72. புலர்வதுகொல் அவன் நட்பு?

 

72. புலர்வதுகொல் அவன் நட்பு?

 

 

பாடியவர்: இளம்போதியார்

இவர் இயற்றியதாக இப்பாடல் ஒன்று மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

திணை: நெய்தல்

துறை: தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

துறை விளக்கம்: தலைவன் வந்து வேலி அல்லது சுவரின் மறைவிடத்தில் (சிறைப்புறத்தில்) நின்றுகொண்டிருப்பதைத் தோழி அறிந்துகொண்டு அவனுக்குக் கேட்கும்படி தலைவியிடம் உரக்கக் கூறியது. 

 

பாடலின் பின்னணி:

தலைவியும் தலைவனும் களவொழுக்கத்தில் காதலித்து வருகின்றனர். முன்பு தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லாமல், அவளுடன் உறுதியான அன்போடு இருந்தான். ஆனால் இப்போது ஊரார் பழி பேசுவார்களோ என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடற்கரைச் சோலையில் விளையாடும் தலைவியின் தோழியர் தங்கள் காதலைப் பற்றி அறிந்தால், அலர் (பழிச்சொல்) ஏற்படுமோ என்று தலைவன் கவலைப்படுகிறான். அதனால் அவன் தன்னைவிட்டு விலகிவிடுவானோ என்று தலைவி அஞ்சுகிறாள். தலைவியின் மனநிலையை நன்கு அறிந்த தோழி, தலைவியின் மனநிலையைத் தன் மனநிலையாகக் கருதி, அதைச் சிறைப்புறமாக இருக்கும் தலைவனுக்குக்  கேட்குமாறு கூறுகிறாள்.

 

பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது மிகப் பெரிது
அழிதக்கன்றால் தானே கொண்கன்                5
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் எற்
பிரிதல் சூழான்மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்றுகொல் என்னும் அதனால்
புலர்வதுகொல் அவன் நட்பு எனா                 10
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே

அருஞ்சொற்பொருள்:

1. பேணுப – பேணவேண்டியவற்றை, பாதுகாக்க வேண்டியவற்றை;

பேணார்  - பாதுகாக்காதவர், போற்றாதவர்

2. நாணு தக்கதன்று – நாணுவதற்குரியதன்று; காணுங்காலை – காணும்பொழுது

3. செயிர் – குற்றம்; செயிர் தீர் – குற்றமற்ற

4. நினக்கு – உனக்கு

5. அழிதக்கன்றால் – அழியத்தக்கது, (ஆல் – அசைநிலை); கொண்கன் – தலைவன், கணவன்

6. யான் – நான்; யாய் – தாய்; அஞ்சுவல் - அஞ்சுவேன்

7. சூழான் – கருதான், எண்ணமாட்டான்; மன்னே - உறுதியாக; இனியே – இனி

8. கானல் – கடற்கரைச் சோலை; ஆயம் – தோழியர் கூட்டம்; ஆனாது - விடாது

9. வந்தன்று – வந்தது

10. புலர்வது – நீங்குவது, வாடுவது; எனா – என்று

11. அஞ்சுவல் - அஞ்சுவேன்; நெஞ்சத்தானே- என் நெஞ்சினாலேயே

 

பதவுரை:

1. பேணுப பேணார் பெரியோர் என்பது -  பேணவேண்டியவற்றைப் பேணமாட்டார் பெரியோர் என்பது

2. நாணுதக்கன்று அது காணும்காலை - வெட்கப்படத் தகுந்தது, அதனை ஆராய்ந்து பார்த்தால்;

3. உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் - உயிரை ஒத்த குற்றமில்லாத நட்பினை உடைய

4. நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது - உன்னிடத்து நான் மறைத்துப்பேசுவது எவ்வளவு மிகப் பெரியது

5. அழிதக்கன்றால் தானே கொண்கன் – அழிவைத் தருவதாகும்! முன்பெல்லாம் தலைவன்

6. யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் -“நான் என் தாய்க்கு அஞ்சுகிறேன்” என்று சொன்னாலும், தான் என்னைவிட்டுப்

7. பிரிதல் சூழான் மன்னே இனியே – பிரிந்து செல்லுதலைக் கருதமாட்டான்; இப்பொழுதோ,

8. கானல் ஆயம் அறியினும் ஆனாது - கானலில் உள்ள விளையாட்டுத் தோழியருக்குத் தெரிந்தாலும், விடாமல்

9. அலர் வந்தன்றுகொல் என்னும் அதனால் - பழிச்சொல் வந்துவிடுமோ என்று கூறுகின்றான்; அதனால்

10. புலர்வது-கொல் அவன் நட்பு எனா – இல்லாது போய்விடுமோ அவனது நட்பு என்று

11. அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே – நான் அஞ்சுகிறேன் தோழி என் மனத்துக்குள்

கொண்டு கூட்டு: பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக்கன்று; அது காணுங்கால், உயிர் ஓரன்ன நட்பின் நினக்கு யான் மறைத்தல் யாவது; அழிதக்கன்று; யான் யாய் அஞ்சுவல் எனினும்,  கொண்கன் தான் பிரிதல் சூழான்மன்னே; ஆயம் அறியினும் ஆனாது அலர் வந்தன்றுகொல் என்னும்;  அதனால் அவன் நட்பு புலர்வதுகொல் எனா நெஞ்சத்தானே, தோழி, யான் அஞ்சுவல் என்று கூட்டுக.

உரை:

பேண வேண்டியவற்றைப் பெரியவர்கள் பேண மாட்டார்கள் என்பது வெட்கப்படத் தகுந்தது. அதனை ஆராய்ந்து பார்த்தால், உயிரை ஒத்த குற்றமில்லாத நட்பினை உடைய  உன்னிடத்து நான் எவ்வாறு அதை மறைப்பது? முன்பெல்லாம் நான் ”என் தாய்க்கு அஞ்சுகிறேன்” என்று சொன்னாலும், தலைவன் தான் நம்மைவிட்டுப் பிரிவதைக் கருதமாட்டான்.  இப்பொழுதோ, கடற்கரைச் சோலையில் நம்மோடு விளையாடும் தோழியர் கூட்டம் அறிந்தாலும், ”அலர் வருமோ” என்று அஞ்சுகிறான். அதனால், அவனது நட்பு இல்லாமற் போய்விடுமோ என்று என் மனத்துக்குள் நான் அஞ்சுகிறேன்.

 

சிறப்புக் குறிப்பு:

இப்பாடலைத் தலைவியின் கூற்றாக நச்சினார்கினியரும் இளம்பூரனாரும் கருதுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை[1] மற்றும் புலியூர்க் கேசிகன்[2] ஆகிய உரையாசிரியர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிடுகின்றனர். இப்பாடலைத் தலைவியின் கூற்றாகக் கருதுவதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது


[1]. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை. நற்றிணை – மூலமும் விளக்கவுரையும், பாகம்  - 1. சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

[2] . புலியூர்க் கேசிகன். நற்றிணை, பாகம் – 1. சென்னை: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே