61. கண்ணும் படுமோ என்றிசின் யானே!

 

61. கண்ணும் படுமோ என்றிசின் யானே!

 

 

பாடியவர்: சிறுமோலிகனார்
இவர் இயற்றியதாகச் சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.

 

திணை: குறிஞ்சி

 

துறை: தலைவி தோழிக்குச் சொல்லியது.

 

பாடலின் பின்னணி:

தலைவனும் தலைவியும் காதலித்து வருகின்றனர். தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்தப் பிரிவால் தலைவி பெரிதும் வருந்துகிறாள். தலைவியின் காதல் களவொழுக்கத்தில் நடைபெறுவதால், தோழியும் தலைவியும் தங்கள் காதல் நிலையை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. இந்நிலையில், தலைவனின் பிரிவால் மிகுந்த துயரமடைந்த தலைவியால் உறங்க முடியவில்லை. ஒரு நாள் இரவு அவள் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும்போது, அவளுடைய அன்னை, “இன்னும் உறங்கவில்லையா?” என்று கேட்கிறாள். அன்னையிடம் தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படையாகக் கூற முடியாத தலைவி, தன் மனத்தில் தோன்றிய எண்ணங்களைத் தோழியிடம் கூறுகிறாள்.

 

கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறுமகள் என்றலின்               5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ என்றிசின் யானே               10

 

அருஞ்சொற்பொருள்:

1. எல்ல – ஒரு விளிப்புச் சொல்; அல்கல் – நேற்று இரவு.

2. வேணவா – மிகுந்த விருப்பம், வேட்கை; நலிய – வருந்த; உயிர்த்தல் – பெருமூச்சுவிடுதல்.

3. ஏ – அம்பு; மான் பிணை – பெண்மான்.

4. மருங்கு – நிலை, தன்மை, அளவு.

5. துஞ்சாயோ – தூங்கவில்லையோ?; குறுமகள் – இளைய மகள்.

6. படு மழை – பெருமழை; மருங்கில் – அருகில்.

7. சிரல் – மீன்கொத்திப் பறவை; தளவு – முல்லை; பரல் – பரல் கற்கள்; அவல் – பள்ளம்.

8. கான் – காடு; கெழு – வளம் பொருந்திய; படர்ந்தோர் – பிரிந்து சென்றவரை நினைத்திருப்போர்.

9. கண்ணும் படுமோ – உறக்கம் வருமோ?; என்றிசின் – என்று சொன்னேன், என்று எண்ணினேன்.

 

பதவுரை:

1. கேளாய் எல்ல தோழி அல்கல் – கேட்பாயாக, ஏடீ தோழி! நேற்று இரவு

2. வேணவா நலிய வெய்ய உயிரா – மிகுந்த வேட்கையால் வருந்திப் பெருமூச்சுவிட்டு,

3. ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – அம்புபட்ட பெண்மானைப்போல வருந்தியிருந்தேன்.

4. துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – என் துயரத்தின் நிலையை அறிந்தவளைப்போல என் அன்னை,

5. துஞ்சாயோ என் குறுமகள் என்றலின் – “என் இளைய மகளே! நீ தூங்கவில்லையா?” என்று கேட்டாள்.

6. சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் – என் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல், அவற்றை மெல்ல என் நெஞ்சத்திலேயே அடக்கிக்கொண்டு,

7. படு மழை பொழிந்த பாறை மருங்கில் – பெருமழை பொழிந்த பாறையின் அருகில் உள்ள,

8. சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் – மீன்கொத்திப் பறவையின் அலகைப் போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லைக் கொடிகளும், பரல் கற்கள் நிறைந்த பள்ளங்களும் உடைய,

9. கான் கெழு நாடன் படர்ந்தோர்க்குக் – காடு வளம் பொருந்திய நாட்டின் தலைவனைப் பிரிந்து, அவனை நினைத்திருப்பவளுக்கு,

10. கண்ணும் படுமோ என்றிசின் யானே – “உறக்கம்தான் வருமோ?” என்று எனக்குள் நானே கூறிக்கொண்டேன்.

 

உரை:

தோழி! நேற்று இரவு, தலைவனைப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட மிகுந்த ஏக்கமும் வேட்கையும் என்னை மிகவும் வருத்தின. அம்புபட்டுத் தன் இணையைத் தேடி வருந்தும் பெண்மானைப்போல நானும் துயருற்றேன். என் துயரத்தின் நிலையை அறிந்தவளைப்போல என் அன்னை, “என் இள மகளே! நீ இன்னும் தூங்கவில்லையா?” என்று கேட்டாள். ஆனால், தலைவனுடன் கொண்டுள்ள என் காதலை அன்னையிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. எனவே, என் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை வெளியில் சொல்லாமல் அடக்கிக்கொண்டேன். ”பெருமழை பொழிந்த பாறையின் அருகில், மீன்கொத்திப் பறவையின் அலகைப் போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லைக் கொடிகளும், பரல் கற்கள் நிறைந்த பள்ளங்களும் உள்ள காடு வளம் பொருந்திய நாட்டின் தலைவனைப் பிரிந்திருக்கும் எனக்கு உறக்கம் எப்படி வரும்?” என்று எனக்குள் நானே கூறிக்கொண்டேன்.


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே