70. சிறுவெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!

 

70. சிறுவெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே!

 

பாடியவர்: வெள்ளிவீதியார்

இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும் (27, 44, 58, 130, 146, 149, 169, 386), அகநானூற்றில் இரண்டு பாடல்களும் (45, 362), நற்றிணையில் மூன்று பாடல்களும் (70, 335, 348) உள்ளன.

 

திணை: மருதம்

துறை: காமம் மிக்க கழிபடர் கிளவி

துறை விளக்கம்: காமம் மிக்க கழிபடர் கிளவி என்பது, தலைவனைப் பிரிந்த தலைவிக்குக் காதல் மிகுதியால் துயரம் பெருகி, அந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல் அவள் கூறும் சொற்களைக் குறிக்கும்.

பாடலின் பின்னணி:

தலைவனும் தலைவியும் காதலித்து வந்தனர். பின்னர் தலைவன் தலைவியைப் பிரிந்து தன் ஊருக்குச் சென்றுவிட்டான். அவனைப் பிரிந்த தலைவி, பிரிவுத் துயரத்தைத் தாங்க முடியாமல் வருந்துகிறாள். தலைவியின் ஊர் வயல்களும் நீர்நிலைகளும் நிறைந்த மருத நிலமாகும். தலைவியின் ஊருக்கு வரும் ஒரு சிறிய வெள்ளாங்குருகு, அங்குள்ள நீர்த்துறையில் துழாவிக் கெளிற்று மீனை உண்கிறது. பின்னர் அது தலைவன் வாழும் ஊருக்குச் செல்கிறது. இதைக் கண்ட தலைவி, அந்தக் குருகைத் தூதாகக் கருதி, தன் துயரத்தைத் தலைவனிடம் எடுத்துச் சொல்லுமாறு வேண்டுகிறாள்.“சிறிய வெள்ளாங்குருகே!  எங்கள் ஊரில் உள்ள நீர்த்துறையில் கெளிற்று மீனை உண்டு, பின்னர் அவர் ஊருக்குச் செல்கிறாய். நீ என்னிடம் அன்பில்லாமல் இருக்கிறாயோ? அல்லது என்னைப் பற்றிப் பெரிதும் மறந்துவிட்டாயோ? அங்கே செல்லும் நீ, என் அணிகலன்கள் நெகிழ்ந்து கழன்றுவிழும் அளவுக்குப் பிரிவுத் துயரத்தில் நான் வருந்துகிறேன் என்பதை என் தலைவனிடம் சொல்ல மாட்டாயா?” என்று தலைவி குருகிடம் வேண்டுகிறாள்.

இவ்வாறு, பறவையைத் தூதாகக் கொண்டு தன் பிரிவுத் துயரத்தைத் தலைவனிடம் தெரிவிக்கச் சொல்லுதல் இப்பாடலின் மைய உணர்வாகும்.

சிறுவெள்ளாங்குருகே சிறுவெள்ளாங்குருகே
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறுவெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி         5
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே

அருஞ்சொற்பொருள்:

1.   வெள்ளாங்குருகு – ஒருவகைக் குருகு, வெள்ளை நிறமான நீர்ப்பறவை.

2.   அறுவை – ஆடை; தூ – தூய; மடி – மடிப்பு; அன்ன – போன்ற.

3.   நிறம் கிளர் – நிறம் விளங்குகின்ற; தூவி – சிறகு.

4.   உண்துறை – உணவு கிடைக்கும் நீர்த்துறை; துழைஇ – நீரில் புகுந்து துழாவி.

5.   சினைக் கெளிறு – கொழுத்த கெளிற்று மீன்; ஆர்கையை – உண்கிறாய்; பெயர்தி – செல்கிறாய்.

6.   அனைய – அத்தகைய; மறவி – மறதி.

7.   ஆங்கண் – அங்கே; தீம்புனல் – இனிய நீர்; ஈங்கண் – இங்கே; பரக்கும் – பரவும்.

8.   கழனி – வயல்; நல் ஊர் – நல்ல ஊர்; மகிழ்நர் – தலைவன், காதலன்.

9.   இழை – அணிகலன்; நெகிழ்தல் – தளர்ந்து கழன்று விழுதல்; பருவரல் – துன்பம், வருத்தம்; செப்பாதோயே – சொல்லாமல் இருக்கின்றாயே.

பதவுரை:

1.   சிறுவெள்ளாங்குருகே சிறுவெள்ளாங்குருகே – சிறிய வெள்ளாங்குருகே! சிறிய வெள்ளாங்குருகே!

2.   துறைபோகு அறுவைத் தூமடி அன்ன – சலவைத்துறையில் துவைத்த தூய வெள்ளை ஆடையின் மடிப்பைப் போன்ற.

3.   நிறம் கிளர் தூவிச் சிறுவெள்ளாங்குருகே – நிறம் விளங்கும் சிறகுகளையுடைய சிறிய வெள்ளாங்குருகே!

4.   எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ – எங்கள் ஊருக்கு வந்து, எங்கள் நீர்த்துறையில் துழாவி,

5.   சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி – கொழுத்த கெளிற்று மீனை உண்டு, அவருடைய ஊருக்குச் செல்கிறாய்.

6.   அனைய அன்பினையோ பெரு மறவியையோ – எம்மிடம் அத்தகைய அன்பில்லாமல் இருக்கிறாயோ? அல்லது என்னைப் பெரிதும் மறந்துவிட்டாயோ?

7.   ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும் – அங்கே உள்ள இனிய நீர் இங்கே பரவி வருகின்ற.

8.   கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் – கழனிகள் நிறைந்த நல்ல ஊரையுடைய என் தலைவனிடம்,

9.   இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – அணிகலன்கள் நெகிழ்ந்து கழன்றுவிழும் அளவுக்குப் பிரிவுத் துயரத்தில் நான் வருந்துவதைச் சொல்லாமல் இருக்கின்றாயே!

கொண்டு கூட்டு: “சிறுவெள்ளாங்குருகே! சிறுவெள்ளாங்குருகே! துறைபோகு அறுவைத் தூமடி அன்ன நிறம் கிளர் தூவிச் சிறுவெள்ளாங்குருகே! எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ, சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, அனைய அன்பிலையோ பெரு மறவியையோ? ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே” என்று கூட்டுக.

உரை:

சிறிய வெள்ளாங்குருகே! சிறிய வெள்ளாங்குருகே! சலவைத்துறையில் துவைத்த தூய வெள்ளை ஆடையின் மடிப்பைப் போன்ற வெண்மை நிறமும், ஒளிரும் சிறகுகளும் உடைய சிறிய வெள்ளாங்குருகே! நீ எங்கள் ஊருக்கு வந்து, எங்கள் நீர்த்துறையில் துழாவி, கொழுத்த கெளிற்று மீனை உண்டு, பின்னர் அவர் வாழும் ஊருக்குச் செல்கிறாய். நீ என்னிடம் அன்பில்லாமல் இருக்கிறாயோ? அல்லது என்னைப் பெரிதும் மறந்துவிட்டாயோ?

அவர் ஊரில் உள்ள இனிய நீர் இங்குள்ள வயல்களில் பரவுகிறது. அத்தகைய  நல்ல ஊரையுடைய என் தலைவனிடம், அணிகலன்கள் நெகிழ்ந்து கழன்றுவிழும் அளவுக்குப் பிரிவுத் துயரத்தில் நான் வருந்துகிறேன் என்பதை நீ சொல்லாமல் இருக்கின்றாயே! சொல்ல மாட்டாயா?


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே