60. சாயும் நெய்தலும் ஓம்புமதி

 

60. சாயும் நெய்தலும் ஓம்புமதி

 

பாடியவர்: தூங்கலோரியார்

தூங்கல் என்பது கொங்கு நாட்டு ஊர்களில் ஒன்றான தூங்கலூரைக் குறிக்கிறது. இப்புலவரின் இயற்பெயர் ஓரி. இவர் தூங்கல் என்ற ஊரைச் சார்ந்தவராகையால் இவர் தூங்கலோரியார் என்று  அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக நற்றிணையில் ஒரு செய்யுளும் (60), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும்(151, 295), அகநானூற்றில் ஒரு செய்யுளும்(226) உள்ளன.

திணை: மருதம்

துறை: சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது

துறை விளக்கம்: தலைவனைச் சந்திக்க முடியாதவாறு தலைவி வீட்டினுள் அடைக்கப்பட்டிருக்கிறாள். அவளைச் சந்திக்க விரும்பும் தலைவனுக்குத் தோழி, வயலில் உழுகின்ற உழவர்களிடம் பேசுவதுபோல மறைமுகமாக ஒரு செய்தியை அறிவுறுத்துகிறாள். 

 

பாடலின் பின்னணி:

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் தனியாகச் சந்தித்து காதலித்து வந்தனர். அவர்களுடைய காதல் மேலும் சிறப்பாக வளர வேண்டும் என்பதற்காக, அவர்கள் மறைமுகமாகச் சந்தித்து வந்தனர். இந்நிலையில், தலைவியை அவளுடைய பெற்றோர் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு செய்துவிட்டனர். அதனால், தலைவனால் அவளைத் தனியாகச் சந்திக்க முடியவில்லை.

தலைவி இதனால் மிகவும் வருந்துவதைக் கண்ட தோழி, தலைவனிடம் இந்த நிலைமையைத் தெரிவித்து, அவன் விரைவில் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்று அவனைத் தூண்ட நினைத்தாள். ஆனால், இதை நேரடியாகச் சொல்வது தலைவனின் பெருமைக்கு ஏற்றதல்ல என்பதை அவள் அறிந்திருந்தாள்.

ஒருநாள் தலைவன் தோழியின் வீட்டிற்கு அருகில் மறைந்து நின்றிருப்பதைத் தோழி கண்டாள். அப்போது வயலில் நாற்று நடுவதற்குச் செல்லும் உழவன் ஒருவனிடம் பேசுவது போல, தலைவன் கேட்கும்படி, “உழவனே! நீ விடியற்காலையில் நல்ல உணவு உண்டு, மற்ற உழவர்களுடன் வயலுக்குச் செல்கிறாய். அங்கே இருக்கும் பசுமையான கோரையையும் நெய்தலையும் அழிக்காமல் பாதுகாப்பாயாக. இப்போது எங்கள் வீட்டில் இருக்கும் தலைவி, அந்தப் பூக்களையும் புற்களையும் வளைவாகவும் தழையாகவும் தொடுத்து அணிந்து மகிழ்வாள்.” என்று கூறினாள். இவ்வாறு தோழி கூறுவதன் மூலம், தலைவி வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும், தலைவனைச் சந்திக்க முடியாமல் அவள் வருந்தி மெலிந்து வருவதையும்,  தலைவன் விரைவில் அவளை மணந்துகொள்ள வேண்டும் என்பதையும் மறைமுகமாகத் தெரிவித்தாள்.

 

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு           5
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறிஆயின் அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
மா இருங் கூந்தல் மடந்தை                      10
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே

அருஞ்சொற்பொருள்:

1. கண்டன்ன – பார்த்தாற்போல், போன்ற; புணர் - பொருந்திய; நிவப்பு – உயர்ச்சி

2. கூட்டு - கூடு, தொகுப்பு

3. கண்படை - உறக்கம்; பெறாஅது – பெறாமல்; தண் – குளிர்ச்சியான;

புலர் விடியல் – இருள் நீங்கும் விடியற்காலை

4. கருங்கண் – கருமையான கண்; வராஅல் – வராஅல் மீன்;

மிளிர்வை – குழம்பில் இடும் கறித்துண்டு 

5. புகர்வை - உணவு; அரிசிப் பொம்மல் – அரிசியால் சமைத்த

6. கவர் படு கை – விருப்பத்துடன் எடுத்த கை; கழுமல் - மயக்கம்; மாந்தி – உண்டு

7. செறு - வயல்; நாறு முடி அழுத்த – நாற்றுக்களை நடுவதற்கு

8. நடுநர் - நடுபவர்கள்; அவண் – அங்கே

9. சாய் – கோரை, கோரைப்புல்; ஓம்பு – பாதுகாப்பாயாக; மதி –முன்னிலை அசைச்சொல்

10. மாயிருங் கூந்தல் – பெரிய கரிய கூந்தல்; மடந்தை – இளம்பெண்

11. ஆய் - அழகு; வளை - வளையல்; அணியும் ஆர் அவையே – அவை அணிவதற்கு உரியவாம் (அணியுமார் – ஆர் அசைநிலை, அவையே – ஏகாரம் அசைநிலை)

 

பதவுரை:

1. மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின் - மலையைப் போன்ற நிலை பொருந்திய  உயர்ந்த

2. பெரு நெல் பல கூட்டு எருமை உழவ - பல நெற்குதிர்களையும் எருமைகளையும் உடைய உழவனே!

3. கண்படை பெறாஅது தண் புலர் விடியல் - கண்ணுறக்கம் இன்றி, குளிர்ந்த புலர்கின்ற விடியற்காலையில்,

4. கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு - கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டுகள் இட்டுச் சமைத்த குழம்புடன்

5. புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு - உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றை

6. கவர் படு கையை கழும மாந்தி - விருப்பத்துடன் கையில் எடுத்து வாய் கொள்ள உண்டு,

7. நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் - நீர் பாய்ச்சிய வயலில் நாற்று முடிகளை நடுவதற்காக, உன்னுடைய

8. நடுநரொடு சேறி ஆயின் அவண நாற்று - நடுபவர்களுடன் (உழத்தியர்களுடன்) சென்றால், அங்கிருக்கும்

9. சாயும் நெய்தலும் ஓம்புமதி எம் இல் - கோரைகளையும் நெய்தல்களையும் களையாமல் விட்டுவைப்பாயாக; எமது இல்லத்தில் உள்ள

10. மா இரும் கூந்தல் மடந்தை - பெரிய கரிய கூந்தலையுடைய இளம் பெண்ணுக்கு (தலைவிக்கு)

11. ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே - அவை அழகிய வளையல்களாகவும் ஆடையாகவும் அணிதற்குரியனவாகும்.

 

கொண்டு கூட்டு: பெருநெற் பல்கூட்டு எருமை உழவ! தண் புலர் விடியலில் கண்படை பெறாது, கருங்கண் வராலின் பெருந்தடியும் மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ்சோறும் உண்டு, கவர்படு கையை கழும மாந்தி, நீருறு செறுவின் நாறுமுடி அழுத்த நின் நடுநரொடு சேறி ஆயின், அவண் சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில் மா இருங்கூந்தல் மடந்தை ஆய்வளை கூட்டும் அணியுமார் அவையே என்று கூட்டுக.

உரை:

மலையைப் போன்ற உயர்ந்த பல நெற்கூடுகளையும் (குதிர்களையும்) எருமைகளையும் உடைய உழவனே! நீ உறக்கமின்றி, அதிகாலையிலேயே எழுந்து, கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரிய துண்டுகளை வதக்கிய பொறியலொடு, வெண்ணிற அரிசிச் சோற்றை விருப்பத்துடன் கையில் அள்ளி நிறைவாக உண்டு, நீர் நிறைந்த வயலில் நாற்றுமுடி நடுவதற்காக உன்னுடைய ஆட்களுடன் செல்வாயாயின், அங்கே வளர்ந்துள்ள கோரைப் புல்லையும் நெய்தல் மலர்களையும் அழிக்காமல் காப்பாற்றுவாயாக! எங்களது இல்லத்தில் உள்ள பெரிய கரிய கூந்தலை உடைய தலைவி, அவற்றை அழகிய வளையலாகவும் தழையாடையாகவும் அணிந்துகொள்வாள்.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே