100. உள்ளுதொறும் நகுவேன், தோழி!
100.
உள்ளுதொறும் நகுவேன், தோழி!
பாடியவர்:
பரணர்
சங்க காலப் புலவர்களிலேயே மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால்
பாடப்படுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “பரணன் பாடினன்’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 34 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், குறுந்தொகையில் 16 செய்யுட்களும், பதிற்றுப்பத்தின்
ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப் பஃறேர்
இளஞ்சேட்சென்னி,
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன்
வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான்
கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர். இவருடைய பாடல்கள் வரலாற்றுச் செய்திகள்
நிறைந்தவை. இவர்
கபிலரின் நண்பர். மருதத்
திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர். இவர் பதிற்றுப்பத்தில் கடல் பிறக்கோட்டிய
வேல்குழு குட்டுவனைப் பாடியதற்கு, உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன்
சேரனையும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
திணை: மருதம்
துறை: பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப
விறலிக்கு உடம்படச் சொல்லியது.
துறை
விளக்கம்: தலைவனுடன் தொடர்புடைய
பரத்தை, தன் தோழியாகிய விறலியிடம் பேசுவதுபோலக் கூறுகிறாள். ஆனால், அவள் பேசுவதைக்
தலைவியின் தோழியரும் கேட்கும்படிப் பேசுகிறாள். அவளுடைய நோக்கம், தலைவன் தன்னிடம்
செய்த செயலையும், தன்னைத் தலைவியிடம் காட்டிக் கொடுப்பதாகச் சொன்னபோது அவன்
அஞ்சியதையும் தலைவியின் தோழியர் மூலம் தலைவிக்குத் தெரியச் செய்வதாகும்.
பாடலின் பின்னணி:
தலைவன் மருதநிலத் தலைவன். அவன்
பரத்தையோடு தொடர்பு கொண்டிருக்கிறான். ஒருமுறை அவன் பரத்தையிடம் வருகிறான்.
அவளுடைய கூந்தலைப் பற்றுகிறான்; அவளுடைய ஒளிவிடும் வளையல்களைக் கழற்றுகிறான்.
இதனால் அவர்களுக்குள் பூசல் ஏற்படுகிறது. பரத்தை கோபமடைந்து, “நான் உன் மனைவியிடம்
சென்று இதைச் சொல்லிவிடுவேன்” என்று எச்சரிக்கிறாள். தலைவன் தன் மனைவிக்குத்
தன்னுடைய பரத்தையுறவு தெரியக்கூடும் என்று அஞ்சி நடுங்குகிறான். அந்த நேரத்தில்
தலைவன் நடுங்கிய காட்சி, இப்போது நினைத்தாலும் தனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது
என்று பரத்தை கூறுகிறாள். அவள் இதைத் தன் தோழியாகிய விறலியிடம் கூறுவதுபோலக்
கூறினாலும், தலைவியின் தோழியர் கேட்கும்படிப் பேசுகிறாள். அதனால் செய்தி
தலைவியிடம் சென்றடையும். இவ்வாறு பரத்தை ஒரே நேரத்தில் தலைவனைப் பழித்தும், தன்
ஆத்திரத்தை வெளிப்படுத்தியும், தலைவிக்குத் தன் இருப்பையும் உணர்த்துகிறாள்.
உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல் 5
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் 10
மண் ஆர் கண்ணின் அதிரும்
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே
அருஞ்சொற்பொருள்:
1.
உள்ளுதோறும் – நினைக்கும்பொழுதெல்லாம்;
நகுவேன் - சிரிப்பேன்; வள் உகிர் – கூரிய நகங்கள்
2.
மாரி – கார்காலம்; கூரல் – கூர்மையான மூக்கு
3.
குண்டு - ஆழம்; ஆம்பல் – ஆம்பல் மலர்;
தண் துறை ஊரன் – குளிர்ச்சியான நீர்த்துறையையுடைய தலைவன்
4.
தேம் கமழ் - இனிய மணம் கமழும்; ஐம்பால் - ஐந்து பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்ட கூந்தல்; என் வயின் – என்னிடம்
5.
வான் கோல் – வெள்ளிய வேலைப்பாடு உடைய;
எல் வளை- ஒளி பொருந்திய வளையல்; வௌவிய - கழற்றிய; பூசல் – தகராறு
6.
சினவிய – கோபம் கொண்ட; சினவாது – கோபம்
கொள்ளாமல்
7.
மனையோட்கு – மனைவிக்கு; உரைப்பல் -
சொல்வேன்; முனை ஊர் – ஊரின் எல்லைப் பகுதி
8.
பல் ஆ நெடுநிரை - பல பசுக்கள் கூடிய
பெரிய மந்தை; வில்லின் ஒய்யும் – வில்லால் போரிட்டுக் கவர்ந்து செல்லும்
9.
தேர் வண் - தேர்களைக் கொடையாகக் கொடுக்கும்; முந்தை -
முன்பு; பேர் இசை – சிறப்பான இசை;
10. புலம்
புரி – வேற்று நாடிலிருந்து வந்த; வயிரியர் - கூத்தர்; நலம் புரி முழவின் –
நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின்
11. மண்
ஆர் கண்ணின் – முழவின் கரிய சாந்து பூசப்பட்ட இடம்
12. நன்னர்
ஆளன் – நன்மையை விரும்புபவன் (தலைவன்); நடுங்கு அஞர் நிலை – நடுங்கி வருந்திய நிலை
பதவுரை:
1.
உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்
- தோழி! நினைக்கும் போதெல்லாம் நான் சிரிக்கின்றேன். பெரிய நகங்களையுடைய
2. மாரிக் கொக்கின் கூரல் அன்ன -
மழைக்காலக் கொக்கின் கூரிய மூக்கைப் போன்ற
3. குண்டுநீர் ஆம்பல் தண் துறை ஊரன் - ஆம்பல் மலர்கள் மலரும் ஆழமான நீரையுடைய
குளிர்ந்த துறையைச் சேர்ந்த தலைவன்,
4. தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின் - இனிய மணம் கமழும் என் ஐம்பால் கூந்தலைப்
பற்றியும், என் கையில் இருந்த
5. வான் கோல் எல் வளை வெளவிய பூசல் -
ஒளிவிடும் வளையல்களைக் கழற்றியும் செய்த சச்சரவினால்,
6. சினவிய முகத்து “சினவாது சென்று நின் -
நான் கோபம் கொண்ட முகத்துடன், “கோபப்படாமல் சென்று, இதனை உன்,
7. மனையோட்கு உரைப்பல்” என்றலின் முனை
ஊர்ப் - மனைவியிடம் சொல்லிவிடுவேன்” என்று கூறியதால், ஊரின் எல்லையிலுள்ள
8. பல் ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும் - பல பெரிய ஆனிரைக் கூட்டங்களை வில்லால்
அடக்கிக் கைப்பற்றிச் செலுத்தும்,
9. தேர் வண் மலையன் முந்தை பேர் இசைப் -
இரவலர்க்குத் தேர்களை வழங்கும் வள்ளலான மலையமான் திருமுடிக்காரியின் முன்னிலையில்,
சிறப்பாக ஒலிக்கும்,
10. புலம் புரி வயிரியர் நலம் புரி
முழவின் - வேற்று நாட்டிலிருந்து வந்த
புகழ்பெற்ற கூத்தர்களின், முழவின்
11. மண் ஆர் கண்ணின் அதிரும் - மண்ணால் பூசப்பட்ட தோல்பகுதி அதிர்வதைப்போல
12. நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே -
நன்மையை விரும்பும் தலைவன் நடுங்கி வருந்திய நிலையை
கொண்டு கூட்டு: குண்டுநீர் ஆம்பல் தண் துறை ஊரன், தேம்
கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் வான் கோல் எல் வளை வெளவிய பூசல், சினவிய முகத்து,
“சினவாது சென்று நின் மனையோட்கு உரைப்பல்” என்றலின், முனை ஊர்ப் பல் ஆ நெடு நிரை
வில்லின் ஒய்யும் தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் புலம் புரி வயிரியர் நலம்
புரி முழவின் மண் ஆர் கண்ணின் அதிரும் நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே
உள்ளுதொறும் நகுவேன், தோழி என்று கூட்டுக.
உரை:
தோழி! பெரிய நகங்களையுடைய மழைக்காலக் கொக்கின் கூரிய மூக்கைப்
போன்ற ஆம்பல் மலர்கள் மலரும் ஆழமான நீரையுடைய குளிர்ந்த துறையைச் சேர்ந்த தலைவன் அவன்.
இனிய மணம் வீசும் என் ஐம்பால் கூந்தலைப் பற்றியும், என் கையில்
இருந்த ஒளிவிடும் வளையல்களைக் கழற்றியும் அவன் என்னுடன் சச்சரவு செய்தான். அதனால் நான்
சினம் கொண்ட முகத்துடன், ‘சினம் கொள்ளாமல்,
உன் மனைவியிடம் சென்று, நடந்ததை எல்லாம் சொல்லிவிடுவேன்’ என்று கூறினேன். அதைக்
கேட்டவுடன், ஊர்க் கோடியில் உள்ள பல நெடிய
ஆனிரைகளை விற் போரால் வென்று செலுத்திக் கொண்டு வருபவனும், வருகின்ற இரவலர்க்குத் தேர்
கொடுப்பவனும் ஆகிய மலையமானின் அவைக்கு முன்பு, வேற்று நாட்டிலிருந்து வந்த புகழ்பெற்ற
கூத்தர்களின் முழவு முழங்கும்போது அதன் மண்ணால் பூசப்பட்ட தோல் அதிர்வதுபோல அவன் உடல்
நடுங்கியது. அவ்வாறு அவன் அஞ்சியும் நடுங்கியும் நின்ற காட்சியை நினைக்கும்போதெல்லாம்
நான் சிரிக்கின்றேன்.
Comments
Post a Comment