71. பிரிதல் வல்லிரோ ஐய?

 

71. பிரிதல் வல்லிரோ ஐய?

 

பாடியவர்: வண்ணப்புறக் கந்தரத்தனார்

இவர் இயற்பெயர் கந்தரத்தனார்.  இவர் வண்ணப்புறம் என்ற ஊரில் வாழ்ந்ததால் இவர் வண்ணப்புறக் கந்தரத்தனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக அகநானூற்றில் ஒரு பாடலும் (49) நற்றிணையில் ஒரு பாடலும் (71) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

 

திணை: பாலை

துறை:  தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.

துறை விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து வேற்றிடம் செல்ல எண்ணும்போது, தோழி அவனிடம் தலைவியின் பிரிவுத் துயரத்தை எடுத்துக்கூறி, அவன் செல்லும் எண்ணத்தை மாற்றி, செல்லாமல் தடுத்துக் கூறுதல் இத்துறையாகும்.

 

பாடலின் பின்னணி:

இப்பாடலில், தலைவன் பொருள் தேடுவதற்காக வேற்றிடத்திற்குச் செல்ல எண்ணுகிறான். அவன் பிரிவை அறிந்த தோழி, தலைவனிடம் சென்று அவனது பிரிவால் தலைவி அடையும் துயரத்தை எடுத்துரைத்து, அவனுடைய செலவு எண்ணத்தைத் தடுத்து நிறுத்த முயல்கிறாள். “பொருள் தேடுதல்” என்ற காரணத்தால் தலைவியை விட்டுப் பிரிவது தகுமா என்றும், தலைவியின் வளையலணிந்த முன்கைகளையும் அவளது மென்மையான மனநிலையையும் நினைத்துப் பார்க்குமாறும் தோழி வேண்டுகிறாள். மேலும், தலைவன் பிரிந்து சென்றால் தலைவி தனிமையில் வருந்துவாள்; தன் துணையை அழைக்கும் சேவலின் கையறு குரலைக் கேட்கும் போதெல்லாம் அவளது துயரம் பெருகி, கூந்தலும் தோற்றமும் வாடி மிகுந்த வேதனை அடைவாள் என்று கூறுகிறாள். இவ்வாறு தலைவியின் பிரிவுத் துயரத்தை உணர்த்தி, தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வதைத் தடுப்பதற்குத் தோழி முயற்சி செய்கிறாள்.

மன்னாப் பொருட் பிணி முன்னி இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து எனப்
பல் மாண் இரத்திர்ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று                     5
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும்                 10
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே

அருஞ்சொற்பொருள்:

1.   மன்னா – நிலையில்லாத; பொருட்பிணி – பொருள்மீது உள்ள ஆசை என்னும் நோய்; முன்னி – எண்ணி

2.   வளை அணி முன்கை - வளையல்கள் அணிந்த முன்கை; இகுளை – தோழி;’ உணர்த்து - உணர்த்துவாயாக

3.   பல் மாண் – பல முறை; இரத்திர் – இரந்து வேண்டினீர்; சென்ம் – செல்க

4.   விடுநள் - விடுவாள், அனுமதிப்பாள்; உரியள் – இயல்புடையவள்

5.   நுதல் – நெற்றி. நீவி – வருடி, தடவி

6.   வல்லீறோ – உங்களால் முடியுமா; ஐய – ஐயா

7.   வகை அமர் நல் இல் - அழகாக அமைந்த நல்ல வீடு; அக – உள்ளே; இறை - சாய்வான கூரையின் உட்புறம், வீட்டின் கூரை விளிம்பு ; உறையும் – வசிக்கும்

8.   வண்ணப் புறா – அழகிய புறா; செங்கால் – சிவந்த கால்; சேவல் – ஆண் புறா

9.   வீழ் துணை – விரும்பிய துணை; பயிரும் – அழைக்கும்; கையறு – செய்வதறியாது, வருந்துகின்ற; முரலுதல் – ஒலித்தல்

10.  நும் இலள் – உம்முடைய தலைவி; புலம்ப – தனிமையில் வருந்த; கேட்டொறும் – கேட்கும்போதெல்லாம்

11.  பொம்மல் – பொலிவுபெற்ற கூந்தலையுடைய தலைவி; ஓதி – கூந்தல்; விதுப்பு – மிகுந்த கலக்கம், நடுக்கம்; உறவே - அடையுயுமாறு

 

பதவுரை:

1.   மன்னா பொருள் பிணி முன்னி இன்னதை - நிலையில்லாத இந்தப் பொருளின் மீது கொண்ட ஆசையைக் கருத்தில்கொண்டு, அதனை

2.   வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என - வளை அணிந்த முன்னங்கைகளை உடைய உன் தோழிக்கு உணர்த்து என்று

3.   பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என - பலமுறை என்னை இரந்து வேண்டினீர்; அவ்வாறே நான் சென்று கூறினால் செல்லுவீராக என்று

4.   விடுநள் ஆதலும் உரியள் விடினே - “செல்லுங்கள்” என்று அவள் உம்மை அனுப்பி வைப்பதும் அவளுடைய இயல்பாகும்; அவ்வாறு அவள் உம்மைச் செல்ல அனுமதித்தாலும்,

5.   கண்ணும் நுதலும் நீவி முன் நின்று – அவள் கண்களையும் நெற்றியையும் தடவிக்கொடுத்து அவள் முன் நின்று,

6.   பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் - அவளைவிட்டுப் பிரிந்து செல்ல உங்களால் முடியுமா, ஐயா! செல்வந்தருடைய

7.   வகை அமர் நல் இல் அக இறை உறையும் – அழகாக அமைந்த நல்ல வீட்டின் உள்ளே இருக்கும் கூரைச்சாய்ப்புகளில் வசிக்கும்

8.   வண்ண புறவின் செம் கால் சேவல் - அழகிய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா

9.   வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் - தான் விரும்பும் தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கச் செயலற்றுப்போய் ஒலிக்கும் ஓசையை

10.  நும் இலள் புலம்ப கேட்டொறும் - உம்மைப் பிரிந்திருப்போள் தனிமையில் கேட்குந்தோறும்

11.  பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே - பொலிவுபெற்ற கூந்தலையுடைய தலைவி மிகுந்த துயரமும் கலக்கமும் அடையுமாறு

 

கொண்டு கூட்டு: மன்னாப் பொருட்பிணி முன்னி பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என விடுநள் ஆதலும் உரியள் கண்ணும் நுதலும் நீவி முன் நின்று பிரிதல் வல்லிரோ? நும் இலள் புலம்பக் கேட்டொறும் பொம்மல் ஓதி பெருவிதுப்புறவே என்று கூட்டுக.

 

உரை:

நிலையில்லாத பொருள்மீது கொண்ட ஆசையால் பிரிந்து செல்ல எண்ணும் நீங்கள், “இந்தச் செய்தியை வளையல்கள் அணிந்த முன்கைகளையுடைய உன் தோழிக்குக் கூறுவாயாக” என்று என்னைப் பலமுறை இரந்து வேண்டினீர். நான் அவளிடம் சென்று கூறினால், “செல்லுங்கள்” என்று உங்களை அனுப்பி வைப்பதும் அவளுடைய இயல்பாக இருக்கலாம். அவ்வாறு அவள் உங்களைச் செல்ல அனுமதித்தாலும், அவளுடைய கண்களையும் நெற்றியையும் அன்புடன் தடவி, அவள் முன் நின்று, பின்னர் அவளைப் பிரிந்து செல்ல உங்களால் முடியுமா, ஐயா?

அழகாக அமைந்த நல்ல வீட்டின் உட்புறக் கூரைப் பகுதியில் வாழும் அழகிய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்பறவை, தான் விரும்பும் துணையை அழைத்துச் செய்வதறியாது வருந்தி எழுப்பும் குரலைக் கேட்கும்போதெல்லாம், உம்முடைய தலைவி தனிமையில் மேலும் துயருற்று வருந்துவாள். பொலிவான கூந்தலையுடைய அவள் பெரிதும் கலங்கி, மிகுந்த பிரிவுத் துயரத்தால் வாடுவாள்.


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே