58. கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாவே!

 

58. கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாவே!

 

பாடியவர்: முதுகூற்றனார்

இவர் பெயர் உறையூர் முதுகூற்றனார் என்றும் முதுகூத்தனார் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. இவர் அகநானூற்றில் இரண்டு பாடல்களும் (137, 329) குறுந்தொகையில் நான்கு பாடல்களும் (221, 353, 371, 390), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (28, 58), புறநானூற்றில் ஒரு பாடலும் (331)  இயற்றியுள்ளார்.

 

திணை: நெய்தல்

 

துறை: பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கி தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது

 

துறை விளக்கம்: தலைவன் பகற்பொழுதில் தலைவியைச் சந்திக்க வருகிறான். பின்னர் பொழுது சாய்ந்ததும் அவளைப் பிரிந்து தன் தேரில் ஏறிச் செல்கிறான். அவன் பிரிவைக் கண்ட தோழி, தலைவியின் பிரிவுத் துயரத்தை நேரடியாகச் சொல்லாமல், தலைவனுடைய குதிரையை முன்னிலைப்படுத்திப் பேசுகிறாள். குதிரையே தலைவனின் தேரை இழுத்துச் செல்வதால், அதன் மீது பழி சுமத்துவதுபோல் தோழி கூறுகிறாள்.

 

பாடலின் பின்னணி:

தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகப் பகலில் வருகிறான். மாலை நேரம் வந்துவிட்டதால் அவன் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவன் செல்லும் தேரின் குதிரை வேகமாகச் செல்கிறது. அந்த நேரத்தில், மாலை இருள், பனி, கடலலை ஆகிய இயற்கைக் காட்சிகள் தலைவியின் பிரிவுத் துயரத்தை அதிகப்படுத்துகின்றன. அதனால் தோழியின் நெஞ்சமும் வருந்துகிறது. எனவே, “எங்களை விட்டு நீங்கிச் செல்லும் தலைவனின் தேரை விரைவாக இழுத்து செல்லும் குதிரை, சிறுவர்கள் பறையைக் கோலால் அடிப்பதுபோல் அடிபட்டுத்  துன்பப்படட்டும்.” என்று தோழி கூறுகிறாள்.

 

 

பெரு முது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்               5
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்                 10
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே

 

 

அருஞ்சொற்பொருள்:

1.பெருமுது செல்வர் – பெருஞ்செல்வம் கொண்ட பழைமையான குடியினர்;

பொன்னுடைப் புதல்வர் – பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை உடைய இளைஞர்கள்

2. சிறுதோட் கோத்த – சிறிய தோளில் பொருத்தப்பட்ட;

செவ்வரிப் பறை – செவ்விதாக ஒலிக்கும் பறை

3. கண்ணகம் – அடிக்கப்படும் இடம்; குரீஇ – குருவியின் உருவம்

4. கோல் கொண்டு அலைப்ப – கோலால் அடிபடுவதுபோல்;

படீஇயர் – துன்பம் அடையட்டும்; மாதோ – மாது, ஓ அசைச்சொற்கள்

5. வீரை – வீரை என்ற ஓரூர்; வேண்மான் – வேளிர் மரபைச் சேர்ந்த மன்னன்;

வெளியன் தித்தன் – வெளியன் தித்தன் என்ற புகழ்பெற்ற அரசன்

6. முரசு முதல் கொளீஇய – முரசு முதலியவற்றோடு;

மாலை விளக்கு – மாலையில் ஏற்றப்பட்ட விளக்கு

7. வெண்கோடு இயம்ப – வெண்மையான சங்கு ஒலிக்க;

நுண்பனி அரும்ப – நுண்ணிய பனித்துளிகள் தோன்ற

8. கையற – செய்வதறியாது, செயலிழந்து; மெய்சோர்ந்து – உடல் தளர்ந்து

9. அவல நெஞ்சினம் – துன்பமுற்ற நெஞ்சம்; உயர்திரை – உயரமாக எழும் கடலலை

10. நீடுநீர் – நீண்ட பரப்புடைய கடல், நெடுங்கடல்; பனித்துறை – குளிர்ச்சியான கடற்கரைத் துறை;

சேர்ப்பன் – கடற்கரை நாட்டைச் சேர்ந்த தலைவன்

ஓடுதேர் – வேகமாகச் செல்லும் தேர்

11. நுண்நுகம் – நுண்ணிய நுகம்; தேரோடு குதிரையை இணைக்கும் பகுதி

நுழைந்த மாவே – நுகத்தில் பூட்டப்பட்ட குதிரை

 

பதவுரை:

1. பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் – பெரிய செல்வம் உடைய பழைய குடும்பத்தினரின் பொன் அணிந்த புதல்வர்கள்,

2. – 3. சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல – சிறிய தோளில் பொருத்தப்பட்ட செவ்விதாக ஒலிக்கும் பறையின் உட்புறத்தில் வரையப்பட்ட குருவியின் உருவம் அடிபடுவதைப்போல,

4. கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ – கோலால் விரட்டப்பட்டுத் துன்பம் அடையட்டும்

5. - 6. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் – வீரையைச் சேர்ந்த வேண்மான் வெளியன் தித்தனுடைய முரசு முழங்கத் தொடங்கும் மாலை நேரத்தில்,

7. வெண்கோடு இயம்ப நுண்பனி அரும்ப – வெண்மையான சங்கு ஒலிக்க, நுண்ணிய பனி தோன்ற,

8. கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து – செயலற்றவளாக வந்த மாலைப் பொழுதோடு உடல் தளர்ந்து,

9. அவல நெஞ்சினம் பெயர உயர்திரை – துன்புற்ற எங்கள் நெஞ்சம் வருந்த, உயர்ந்த அலைகளையும்

10. நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் – நெடுங்கடலின் குளிர்ந்த கடற்கரைத் தலைவனுடைய,

11. ஓடுதேர் நுண்நுகம் நுழைந்த மாவே – வேகமாகச் செல்லும் தேரின் நுகத்தில் பூட்டப்பட்ட குதிரையே!

 

கொண்டு கூட்டு: வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின், வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்ப, கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து, அவல நெஞ்சினம் பெயர, நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பனின் ஓடுதேர் நுண்நுகம் நுழைந்த மாவே, பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக் கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் எனக் கூட்டுக.

 

உரை:

வீரை வேண்மான் வெளியன் தித்தனுடைய முரசு முழங்கத் தொடங்கும் மாலை நேரத்தில், மாலை விளக்குகள் ஏற்றப்படுகின்றன; வெண்சங்கு ஒலிக்கிறது; நுண்ணிய பனித்துளிகள் தோன்றுகின்றன. இவ்வாறு கையறுநிலையை உண்டாக்கி வந்த மாலைப் பொழுதோடு, உடல் தளர்ந்து, எங்கள் துன்பமுற்ற நெஞ்சம் வருந்துகிறது. நெடுங்கடலின் குளிர்ந்த கடற்கரைத் துறையைச் சேர்ந்த தலைவனுடைய விரைந்து செல்லும் தேரின் நுண்ணிய நுகத்தில் பூட்டப்பட்ட குதிரையே! பெருஞ்செல்வம் கொண்ட பழைமையான குடியினரின் பொன் அணிந்த புதல்வர்கள் தங்கள் சிறிய தோளில் அணிந்த பறையில் வரையப்பட்ட குருவியின் உருவத்தைக் கோலால் அடிப்பதைப்போல, நீயும் கோலால் அடிபட்டுத் துன்பப்படுவாயாக!

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே