54. என் குறை இற்றாங்கு உணர உரை!
54. என் குறை இற்றாங்கு உணர உரை!
பாடியவர்:
சேந்தங் கண்ணனார்
சேந்தன் என்பது இவரது தந்தையின்
பெயர்; கண்ணன் என்பது இவரது இயற்பெயர். இவர் நற்றிணை 54, அகநானூறு 350 ஆகிய பாடல்களைப்
பாடியுள்ளார்.
திணை:
நெய்தல்
துறை:
காமம் மிக்க கழிபடர்கிளவி
துறை விளக்கம்: தலைவனைப்
பிரிந்த தலைவி, அவனை நெடுநாள் காணாததால் பெருகிய காமத் துயரத்தைத் தாங்காது, தன் குறையை
மிகுதியாக எடுத்துரைத்தல்.
பாடலின் பின்னணி:
தலைவனை நெடுநாள்
காணாததால் தலைவி காமநோயால் வருந்துகிறாள். மாலைப்பொழுது அவளுடைய துயரத்தை மேலும் பெருக்குகிறது.
கடலில் இரை தேடி உண்டு, தன் கூட்டத்துடன் பறந்து செல்லும் வெண்குருகைக் கண்ட தலைவி,
தன்னிடம் சிறிது நேரம் தங்கி தன் குறையைக் கேட்டு, தன் தலைவனிடம் சென்று அதை எடுத்துரைக்குமாறு
வேண்டுகிறாள்.
வளை
நீர் மேய்ந்து கிளை முதல்செலீஇ
வாப் பறை விரும்பினைஆயினும் தூச் சிறை
இரும் புலால் அருந்தும் நின் கிளையடு சிறிது இருந்து
கருங் கால் வெண் குருகு எனவ கேண்மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை 5
அது நீ அறியின் அன்புமார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும் 10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே
அருஞ்சொற்பொருள்:
1.வளை நீர் – வளைந்து சூழ்ந்த கடல்
நீர், கடல்; மேய்ந்து – உண்டு;
முதல் செலீஇ – முதலில் சென்று
2. வாப்பறை – தாவிப் பறத்தல்; தூச் சிறை – தூய்மையான
சிறகுகள்
3. இரும் - பெரிய; புலால் – இறைச்சி; கிளை
– சுற்றம்
4. எனவ – என் (சொல்லை); கேண்மதி – கேட்பாயாக
5. புலம்பு - வருத்தம்; புன் மாலை – துன்பம்
மிக்க மாலை
6. அன்புமார் – மிக்க அன்புடைய
7. நொதுமல் – அயலார்
8. இற்றாங்கு - இவ்வாறாக; உரைமதி – எடுத்துரைப்பாயாக;
தழையோர் – தழையணிந்த மகளிர்
9. கொய்குழை – பறித்துக் கொள்ளப்படும் இலை;
அரும்பிய – அரும்புகள் தோன்றிய;
குமரி ஞாழல் – இளமையான ஞாழல் மரம்
10. தெண் திரை – தெளிந்த அலை; மணிப் புறம்
– மணி போன்ற அழகிய கடற்கரை; தைவரும் – வருடி வரும்
11. கண்டல் வேலி – கணடல் மரங்கள் வேலியாக அமைந்த
இடம்;
கிழவோன் – அந்தத் துறையின் தலைவன், தலைவன்
பதவுரை:
1. வளைநீர் மேய்ந்து
கிளை முதல் செலீஇ - கடல் நீர்ப்பகுதியில்
இரை தேடி உண்டு, தன் கூட்டத்தோடு முதலில்
சென்று,
2. வாப் பறை விரும்பினை ஆயினும் தூச்சிறை - பறந்து செல்ல விரும்பினாலும், தூய
சிறகுகளுடன்
3. இரும்புலால் அருந்தும் நின் கிளையடு சிறிது இருந்து - பெரிய மீன் போன்ற உணவை உண்ணும் உன்
கூட்டத்துடன், சிறிது நேரம் இங்கே தங்கி,
4. கருங்கால் வெண்குருகு எனவ கேண்மதி -
கரிய கால்களையும் வெண்மையான உடலையும் உடைய குருகே! நான் கூறுவதைக் கேட்பாயாக.
5. பெரும்
புலம்பின்றே சிறுபுன் மாலை - இச்சிறிய
மாலைப்பொழுது எனக்கு மிகுந்த துயரத்தைத் தருகிறது.
6. அது நீ அறியின் அன்புமார் உடையை - அந்த மாலைத் துயரத்தை நீ அறிந்தால், நீ என்மீது
மிகுந்த அன்புடையவனாவாய்
7. நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை –
என்னை அயலாளாகக் கருதும் வேறுபட்ட மனம் கொள்ளாமல்.என் குறையை
8. இற்றாங்கு உணர உரைமதி தழையோர் - இவ்வாறாக அவன் அறியும்படி எடுத்துச் சொல்வாயாக.
தழையாடை அணியும் மகளிர்
9. கொய்குழை அரும்பிய
குமரி ஞாழல் - பறித்து அணியும் இலைகளும் அரும்புகளும் நிறைந்த இளமையான ஞாழல்
மரங்களையும்,
10. தெண்திரை மணிப்புறம் தைவரும் -
தெளிந்த அலைகள் வருடி வரும் அழகிய கடற்கரையையும்,
11. கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே -
கண்டல் மரங்களை வேலியாகக் கொண்ட உன் துறைத் தலைவனிடமே எடுத்துச் சொல்வாயாக.
கொண்டு கூட்டு: வெண்குருகு, கிளை முதல்செலீஇ, வாப்பறை விரும்பினையாயினும்,
தூச்சிறை இரும்புலா அருந்தும் நின் கிளையொடு சிறிதிருந்து எனவ கேண்மதி; சிறுபுன் மாலை
பெரும்புலம்பின்று; அது நீ அறியின், அன்புமார் உடையை; நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என்
குறை இற்றாங்கு உணர உரைமதி; தழையோர் கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் தெண்திரை மணிப்புறம்
தைவரும் கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே உரைமதி என்று கூட்டுக.
உரை:
Comments
Post a Comment