59. நெஞ்சத்து உள்ளினள் உயவுமார் இனியே!
59. நெஞ்சத்து உள்ளினள் உயவுமார் இனியே!
பாடியவர்:
கபிலர்
இவரைப்
பற்றிய செய்திகளை முதற் பாடலின் உரையில் காணலாம்.
திணை: முல்லை
துறை: வினைமுற்றி
மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது
துறை விளக்கம்: தலைவன் ஒரு வினையை முடிப்பதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றிருந்தான். அவன்
மேற்கொண்ட செயலை முடித்துவிட்டு மீண்டும் தன் ஊரை நோக்கித் திரும்புகிறான்.
அப்போது, தன் தேர்ப்பாகனிடம் தேரை விரைவாகச் செலுத்துமாறு கூறுவது.
பாடலின் பின்னணி:
காட்டில் வேட்டையாடும் வேடுவன்
ஒருவன், மரத்தில் ஏறி உடும்பைப் பிடித்து, மண்ணைத் தோண்டி வரித் தவளையை எடுத்து, உயரமான
புற்றுக்குள்ளிருக்கும் ஈயல்களைக் கிண்டி, இரவில் ஓடும் முயலையும் வேட்டையாடித் தன்
தோளில் சுமந்து வருகிறான். ஆனால், வீட்டிற்கு வந்ததும் தான் கொண்டுவந்த பலவித வேட்டைப்
பண்டங்களின் சுமையையும் மறக்கும் அளவுக்கு, இரண்டு மடங்காகக் காய்ச்சி வைத்திருந்த
கள்ளையுண்டு இன்பக் களிப்பில் சொக்கிப்போய்க் கிடப்பது அவனது முல்லை நிலத்துச் சிற்றூர்.
அத்தகைய கொழுப்பும் வளமும் நிறைந்த நிலப்பகுதியில்தான், தலைவன் தன்னைப் பிரிந்து சென்றுவிட்டானே
என்ற ஏக்கத்தில் தலைவி வாழ்கிறாள். இப்போது கார்காலம் தொடங்கி, முல்லைப் புதர்களில்
நுண்மையான மொட்டுகள் மலர்ந்து நறுமணம் வீசத் தொடங்கிவிட்டதால், தலைவனின் வருகையைத்
தலைவி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘அவளுடைய பொறுமை எல்லை கடந்துவிட்டது;
மேலும் தாமதித்தால் அவள் மிகவும் வருந்துவாள். எனவே தேரை விரைந்து செலுத்துவாயாக’ என்று தலைவன் தேர்ப்பாகனிடம்
கூறுகிறான்.
உடும்பு
கொலீஇ வரி நுணல் அகழ்ந்து
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் 5
வன் புலக் காட்டு நாட்டதுவேஅன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலை மணந்தன்று உயவுமார் இனியே 10
அருஞ்சொற்பொருள்:
1.கொலீஇ – குத்திக் கொன்று; வரி – கோடு; நுணல்
– தவளை;
அகழ்ந்து – தோண்டி எடுத்து
2. நெடுங் கோடு - உயர்ந்த உச்சி; புற்றத்து
- புற்றை;
3. எல் – இரவு; எறிந்த – அழித்த (வேட்டையாடிய);
சுவல் – தோள்
4. தொடை – தொகுதி, சுமை
5. இரு மடை – மிகுதியாக, இரண்டு மடங்காக; இன்
களி – இனிய மயக்கம்; செருக்கும் –செருக்குடன் இருக்கும்
6. வன்புலக் காடு – கடினமான காடு
7. வயின் - இடம்
8. உள்ளுவோள் – நினைத்துக்கொண்டிருப்பவள்;
உறைவோள் - வாழ்பவள்
9. நுண் முகை – நுண்ணிய அரும்பு; அவிழ்ந்த
- மலர்ந்த; புறவு – காடு
10. பொறை தலைமணந்தன்று - பொறுமையின் எல்லையை அடைந்து; உயவுதல் – வருந்துதல்; ஆர் – அசைச்சொல்
பதவுரை:
1. உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து – உடும்பைக்
குத்திக் கொன்று, கோடுகளையுடைய தவளையைத் தோண்டி எடுத்து,
2. நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
– நெடிய உச்சியையுடைய புற்றைக் கிண்டி, அதிலுள்ள ஈயல்களை எடுத்துக்கொண்டு,
3. எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல – இரவில்
முயலை வேட்டையாடிப் பிடித்த வேட்டுவனுடைய தோளில்,
4. பல் வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து
– பலவகையான வேட்டைப் பொருட்களைக் கொண்ட சுமையையும் மறந்து, வீட்டில்,
5. இருமடைக் கள்ளின் இன் களி செருக்கும் –
மிகுதியாகப் பருகிய கள்ளின் இனிய களிப்பில் மயங்கிக் கிடக்கும்,
6. வன்புலக் காட்டு நாட்டது அன்பு கலந்து
– கடினமான காட்டை உடைய அந்த நாட்டில், அன்பு
கொண்டு,
7. நம்வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
– நம்மை விரும்பிய மனநிலையுடன் தன் நெஞ்சத்தில்,
8. உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை – நம்மை நினைத்துக்கொண்டு
வாழும் தலைவியின் ஊர், முல்லையின்
9. நுண்முகை அவிழ்ந்த புறவின் –நுண்ணிய அரும்புகள்
மலர்ந்த காட்டில்,
10. பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே –
அவளுடைய பொறுமை எல்லையை அடைந்துவிட்டது; இனி அவள் வருந்துவாள்
கொண்டு கூட்டு: அன்பு கலந்து, நம்வயின் புரிந்த கொள்கையொடு
நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் ஊரே; உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, நெடுங்கோட்டுப்
புற்றத்து ஈயல் கெண்டி, எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல பல் வேறு பண்டத் தொடை மறந்து
இல்லத்து இருமடைக் கள்ளின் இன் களி செருக்கும் வன்புலக் காட்டு நாட்டது; முல்லை நுண்முகை
அவிழ்ந்த புறவின் பொறை தலை மணந்தன்று; இனி உயவுமார் என்று கூட்டுக.
உரை:
கடினமான காட்டை
உடைய அந்த நாட்டில், உடும்பைக் குத்திக் கொன்று, கோடுகளையுடைய தவளையைத் தோண்டி எடுத்து,
நெடிய உச்சியையுடைய புற்றைக் கிண்டி அதிலுள்ள ஈயல்களை எடுத்துக்கொண்டு, இரவில் முயலை
வேட்டையாடிப் பிடித்த வேட்டுவன், தன் தோளில் சுமந்து வந்த பல்வேறு வேட்டைப் பொருட்களின்
சுமையையும் மறந்து, வீட்டில் மிகுதியாகப் பருகிய கள்ளின் இனிய களிப்பில் மயங்கிக் கிடப்பான்.
அத்தகைய
நாட்டிலுள்ள ஊரில்தான், நம்மிடம் அன்பு கொண்டு, நம்மை விரும்பிய மனநிலையுடன் தன்
நெஞ்சத்தில் நம்மை நினைத்துக்கொண்டு வாழும் தலைவி இருக்கிறாள். முல்லையின் நுண்ணிய
அரும்புகள் மலர்ந்துவிட்டன. எனவே, அவளுடைய பொறுமை எல்லையை அடைந்துவிட்டது; இனி
அவள் மிகவும் வருந்துவாள். ஆகையால், தேரை விரைந்து செலுத்துவாயாக என்று தலைவன்
தன் தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.
Comments
Post a Comment