55. ஓங்கு மலை நாட, ஒழிக நின் வாய்மை!
55.
ஓங்கு மலை நாட, ஒழிக நின் வாய்மை!
பாடியவர்:
பெருவழுதி
இவர்
பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் தமையன் என்று சிலரும், இவரே
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இவர் இயற்றியதாக
நற்றிணையில் இரண்டு செய்யுட்கள் (55,56) உள்ளன.
திணை: குறிஞ்சி
தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் காதலித்து வருகின்றனர். தலைவன்
தலைவியை மணந்து கொள்வதாக உறுதியளித்தும், திருமணத்தைத் தாமதப்படுத்துகிறான். அவன் இரவில்
தீங்குகள் நிறைந்த மலைப்பாதையைக் கடந்து வந்து தலைவியைத் தழுவுகிறான். அவனுடன் ஏற்பட்ட
தொடர்பால் தலைவியிடம் புதுமணம் தோன்றுகிறது; அந்த மணத்தால் வண்டுகள் அவளுடைய தோளில்
அளவில்லாமல் மொய்க்கின்றன. இதைக் கண்ட தலைவியின் தாய், “முன்பும் இவ்வாறு இருந்தாயா?”
என்று கேட்கிறாள். உண்மையை வெளிப்படுத்த முடியாமல் தலைவி தோழியின் முகத்தை நோக்குகிறாள்.
தலைவியின் நிலையை உணர்ந்த தோழி, அருகிலிருந்த சந்தன விறகின் கொள்ளியைக் காட்டி, அதனால்
ஏற்பட்ட மணத்தினால்தான் வண்டுகள் மொய்த்ததாகக் கூறி அவளைக் காப்பாற்றுகிறாள். இவ்வாறு
தொடர்ந்து பொய் கூறி தலைவியைக் காப்பாற்ற வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி,
இனியும் தாமதிக்காமல் தலைவியை மணந்து கொள்ளுமாறு தோழி தலைவனை வற்புறுத்துகிறாள்.
ஓங்கு
மலை நாட ஒழிக நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின் 5
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாளாகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல் என மடுத்த 10
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே
அருஞ்சொற்பொருள்:
1.ஓங்கு
- உயர்ந்த; ஒழிக - அழிக; வாய்மை – தலைவன் அளித்த உறுதிமொழி
2.
காம்பு – மூங்கில்; தலை மணந்த – ஒன்றோடு ஒன்று நெருங்கிப் பொருந்திய;
அதர்
– பாதை
3.
உறு பகை - மிகுந்த தீங்கு ; பேணாது – பொருட்படுத்தாமல்
4.
பொறி -தேமல் முதலிய அழகுக் குறிகள் விளங்கும் ;கிளர்தல் – விளங்குதல்;
ஆகம்
– மார்பு; சேர்பு – சேர்ந்து
5.
அறுகால் – ஆறுகால்; பறவை – வண்டு
6.
கண் கோள் - கண்களால்; பண்டும் – முன்பும்
7.
இனையையோ - இவ்வாறு; யாய் – தாய்
8.
அல்லாந்து - வருந்தி
9.
அன்னாய் – அன்னையே
10.
யாங்கு - எவ்வாறு
11.
சாந்த - சந்தன; ஞெகிழி – கொள்ளிக்கட்டை
12.
ஈங்கு – இங்கிருந்து; ஆயினவால் – ஆனது (ஆல் – அசை நிலை);
என்றிசின்
– என்றேன்
பதவுரை:
1.ஓங்கு மலை நாட!
ஒழிக நின் வாய்மை! - உயர்ந்த மலைநாட்டை உடைய தலைவனே! நீ முன்பு கூறிய உறுதிமொழிகள்
எல்லாம் ஒழிந்து போகட்டும்!
2. காம்பு தலைமணந்த
கல் அதர்ச் சிறு நெறி - மூங்கில்கள் ஒன்றோடொன்று நெருங்கி வளர்ந்த, கற்கள் நிறைந்த
சிறிய மலைவழியில் உள்ள
3. உறுபகை பேணாது, இரவின் வந்து, இவள் - பெரும்
தீங்குகளைப் பொருட்படுத்தாமல் இரவில் வந்து, இவளுடைய
4. பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
- அழகு விளங்கும் மார்பைத் தழுவி, அவளுடைய தோளுடன் தோள் சேர்ந்து
5. அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின் - ஆறு கால்களையுடைய வண்டுகள் எண்ணற்றவை
அவளுடைய தோளில் மொய்த்ததால்,
6. கண் கோள் ஆக
நோக்கி, பண்டும் - கண்களால் கொல்வதுபோலக் கடுமையாகப் பார்த்து, முன்பும்.
7. இனையையோ? என
வினவினள், யாயே - இவ்வாறான மணம் உடையவளாக இருந்தாயா?” என்று கேட்டாள் அவளுடைய தாய்
8. அதன் எதிர்
சொல்லாளாகி, அல்லாந்து - அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைவி வருந்தி
9. என் முகம்
நோக்கியோளே; அன்னாய்! - என் முகத்தைப் பார்த்தாள். தாயே
10. யாங்கு உணர்ந்து
உய்குவள்கொல்? என, மடுத்த - இவள் எவ்வாறு உண்மையை மறைத்து இந்நிலையிலிருந்து
தப்புவாள்? என்று எண்ணி,
11. சாந்த ஞெகிழி
காட்டி - அருகிலிருந்த சந்தனக் கொள்ளியைக் காட்டி,
12. ஈங்கு ஆயினவால்
என்றிசின் யானே - இங்கிருந்துதான் இந்த வண்டுகள் வந்தன என்று நான் கூறினேன்.
உரை:
“உயர்ந்த மலைநாட்டுத்
தலைவனே! நீ தலைவியை மணந்து கொள்வதாகக் கூறிய உறுதிமொழி இனி பொய்த்துப் போகட்டும்.
மூங்கில்கள் அடர்ந்தும் கற்கள் நிறைந்தும் காணப்படும் சிறிய மலைப்பாதையில் உள்ள
ஆபத்துக்களைக் கூடப் பொருட்படுத்தாமல் நீ இரவில் வந்து தலைவியைத் தழுவினாய். அந்தத்
தழுவலினால் அவளுடைய உடலில் சந்தன மணம் வீசியது. அந்த மணத்தால் எண்ணற்ற வண்டுகள்
அவளுடைய தோளில் மொய்த்தன. இதைக் கண்ட அவளுடைய தாய், கண்களால் கொல்வதுபோல அவளைப்
பார்த்து, ‘முன்பும் இவ்வாறு மணம் வீசும் உடலை உடையவளாக இருந்தாயா?’ என்று
கேட்டாள். அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தலைவி வருந்தி என்னைப்
பார்த்தாள். அவளுடைய நிலையை நான் புரிந்துகொண்டேன். எனவே, ‘இவள் எவ்வாறு தாயிடம்
உண்மையை மறைத்து இந்நிலையிலிருந்து தப்புவாள்?’ என்று எண்ணினேன். அருகிலிருந்த சந்தன விறகின் கொள்ளியைக் காட்டி, ‘இதனால் ஏற்பட்ட
மணத்தினால்தான் இவ்வாறு வண்டுகள் மொய்த்தன’ என்று கூறித் தலைவியைக் காப்பாற்றினேன்.
Comments
Post a Comment