56. ஏதிலாட்டி இவள் எனப் போயின்று கொல்லோ?
56. ஏதிலாட்டி இவள்
எனப் போயின்று கொல்லோ?
பாடியவர்: பெருவழுதி
இவரைப்
பற்றிய செய்திகளைப் பாடல் 55-ன் உரையில் காணலாம். திணை: பாலை
துறை: வரைவிடை
மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது
துறை விளக்கம்: தலைவன் மணம்
செய்வதாக உறுதியளித்து, அதற்குரிய காலத்தில் வராமல் பிரிந்திருப்பதால் தலைவி வருந்தி
மெலிகிறாள். அவளைத் தேற்றும் தோழியிடம், தலைவி தனது பிரிவுத் துயரத்தையும் தலைவனைப்
பற்றிய ஏக்கத்தையும் எடுத்துக் கூறுகிறாள்.
பாடலின் பின்னணி:
தலைவனும்
தலைவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். தலைவன், தலைவியை மணந்து கொள்வதாக
உறுதியளித்து, அதற்குரிய காலத்தையும் குறிப்பிட்டுப் பிரிந்து செல்கிறான். ஆனால்
அவன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வரவில்லை.அவனது பிரிவைத் தாங்க முடியாத தலைவி
மெலிந்து, தன் பழைய அழகையும் இழக்கிறாள். அவளுடைய வளையல்கள் நெகிழ்ந்து
கழல்கின்றன. இதனால் கவலையுற்ற தோழி, “தலைவன் கண்டிப்பாகத் திரும்பி
வருவான்; நீ வருந்தாதே” என்று அவளைத்
தேற்றுகிறாள்.
அப்போது
தலைவி, தான் முன்பு தலைவனுடன் இருந்த இடத்தையும், அங்கு மலர்ந்திருந்த குரவ
மலர்களின் மணத்தையும் நினைவுகூர்கிறாள். வண்டுகள் மொய்த்ததால் எழுந்த மணம்
காற்றோடு கலந்து வீசிய அந்த அழகிய காலத்தை நினைத்தவுடன், தலைவனை நினைத்துத்
துன்புறும் தன் நெஞ்சம் அவனைத் தேடிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறாள்.
“அவனிடம்
சென்ற என் நெஞ்சம் அவனுடைய செயலை முடித்துவிட்டு அவனோடு திரும்பி வர விரும்பி
அங்கேயே துன்பப்படுகிறதோ? அல்லது அவன் எனக்கு அருள் செய்யாததால், என் பழைய அழகை
இழந்து பசலை நிறம் பெற்ற என்னைக் கண்டு, ‘இவள் எனக்கு அயலானவள்’ என்று எண்ணி
என்னைவிட்டு நீங்கிவிட்டதோ?” என்று தலைவி தோழியிடம் தன் பிரிவுத் துயரத்தை
வெளிப்படுத்துகிறாள்.
குறு
நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை
எல் வளை ஞெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா 5
ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் எனப்
போயின்று கொல்லோ நோய் தலைமணந்தே 10
அருஞ்சொற்பொருள்:
1.
குறுநிலை - குட்டையான; குரவு – குரவ மரம்; சிறு நனை - சிறிய அரும்பு; வீ – மலர்
2.
வளி – காற்று
3.
பெறூஉம் - பெறும்; கவின் – அழகு; காலை – பொழுது
4.
எல் - ஒளி; வளை – வளையல்; ஞெகிழ்தல் - கழலுதல்; அல்லல் – துன்பம், வருத்தம்; உறீஇ
– உற்று, அடைந்து; ஈய - வீச
5.
கண் களி – கண்களின் மகிழ்ச்சி; செய்வினை - செய்யும் தொழில்; அசாவா – தளராமல்,
சோர்வடையாமல்
6.
அருளான் – அன்பு காட்டாதவன்; ஒருங்கு வரல் – ஒன்றாகத் திரும்பி வருதல்;
நசை –
விருப்பம்; கொல் – ஐயப்பொருள் தரும் இடைச்சொல்;
கொல்லோ
– அப்படியோ, இருக்குமோ
9.
ஏதிலாட்டி – அயலாள்
10.
தலைமணந்தே – மிகுதியாகப் பற்றிக்கொண்டதே, மிகுந்ததே
பதவுரை:
1. குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ - குறுகிய உயரமுடைய குரவ
மரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த நறுமண மலர்களில்,
2. வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய - வண்டுகள் மொய்ப்பதால்
எழுந்த மணம் காற்றோடு கலந்து வீச,
3. கண் களி பெறூஉம் கவின் பெறு காலை - கண்கள்
மகிழ்ச்சியடையும் அழகு நிறைந்த அப்பொழுதில்,
4. எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் - ஒளி பொருந்திய
என் வளையல்கள் கழலும்படி செய்த தலைவனை நினைத்து வருந்தி,
5. சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா - அவனிடம் சென்ற என்
நெஞ்சம், அவன் மேற்கொண்ட செயலில் தளராமல்,
6. ஒருங்கு வரல் நசையொடு வருந்தும் கொல்லோ - அவனுடன் ஒன்றாகத்
திரும்பி வர விரும்பி அங்கேயே வருந்துகிறதோ?
7. அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து - அவன் எனக்கு அருள்
செய்யாததால் நான் வாடி இங்கு வந்து,
8. தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி - முன்னிருந்த பழைய
அழகை இழந்த என் பசலை படர்ந்த மேனியைப் பார்த்து,
9. ஏதிலாட்டி இவள் எனப் – ”இவள் எனக்கு அயலான பெண்” என்று
எண்ணி,
10. போயின்று கொல்லோ நோய் தலைமணந்தே - என்னைவிட்டு என்
நெஞ்சம் போய்விட்டதோ? துன்பம் மிகுந்துவிட்டதே!
கொண்டு கூட்டு: குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந்து
ஈயக் கண் களிபெறும் கவின்பெறு காலை, எல்வளை ஞெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇச் சென்ற
நெஞ்சம், செய்வினைக்கு அசாவா ஒருங்கு வரல் நசையொடு வருந்தும் கொல்லோ? அருளான்
ஆதலின் அழிந்து இவண் வந்து தொல்நலன் இழந்த என் பொன்னிறம் நோக்கி, ‘ஏதிலாட்டி இவள்’
எனப் போயின்று கொல்லோ? நோய் தலைமணந்தே என்று கூட்டுக.
உரை:
தோழி! குறுகிய
உயரமுடைய குரவ மரத்தின் சிறிய அரும்புகள் மலர்ந்து நறுமணம் வீசுகின்றன. அவற்றில்
வண்டுகள் மொய்ப்பதால் எழும் மணம் காற்றோடு கலந்து வீசுகிறது. கண்களுக்கு
மகிழ்ச்சியைத் தரும் அந்த அழகிய காலத்தை நான் நினைக்கிறேன்.
அத்தகைய
காலத்தில் என் ஒளிமிக்க வளையல்கள் நெகிழும்படி என்னைப் பிரிந்து சென்ற தலைவனை
நினைத்து என் நெஞ்சம் துன்புற்றது. அதனால் அஃது என்னைவிட்டு அவனிடம்
சென்றுவிட்டது.
அவனிடம்
சென்ற என் நெஞ்சம், அவன் மேற்கொண்ட செயலில் தளராமல், அவனுடைய செயலை முடித்துவிட்டு
அவனுடன் மீண்டும் என்னிடம் வர வேண்டும் என்ற விருப்பத்துடன் அங்கேயே
துன்பப்படுகிறதோ? அல்லது, அவன் எனக்கு அருள் செய்யாததால், இங்கு வந்து வாடி, நான்
என்னுடைய பழைய அழகை இழந்து பசலை படர்ந்த பொன்னிற மேனியுடன் இருப்பதைக் கண்டு, என்
நெஞ்சம் “இவள் எனக்கு அயலானவள்” என்று எண்ணி என்னைவிட்டு
நீங்கிவிட்டதோ? இவ்வாறு தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட காதல் நோய் என்னை மிகவும்
வருத்துகிறது.
Comments
Post a Comment