57. மருட்கை உடைத்தே!

57. மருட்கை உடைத்தே!

 

 

பாடியவர்: பொதும்பில் கிழார்

பொதும்பில் என்பது மதுரைக்கு வடக்கில் உள்ள ஓர் ஊர். இவ்வூர் தற்போது பொதும்பு என்று வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் தெரியாததால், இவர் பொதும்பில் கிழார் என்று அழைக்கப்படுகிறார். இவர் இயற்றியதாகச் சங்க இலக்கியத்தில் இப்பாடல் மட்டுமே காணப்படுகிறது.

 

திணை: குறிஞ்சி

 

துறை: செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

 

துறை விளக்கம்: “அறிவுறீஇ வரைவு கடாயது” என்ற துறையில், தலைவியும் தலைவனும் காதல் உறவில் இருப்பதை அறிந்த தோழி, இனியும் காலம் தாழ்த்தாமல் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தலைவனிடம் அறிவுறுத்துகிறாள்.

 

பாடலின் பின்னணி:

தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் காதலித்து வருகின்றனர். தலைவன் அடிக்கடி பகற்குறியில் வந்து தலைவியைச் சந்தித்துச் செல்கிறான். ஆனால், இந்நிலை நீண்ட காலம் தொடர முடியாது. தலைவியின் வீட்டார் அவளைக் கண்காணித்து, விரைவில் அவளை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கக்கூடும். மேலும், அவர்கள் காத்துக் கொண்டிருக்கும் சிறுதினைப் புனம் அறுவடைக்குத் தயாராகிவிட்டது. தினைப்புனக் காவலும் முடிவடையப் போகிறது. அதனால், தலைவியும் தோழியும் தலைவனைச் சந்திக்கும் வாய்ப்பு குறையும்.

எனவே, தோழி தலைவனிடம், “இனி காலம் தாழ்த்தாதே; தலைவியை மணந்துகொள். இல்லையெனில், அவளுடைய அழகும் இளமையும் வருத்தத்தால் கெட்டுவிடும்” என்று மறைமுகமாக அறிவுறுத்துகிறாள்.

 

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென
துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம்பால் 5
கல்லா வன் பறழ்க் கைந்நிறை பிழியும்
மா மலை நாட மருட்கை உடைத்தே
செங் கோல் கொடுங் குரல் சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும் காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே 10

 

அருஞ்சொற்பொருள்:

1.   தடம் – வளைவு; கோட்டு – கொம்பு; தடங்கோடு – வளைந்த கொம்பு; ஆமான் – காட்டுப்பசு; மடங்கல் – சிங்கம்; மா நிரை – பெரிய விலங்குகளின் கூட்டம்.

2.   வேங்கை – மலைப்பகுதியில் வளரும் ஒரு மரம்; வதிந்தென – தங்கியிருந்ததாக.

3.   துய்த்தலை – பஞ்சுபோன்ற மென்மையான தலையுடைய; மந்தி – பெண் குரங்கு.

4.   கல்லென் – ஒலிக்குறிப்பு; சுற்றம் – தன் கூட்டம்; கை கவியாக் – கையால் அமர்த்தி, அடக்கி.

5.   வீங்கு சுரை – பால் நிரம்பிய மடி; ஞெமுங்குதல் – அழுந்துதல்; ஞெமுங்க வாங்கி – அழுந்தப் பற்றியிழுத்து; தீம்பால் – இனிய பால்.

6.   கல்லா வன்பறழ் – தொழிலைக் கற்றுக்கொள்ளாத வலிய குட்டி; கைந்நிறை – கை நிறைய.

7.   மருட்கை – வியப்பு, மனக்கலக்கம்.

8.   செங்கோல் – சிவந்த தண்டு; கொடுங்குரல் – வளைந்த கதிர்; வியன்புனம் – அகன்ற வயல்.

9.   கொய் பதம் – அறுவடை செய்யும் பருவம்; காலை – நேரம்.

10.  மை ஈர் ஓதி – கருமை நிறமும் குளிர்ச்சியும் கொண்ட கூந்தலையுடையவள்; மாண் நலம் – சிறந்த அழகு.

 

பதவுரை:

1.   தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக் – வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலிய பெரிய விலங்குகளின் கூட்டம் உள்ள

2.   குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென – மலைவேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் தங்கியிருந்ததாக,

3.   துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி – அவை தூங்கும் நிலையை அறிந்த மென்மையான தலையையுடைய பெண் குரங்கு,

4.   கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி – ஆரவாரம் செய்யும் தன் கூட்டத்தைக் கையால் அடக்கி, அருகில் சென்று,

5.   வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம்பால் – பால் நிறைந்த மடியை அழுத்தியிழுத்து இனிய பாலைப் பெற்று,

6.   கல்லா வன் பறழ்க் கைந்நிறை பிழியும் – பால் கறக்கும் முறையைக் கற்றுக்கொள்ளாத தன் வலிய குட்டியின் கையில் நிறையப் பிழியும்.

7.   மா மலை நாட! மருட்கை உடைத்தே – பெரிய மலையை உடைய தலைவனே! இது மனக்கலக்கத்தை அளிக்கிறது.

8.   செங் கோல் கொடுங் குரல் சிறு தினை வியன் புனம் – சிவந்த தண்டுகளையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற புனம்,

9.   கொய் பதம் குறுகும் காலை எம் – அறுவடை செய்யும் பருவத்தை நெருங்கும் காலத்தில், எங்கள்

10.  மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – கரிய, ஈரமான கூந்தலையுடைய தலைவியின் சிறந்த அழகு அழிந்துவிடும்.

 

கொண்டு கூட்டு:

நாட! புனம் கொய் பதம் குறுகும் காலை, எம் மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவு மருட்கை உடைத்து என்றவாறு கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளலாம்.

 

உரை:

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலிய பெரிய விலங்குகளின் கூட்டம் இருக்கும் மலைவேங்கை மரத்தின் கீழ், தன் கன்றுடன் தங்கியிருந்தது. அவை உறங்கும் நிலையை அறிந்த மென்மையான தலையையுடைய பெண் குரங்கு, தன் கூட்டம் ஆரவாரம் செய்யாமல் இருக்க அவற்றைக் கையால் அடக்கி, காட்டுப்பசுவை அணுகியது. பின்னர், பால் நிறைந்த அதன் மடியை அழுத்தியிழுத்து இனிய பாலைப் பெற்றது. பால் கறக்கும் தொழிலைக் கற்றுக்கொள்ளாத தன் வலிய குட்டியின் கையில் அந்தப் பாலை நிறையப் பிழிந்தது.

 

“பெரிய மலைநாட்டுத் தலைவனே! சிவந்த தண்டுகளையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினைப் புனம் அறுவடைக்குத் தயாராகிவிட்டது. அந்த அறுவடைக் காலம் வந்துவிட்டால், எங்கள் கரிய கூந்தலையுடைய தலைவியின் சிறந்த அழகு வருத்தத்தால் அழிந்துவிடும். இதை நினைத்தால் என் மனம் கலங்குகிறது” என்று தோழி கூறுகிறாள்.

 

சிறப்புக் குறிப்பு:

உள்ளுறை: “தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக் குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால் கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்” என்பது,

அலர் பேசும் மக்கள் வாழும் ஊரில், பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கும் தலைவியைத் தலைவன் உடன்போக்கில் அழைத்துச் செல்ல விரும்பினால், தலைவியைத் தலைவனிடம் தான் ஒப்படைப்பதாகத் தோழி கூறுவதைக் குறிக்கிறது.

  

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

24. நன்று செய்தனையே!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே