73. பசலையும் அம்பலும் அளித்துச் செல்ப என்ப!

பாடியவர்: மூலங்கீரனார்:

இவரது இயற்பெயர் கீரன் என்பது. இவர் மூலன் என்பவரின் மகனாக இருந்ததால் மூலங்கீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக இப்பாடல் ஒன்று மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

திணை: பாலை

துறை: செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.

துறை விளக்கம்: தலைவன் பிரிந்து செல்ல எண்ணியிருப்பதைத் தலைவி அறிந்து, அதனால் மனம் வருந்தி, தன் தோழியிடம் தன் நிலையை எடுத்துரைக்கிறாள். தலைவன் சென்றுவிட்டால் ஏற்படும் பிரிவுத் துயரம், உடல் மெலிவு, பசலை நோய், ஊரார் பழிச்சொல் ஆகியவற்றை எண்ணி அவள் கலங்குகிறாள்.

பாடலின் பின்னணி:

தலைவன், பொருள் தேடுதல் அல்லது வேறு காரணத்திற்காகப் பிரிந்து செல்லத் திட்டமிடுகிறான். அவனுடைய பிரிவை அறிந்த தலைவி வருந்துகிறாள். மாலை நேரம், ஊரின் சூழல், பேய் போன்ற அச்சமூட்டும் காட்சி ஆகியவற்றைச் சொல்லி, தலைவன் இல்லாத நிலையில் தான் அடையும் துயரத்தை வெளிப்படுத்துகிறாள். “அவர் சென்றால் நான் இங்கே தனியாக இருப்பேன்; என் நெற்றி அழகை இழந்து பசலை நிறம் பெறும்; அயலார் என்னைப் பற்றி பேசுவர்” என்று தலைவி கூறுகிறாள்

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்            5
செல்ப என்ப தாமே செவ்வரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
நுதற் கவின் அழிக்கும் பசலையும்                 10
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே

அருஞ்சொற்பொருள்:

1.   வேனில் – கோடைக்காலம்; முருக்கு – முருக்க மரம்; விளை துணர் - முற்றி விளைந்த காய்களின் கொத்து; அன்ன – போல

2.   மாணா - அழகற்ற; வல் வாய் – வலிய வாய், கொடிய வாய்; பேஎய் – பேய்

3.   மல்லல் - வலிமை; மூதூர் – பழைமையான ஊர்; பலி - வழிபாட்டுப் பொருள்;

4.   உணீஇய – உண்ண

5.   மன்றம் – பொதுவிடம்; போழும் – பிளக்கும்; புன்கண் – துன்பம்

6.   இவண் – இங்கே; ஒழிய – தனியாக இருக்க

7.   செல்ப - செல்ல; செவ்வரி - சிவந்த வரி

8.   நிரைத்தன்ன – ஒழுங்காக வைத்த, வரிசையாக வைத்த; வார் கோல் – நீண்டு திரண்ட தண்டு; வாங்கு – வளைந்த

9.   செறு – வயல்; அன்னம் – அன்னப் பறவை; துஞ்சும் – உறங்கும்

10.  பூக்கெழு – பூக்கள் நிறைந்த; படப்பை – தோட்டம்; சாய்க்காடு – ஓரூர்

11. நுதல் – நெற்றி; கவின் – அழகு; பசலை – தலைவனின் பிரிவால் தலைவியின் உடலில் தோன்றும் நிறமாற்றமும் மெலிவும்

12.  தூற்றும் - பழிக்கும்; அம்பல் - பழிச்சொல்; அளித்து – தந்த

பதவுரை:

1.   வேனில் முருக்கின் விளை துணர் அன்ன - வேனிற்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற

2.   விரல வல் வாய் பேஎய் - அழகற்ற விரல்களையும், வலிய வாயையும்கொண்ட பேய்,

3.   மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய – வளமுள்ள பழமையான ஊரில் மாலைநேரத்து மலர்ப்பலியை உண்பதற்காக,

4.   மன்றம் போழும் புன்கண் மாலை -  மக்கள் கூடும் மன்றத்தைப் பிளந்தாற்போல் கடந்து செல்லும் துன்பம் தரும் மாலைப்பொழுதில்

5.   தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய - தலைவரோடு இருப்பினும் அஞ்சுகின்ற நாம் இங்கு தனித்திருக்க,

6.   செல்ப என்ப தாமே செவ் வரி - செல்வோம் என்கிறார் அவரே! சிவந்த வரிகளைக்கொண்ட

7.   மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர் – மயிரை வரிசையாக வைத்தது போன்ற நீண்டு திரண்டு வளைந்த கதிர்களையுடைய

8.   செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் - செந்நெல் விளையும் அழகிய வயல்களில் அன்னம் துயிலும்

9.   பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என் – மலர்கள் நிறைந்த தோட்டங்களையுடைய சாய்க்காடு என்ற ஊரைப் போன்ற என்

10.  நுதல் கவின் அழிக்கும் பசலையும் - நெற்றியின் அழகினை அழிக்கும் பசலையையும்,

11.  அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே - அயலவர் தூற்றும் பழிச்சொல்லையும் எனக்கு அளித்துவிட்டு

கொண்டு கூட்டு: புன்கண் மாலையில் தம்மொடும் அஞ்சும் நாம் இவண் ஒழிய, என் நுதற் கவினை அழிக்கும் பசலையையும் அயலோர் தூற்றும் அம்பலையும் அளித்துச் செல்வர் என்பர் என்று கூட்டுக.

உரை:

வேனிற்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற அழகற்ற விரல்களையும், வலிய வாயையும்கொண்ட பேய், வளமுள்ள பழமையான ஊரில் மாலைநேரத்து மலர்ப்பலியை உண்பதற்காக, மக்கள்கூடும் பொதுவிடத்தை பிளந்துகொண்டு வரும் துன்பம் தரும் மாலைப்பொழுதில் தலைவரோடு இருப்பினும் நான் அஞ்சுகிறேன். இவ்வாறு தலைவனுடன் இருந்தபோதும் அஞ்சுகின்ற என்னை இங்கே தனியாக விட்டுவிட்டு அவர் பிரிந்து செல்ல எண்ணுகிறார். சிவந்த வரிகளைக்கொண்ட மயிரை வரிசையாக வைத்தது போன்ற நீண்டு திரண்டு வளைந்த கதிர்களையுடைய செந்நெல் விளையும் அழகிய வயல்களில் அன்னம் துயிலும் தோட்டங்களையுடைய ஊர் சாய்க்காடு. அந்த ஊரைப் போன்ற  அழகிய என் நெற்றியில் பசலையையும், அயலவர் தூற்றும் பழிச்சொல்லையும் எனக்கு அளித்துவிட்டு அவர் என்னைப் பிரிந்து செல்கிறேன் என்கிறாரே!

சிறப்புக் குறிப்பு:

இறைச்சி: மலர்ப்பலியை உண்ணும் பொருட்டு மன்றத்தைப் பிளந்து ஆரவாரத்தோடு பேய் வருதலைப்போல் தலைவனின் பிரிவு தன் அழகிய நெற்றியின் அழகை அழிக்கும் பொருட்டு வரும் என்று தலைவி நினைக்கிறாள்.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே