68. அறனும் அன்றே ஆக்கமும் தேயும்

 

68. அறனும் அன்றே ஆக்கமும் தேயும்

 

பாடியவர்: பிரான் சாத்தனார்

இவர் இயற்றியதாகச் சங்க இலக்கியத்தில் இச்செய்யுள் மட்டுமே காணப்படுகிறது.

 

திணை: குறிஞ்சி

 

துறை: சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.

 

துறை விளக்கம்: தலைவி வீட்டுக்குள் சிறைப்பட்டிருப்பதைத் தலைவன் உணருமாறு, அவன் கேட்கும் வகையில் தோழி தலைவியிடம் பேசுகிறாள். இதன் வாயிலாக, தலைவன் இனியும் காலம் தாழ்த்தாமல் தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறாள்.

 

பாடலின் பின்னணி:

களவொழுக்கத்தில் தலைவியைச் சந்தித்து வந்த தலைவன், தலைவியின்மீது கொண்ட காதல் பெருகிய நிலையிலும், திருமணம் செய்து கொள்வதில் தாமதிக்கிறான். இதனால், தலைவியின் பெற்றோர் அவள் வீட்டைவிட்டு வெளியே செல்லாதவாறு அவளை வீட்டிற்குள் சிறை வைத்துள்ளனர். தலைவியைச் சந்திக்க முடியாத தலைவன், அவளுடைய வீட்டிற்கு அருகில் வந்து நிற்கிறான்.

 

இதனை அறிந்த தோழி, தலைவன் கேட்குமாறு தலைவியிடம் பேசுவதுபோலத் தன் கருத்தை வெளிப்படுத்துகிறாள். மழை பெய்து மலையிலிருந்து புதுவெள்ளம் வரவிருப்பதால், பிற தோழியருடன் சேர்ந்து புதுவெள்ளத்தில் நீராடி விளையாட வேண்டும் என்று கூறுகிறாள். வீட்டிற்குள் இளம்பெண்களை அடைத்து வைத்திருப்பது அறமன்று; அவ்வாறு செய்தால் அவர்களுடைய இளமைச் சிறப்பும் குன்றும் என்று கூறி, அன்னையிடம் பணிந்து வேண்டுபவர் இருந்தால், அவள் தங்களை வெளியே செல்ல அனுமதிப்பாளோ என்றும் வினவுகிறாள்.

 

வெளிப்படையாகப் பார்த்தால், தோழி புதுவெள்ளத்தில் நீராடிச் சென்று விளையாடுவதற்காக அனுமதி கோருகிறாள். ஆனால், அவளுடைய மறைபொருள் தலைவியின் பெற்றோர் அவளைச் சிறை வைத்திருப்பதால், தலைவன் இனியும் தாமதிக்காமல் திருமணம் செய்து கொண்டு அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதாகும்.

 

விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்         5
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே
செல்க என விடுநள்மன் கொல்லோ எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே   10

 

அருஞ்சொற்பொருள்:

1. ஆயம் – தோழியர் கூட்டம், மகளிர் கூட்டம்; ஓரை – பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு.

2. இளையோர் – இளமங்கையர்; இல்லிடத்து – வீட்டில்; இற்செறிந்திருத்தல் – வீட்டிற்குள் சிறைப்பட்டிருத்தல்.

3. அறனும் அன்றே – அறமாகாது; ஆக்கம் – வளர்ச்சி, வளம்; தேய்ம் – குறையும்.

4. உந்தி – தள்ளி, அடித்துக்கொண்டு.

5. நெஞ்சு உண – மனம் மகிழ; ஆடுகம் – விளையாடுவோம், நீராடுவோம்.

6. வல்லிதின் – விரைந்து, வலிமையுடன், வற்புறுத்தி.

7. கொல்லோ – ஐயப்பொருளை உணர்த்தும் இடைச்சொல்; எல் உமிழ்ந்து – ஒளியை வீசி.

8. உரவு – வலிமை; உரும் – இடிக்கும்; உரறும் – முழங்கும்; அரை இருள் நடுநாள் – நள்ளிரவு.

9. நுடங்கு – அசையும்; இலங்கின – ஒளிர்ந்து, மின்னி.

10. ஆடுமழை – ஆரவாரத்துடன் பொழியும் மழை;

 இறுத்தன்று – பெய்துகொண்டிருக்கிறது, பெய்கிறது; கோடு – சிகரம், உச்சி.

 

பதவுரை:

1. விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது – விளையாடும் தோழியர் கூட்டத்துடன் ஓரை விளையாடாமல்,

2. இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் – இளமங்கையர் வீட்டிற்குள் சிறைப்பட்டிருத்தல்

3. அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – அறமாகாது; அவர்களுடைய வளமும், வளர்ச்சியும் குறையும் என்று

4. குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி – சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு, நறுமணமிக்க மலர்களை அடித்துக்கொண்டு

5. பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – பொங்கி வரும் புதுவெள்ளத்தில் மனம் மகிழும்படி நீராடி விளையாடுவோம்;

6. வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே – விரைந்து பணிந்து இதைச் சொல்லுபவரைப் பெற்றால்

7. செல்க என விடுநள்மன் கொல்லோ எல் உமிழ்ந்து – “செல்க” என்று நம்மை அனுப்புவாளோ? ஒளியை வீசி

8. உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – வலிமையான இடி இடித்து முழங்கும் நள்ளிரவில்

9. கொடி நுடங்கு இலங்கின மின்னி – கொடிகள் அசைய, மின்னல் ஒளிர்ந்து

10. ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – ஆரவாரத்துடன் மழை பெய்கிறது; அத்தகைய மழை தலைவனுடைய சிகரம் உயர்ந்த மலையிலும் பெய்கிறது.

 

கொண்டு கூட்டு:

அவர் கோடு உயர் குன்றே ஆடு மழை இறுத்தன்று; அரை இருள் நடுநாள் கொடி நுடங்கு இலங்கின மின்னி, உரவு உரும் உரறும். விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் அறனும் அன்றே, ஆக்கமும் தேய்ம் என, வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறின், யாய் ‘செல்க’ என விடுநள் கொல்லோ? யாமும் குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப் பொங்கி வரு புதுநீர் நெஞ்சு உண ஆடுகம் என்று கூட்டுக.

 

உரை:

இப்போது நள்ளிரவு. அரை இருளில் கொடிகள் காற்றில் அசைகின்றன; மின்னல் ஒளி வீசுகிறது; வலிமையான இடி இடித்து முழங்குகிறது; ஆரவாரத்துடன் பெருமழை பெய்கிறது. இத்தகைய மழை தலைவனுடைய சிகரம் உயர்ந்த மலையிலும் பெய்கிறது.

தோழியருடன் சேர்ந்து ஓரை விளையாடக்கூடாதபடி இளமங்கையரை வீட்டிற்குள் சிறை வைத்திருப்பது அறமன்று. அவ்வாறு அவர்களை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்தால், அவர்களுடைய இளமை வளமும் சிறப்பும் குறைந்துவிடும். இதனை அன்னையிடம் விரைந்து பணிந்து எடுத்துரைப்பவர் ஒருவர் இருந்தால், அன்னை “செல்க” என்று கூறி நம்மை வெளியே செல்ல அனுமதிப்பாளோ? அவ்வாறு அனுமதி கிடைத்தால், சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு நறுமணமிக்க மலர்களை அடித்துக்கொண்டு பொங்கி வரும் புதுவெள்ளத்தில் நாம் மனம் மகிழ்ந்து நீராடி விளையாடலாம்.

 

சிறப்புக் குறிப்பு:

ஓரை விளையாட்டு: ஓரை என்பது பெண்களின் விளையாட்டு என்ற பொருளில் தொல்காப்பியத்திலும், நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் பரவலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஓரை' என்ற சொல்லுக்கு 'ஒலி எழுப்புதல்' அல்லது 'ஆரவாரம்' என்று பொருள். பெண்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி மகிழ்ச்சியாகச் சத்தமிட்டுக் கொண்டு விளையாடியதால் இப்பெயர் பெற்றது. பெண்கள் தனியாகவோ அல்லது தங்களது தோழிகளுடன் (ஆயத்தொடு) இணைந்தோ இந்த விளையாட்டை  விளையாடுவர். இதனைக்  கடலலை வந்து போகும் ஈரமான கடற்கரை மணல், ஆற்று மணல் பரப்புகள், ஆற்றின் சேற்று நிலங்கள், வீட்டின் முற்றத்தில் பரப்பப்பட்ட மணல் போன்ற இடங்களில் விளையாடியதாகச் சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. பிற்காலத்தில் வடமொழி மற்றும் கிரேக்க மொழியின் (Hora) தாக்கத்தால், சோதிடத்தில் நேரத்தைக் குறிக்கும் 'மணி' அல்லது 'இராசி' என்ற பொருளிலும் இச்சொல் புழக்கத்திற்கு வந்தது

 

 


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே