் நுதல் 10
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே
அருஞ்சொற்பொருள்:
1. மலையன் - மலையமான் திருமுடிக்காரி; மா ஊர்ந்து – யானைமேல் ஏறிச்சென்று; போகி – சென்று; புலையன் – பறை
அடிப்பவன்
2. பெருந் துடி – பெரிய பறை; கறங்க –
முழங்க; பிற புலம் – பிறர்
நாடு, பகைவர் நாடு; புக்கு – புகுந்து
3.
அருங்குறும்பு – அழிப்பதற்கு அரிய காவலரண்; எருக்கி – அழித்து, இடித்து; அயா
– களைப்பு நீங்கி; உயிர்த்தல் – பெருமூச்சு விடுதல்
4.
உய்த்தன்று – செலுத்தியது; தூண்டியது, முயற்சி செய்யுமாறு ஊக்குவித்தது;
மன்னே - அசைநிலை; செவ்வேர் – சிவந்த
வேர்கள்
5. சினை – கிளை; பயம் – பழம் (பலாப்பழம்);
கெழு - நிறைந்த; பலவின் – பலாப்பழத்தினசுளை – பலாப்பழச் சுளை
6.
முன்றில் – வீட்டின் முற்றம்; மனையோள் – தலைவி; கங்குல் – இரவு
7.
துஞ்சும் – உறங்கும்
8.
ஊரலஞ் சேரி – ஊருக்கு அழகு தரும் குடியிருப்பு; சீறூர் – சிறிய ஊர்; வல்லோன்
– வலிமையுடைய தலைவன்
9.
வாள் அரம் - வாளின் கூர்மையை ஒத்த அரம்; பொருத – அறுத்த, செதுக்கி; கோள் நேர் – வளைந்த தன்மையுடைய; எல் – ஒளி; வளை
– வளையல்
10.
அகன் தொடி – அகன்ற வளையல்; செறித்த – அணிந்த, நிறைந்த; ஒள் நுதல் – ஒளி
பொருந்திய நெற்றி
11.
திதலை – அழகிய தேமல்; அல்குல் - இடை; குறுமகள் – இளம்பெண்
12.
குவளை உண்கண் – குவளை மலரை ஒத்த மையுண்ட கண்கள்; மடநோக்கு – மடப்பம் கலந்த
பார்வை
பதவுரை:
1.
மலையன் மா ஊர்ந்து போகி புலையன் – மலையமான் யானைமேல் ஏறிச் செல்ல, பறை
அடிப்பவன்
2.
பெருந்துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர் – பெரிய பறையை முழங்கச் செய்து,
பகைவர் நாட்டிற்குள் சென்று, அவர்களுடைய
3.
அருங்குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு – அழிப்பதற்கு அரிய காவலரண்களை
அழித்து, களைப்பு தீரப் பெருமூச்சு விட்டாற்போல,
4.
உய்த்தன்று மன்னே நெஞ்சே செவ்வேர் – நெஞ்சே! நம்மை முயற்சி செய்யத்
தூண்டியது; சிவந்த வேர்களையுடைய
5.
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் – கிளைகள்தோறும் பழங்கள் நிறைந்து
தொங்கும் பலாமரத்தின்
6.
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல் – சுளைகள் நிறைந்த முற்றத்தையுடைய
வீட்டில் வாழும் தலைவி இரவில்
7.
ஒலிவெள் அருவி ஒலியின் துஞ்சும் – ஓசையுடன் விழும் வெண்மையான அருவியின்
ஒலியைக் கேட்டுக்கொண்டு உறங்கும்
8.
ஊரலஞ் சேரிச் சீறூர் வல்லோன் – அழகிய குடியிருப்புகளையுடைய சிற்றூரில்
வாழும் வலிமையுடைய தலைவனின்
9.
வாள் அரம் பொருத கோள்நேர் எல்வளை – வாளின் கூர்மை போன்ற அரத்தால்
செதுக்கப்பட்ட வளைந்த வடிவமும் ஒளியும் உடைய வளையல்களையும்
10.
அகன் தொடி செறித்த முன்கை ஒள்நுதல் – அகன்ற தொடிகளை அணிந்த முன்கையையும்
ஒளிமிக்க நெற்றியையுமுடைய இளம்பெண்ணின்
11.
திதலை அல்குல் குறுமகள் – தேமல் படர்ந்த இடையையுடைய இளம்ப
12.
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே – குவளை மலரை ஒத்த மையுண்ட கண்களின் மகிழ்ச்சி
தரும் மடப்பம் கலந்த பார்வை.
கொண்டு கூட்டு: மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந்துடி கறங்க, பிற புலம் புக்கு, அவர் அருங்குறும்பு எருக்கி அயா
உயிர்த்தாங்கு, நெஞ்சே! உய்த்தன்று மன்னே; செவ்வேர் சினைதொறும் தூங்கும் பயம் கெழு
பலவின் சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் ஒலிவெள் அருவி ஒலியின் துஞ்சும் ஊரலஞ்
சேரிச் சீறூர் வல்லோன் குறுமகளது வாள் அரம் பொருத கோள்நேர் எல்வளை அகன் தொடி
செறித்த முன்கையும், ஒள்நுதலும், திதலை அல்குலும், குவளை உண்கண் மகிழ் மட நோக்கும்
நினைந்து நீ உயிர்த்தாய் என்று கூட்டுக.
உரை:
நெஞ்சே! சிவந்த வேர்களையுடைய மரங்களின் கிளைகளில் பலாப்பழங்கள்
தொங்கும் முற்றத்தையுடைய வீட்டில் வாழ்பவள் நம் தலைவி. இரவில் ஓசையுடன் விழும் வெள்ளை
அருவியின் ஒலியைக் கேட்டுக்கொண்டே அவள் உறங்குகிறாள். அவள் வாழும் ஊர் பெரிய ஊர் அன்று;
அழகிய தெருக்களையுடைய சிறிய ஊர். வளையல் செய்வதில் வல்லவன், வாள் போன்ற அரத்தால் அராவிச்
செய்த நன்றாகப் பொருந்தும் நேரான ஒளிமிக்க வளையல்களையும் அகன்ற தொடிகளையும் அவள் அணிந்திருக்கிறாள்.
ஒளிமிக்க நெற்றியும் தேமல் படர்ந்த அல்குலும் இளமையும் உடையவள் அவள். குவளை மலர்களைப்
போன்ற மையிட்ட அவளது கண்களின் மகிழ்ச்சி தரும் மென்மையான பார்வை நம்மை அவளிடம் இழுத்துச்
செல்கின்றது. அஃது எப்படிப்பட்டது என்றால், மலையன் என்னும் மன்னன் தன் யானைமேல்
சென்று, புலையன் ஒருவன் பெரிய பறையை ஒலிக்க,
வேற்று நாட்டினுள் புகுந்து அவர்களுடைய அரிய கோட்டைகளை அழித்து இளைத்துப்
பெருமூச்சு விட்டாற்போல், தலைவியின் மகிழ்ச்சியான மடப்பம் கலந்த பார்வை அவளை அடைவதற்கான முயற்சியில்
நம்மை மீண்டும் ஈடுபடுமாறு ஊக்குவிக்கிறது.
சிறப்புக் குறிப்பு:
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன்
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போரிட்ட காலத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவர
முடியாமல் சோழன் தளர்ச்சியுற்றான். அப்போது, தேர்வண் மலையன் என்று அழைக்கப்பட்ட
மலையமான் திருமுடிக்காரி என்ற குறுநில மன்னன் சோழனுக்குத் துணையாகச் சென்று, அவனுக்கு
வெற்றியைப் பெற்றுத் தந்தான். இச்செய்தி புறநானூற்றின் 125-ஆவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது[1].
[1].
முனைவர் இர.
பிரபாகரன். புறநானூறு – மூலமும்
எளிய உரையும். பகுதி 1. சென்னை: காவ்யா பதிப்பகம், (2012).
Comments
Post a Comment