66. ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ?

 

66. ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ?

 

பாடியவர்: மிளைக்கந்தன் நாகனார், இனிச்சந்த நாகனார்

இப்பாடாலை இயற்றியவரின் பெயர் மிளைக்கந்தன் நாகனார் என்று சில நூல்களிலும் இனிச்சந்த நாகனார் என்று வேறு சில நூல்களிலும்  காணப்படுகிறது. இவர் இயற்றியதாக இந்த ஒரு செய்யுள் மட்டுமே சங்க இலக்கியத்தில் உள்ளது.

 

திணை: பாலை

 

துறை: மனை மருட்சி

 

துறை விளக்கம்: மனை மருட்சி என்பது, தலைவி தலைவனுடன் உடன்போக்குச் சென்ற பின்னர், அவள் வீட்டில் இருப்போர் - குறிப்பாக அவளுடைய தாய் - அவளை நினைத்து மனம் கலங்கி, அவளுக்கு நேரக்கூடிய துன்பங்களை எண்ணி வருந்தும் நிலையாகும். இப்பாடலில், தலைவி தன்னை விரும்பிய காதலனுடன் சென்றுவிட்டாள். அவள் சென்ற பாதை கொடிய பாலைநிலப் பாதை. அங்கு வெயிலும் புழுதியும் மிகுந்துள்ளன. அத்தகைய கடுமையான வழியில் சென்ற தலைவியின் மலர் போன்ற கண்கள் சிவந்து, ஒளி மழுங்கி, கலங்கி அழுகின்றனவோ? என்று தாய் கவலைப்படுகிறாள். 

 

பாடலின் பின்னணி:

தலைவி தன் காதலனுடன் உடன்போக்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். அவள் சென்ற பாதை பாலைநிலம். அந்தப் பாதையில் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது; புழுதி எழுகிறது; அங்கு புறாக்கள்கூட வருந்துகின்றன. தலைவி காதலனுடன் விரும்பிச் சென்றிருந்தாலும், அந்தப் பயணத்தின் கடுமையைத் தாய் எண்ணிப் பார்க்கிறாள். மகள் அணிந்திருந்த மாலை சிக்குண்டாலும், வளையல்கள் கழன்று போனாலும், இடுப்பில் அணிந்திருந்த மேகலையில் உள்ள காசுகள் முறை மாறினாலும், அவற்றைச் சரிசெய்துகொள்ள அறியாதவளாய்த் தன் அழகு குன்றுமளவுக்கு மகள் அழுதுகொண்டிருப்பாளோ என்று தாய் அஞ்சுகிறாள்.

 

 

மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்த்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்            5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ
கோதை மயங்கினும் குறுந் தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்
மாண் நலம் கையறக் கலுழும் என்                10
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே

 

அருஞ்சொற்பொருள்:

1. பெய்தனைய - பெய்தாற் போன்ற; சுவைய - சுவையுடைய; புன் காய் – சிறிய காய்

2. உலறு – காய்ந்த; உகாஅய் – உகாய் மரம்; சிதர் – வண்டு;

சிதர்த்து – சிதைத்து, கலைத்து

3. புலம்பு – வருத்தம்; நெடுஞ் சினை – நீண்ட கிளை;

4. பொறி – புள்ளி; கிளர்தல் – விளங்குதல்; எருத்தம் – கழுத்து;

வெறிபட – வெறியுண்டாக, துன்பமுற்று; மறுகி – மயங்கி, கலங்கி

5. புன் புறா- மெல்லிய புறா; உயவும் – வருந்தும்; வெந்துகள் – வெப்பம் மிகுந்த புழுதி;

இயவு – நெறி, வழி

6. நயந்த – விரும்பிய; புணர்ந்தனள் – சேர்ந்தாள்

7. அமர்த்தல் – கலங்குதல்

8. கோதை – பூமாலை; மயங்ககினும் - சிக்குண்டாலும்; குறுந்தொடி – சிறிய வளையல்;

நெகிழ்தல் – கழலுதல்

9. காழ் - காசுகள் கோத்த அணிகலன்; முறை திரியினும் – வரிசை மாறுதல், கலைதல்

10. மாண் நலம் - சிறந்த அழகு; கையற – செய்வதறியாமல், கையறுநிலையில்;

கலுழும் – அழும், கண்ணீர் சிந்தும்

11. மாயக் குறுமகள் – அழகிய இளமகள். மலர் ஏர் – மலர் போன்ற

 

பதவுரை:

1. மிளகு பெய்தனைய சுவைய புன் காய் - மிளகினை இட்டுவைத்தாற் போன்ற காரச்சுவையுடைய சிறிய காய்களை,

2. உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்த்து உண்ட - காய்ந்த கிளைகளையுடைய உகாய் மரத்தில் இருந்த வண்டுகளை விரட்டி உண்ட,

3. புலம்பு கொள் நெடுஞ்சினை ஏறி நினைந்துதன் - வருத்தமுற்ற புறா, நீண்ட கிளையில் ஏறி, தான் செய்ததை நினைந்து, தன்

4. பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி - புள்ளிகள் பொருந்திய கழுத்தைச் சிலிர்த்து மயக்கமுற்று

5. புன் புறா உயவும் வெந்துகள் இயவின் - அத்தகைய புறாவும் வருந்துகின்ற வெப்பம் மிகுந்த புழுதியையுடைய வழியில்

6. நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும் - தான் விரும்பிய காதலனுடன் கூடிச் சென்றாள் ஆயினும்

7. சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ - அவளுடைய கண்கள் சிவந்து, ஒளி குறைந்து, கலங்கியிருக்குமோ?

8. கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும் - அவள் அணிந்த பூமாலை சிக்கிக் கலைந்தாலும், அவளுடைய சிறிய வளையல்கள் கழன்று விழுந்தாலும்,

9. காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் - இடுப்பில் அணிந்துள்ள மேகலையின் காசுகள் வரிசை மாறிக் கலைந்தாலும்,

10. மாண்நலம் கையறக் கலுழும் என் - சிறந்த அழகு குன்றுமாறு செய்வதறியாது அழுகின்ற, என்

11. மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே? - இளமகளின் மலர் போன்ற கண்கள்?

 

கொண்டு கூட்டு: வெந் துகள் இயவின் நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும், கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும், காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும், மாண் நலம் கையறக் கலுழும் என் மாயக் குறுமகள் மலர் ஏர் கண்கள் சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ எனக் கூட்டுக.

 

உரை:

மிளகினைப் போன்ற காரச்சுவையுடைய உகாய்க்காயை வண்டுகளை விரட்டிவிட்டு உண்ட புறா, அந்தக் காயின் காரத்தால் வருந்தி, நீண்ட கிளையில் ஏறி, தான் தின்றதை நினைந்து, தன் புள்ளிகள் விளங்கும் கழுத்தைச் சிலிர்த்து, வெறிப்புற்றுக் கலங்கி வருந்துகிறது. அத்தகைய புறாவும் வருந்துகின்ற வெப்பம் மிகுந்த புழுதிப் பாதையில் என் மகள் தான் விரும்பிய காதலனுடன் சென்றிருக்கிறாள். அவள் விரும்பியே காதலனுடன் சென்றிருந்தாலும், அந்தக் கொடிய வழியின் வெப்பத்தாலும் பயணத் துன்பத்தாலும் அவளுடைய கண்கள் சிவந்து, அவற்றின் இயல்பான ஒளி மழுங்கிக் கலங்கியிருக்குமோ?

மேலும், அவள் அணிந்த பூமாலை சிக்கிக் கலைந்தாலும், சிறிய வளையல்கள் கழன்றாலும், இடையணியில் உள்ள காசுகளின் வரிசை மாறிக் கலைந்தாலும், அவற்றைச் சரிசெய்துகொள்ள இயலாமல், தன் சிறந்த அழகு குன்றுமாறு என் அழகிய இளமகள் அழுதுகொண்டிருப்பாளோ?

 

சிறப்புக் குறிப்பு:

இறைச்சி: காரச்சுவையுடைய உகாய்க்காயை உண்ட புறா, அதனால் ஏற்பட்ட துன்பத்தால் நீண்ட கிளையில் ஏறி கலங்கி வருந்துவதுபோல, தன் மகளும் காதலனுடன் உடன்போக்குச் சென்ற பின்னர் கடுமையான பாலைநிலப் பயணத்தால் வருந்துவாளோ என்று தாய் அஞ்சுகிறாள்.

 

உகாய்க்காய்: அகநானூறு 293-ஆம் பாடல், உகாயின் முற்றிய பழம் கருமை நிறத்தில், மணிக்காசு போன்ற தோற்றமுடையது என்று வர்ணிக்கிறது. உகாய்க்காய்கள் நெல்லைப் போல சிறிய அளவிலும், நன்கு முதிர்ந்த பிறகு மிளகு போல உருண்டையாகவும் இருக்கும். பூக்கள் சிறியதாக, பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்து முடித்ததும் காய்கள் தோன்றி, அவை பழுக்கும்போது பழங்கள் சுமார் 2.5–5 மி.மீ. விட்டத்துடன் உருண்டையான  சிவப்பு/ஊதா நிறத்துடன் கொத்துகளாகத் தொங்கும். இதன் தாவரவியல் பெயர் Salvadora persica. நன்கு பழுத்த உகாம்பழங்களை வறட்சிப் பகுதிகளில் வாழும் மக்கள் உணவாக உண்கிறார்கள்.  வயிற்றுப் பூச்சிகளை அழிக்கவும், செரிமானக்கோளாறுகளை நீக்கவும், சிறுநீரகக் கோளாறுகளைச் சரிப்படுத்தவும், மூட்டுவலியை நீக்கவும் இது மருந்தாகவும் பயனாகிறது. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், நாள்பட்ட காய்ச்சலால் ஏற்படும் மண்ணீரல் மற்றும் கல்லீரல் வீக்கத்தைக் குறைப்பதற்கு உகாய்க்காயின் சாறு ஒரு துணை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே