53. அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ?

 

53. அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ?

 

பாடியவர்: நல்வேட்டனார்

மிளை கிழான் நல்வேட்டனார் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் ஒரு பாடலும் (341), நற்றிணையில் நான்கு பாடல்களும் (53, 210, 292, 349) உள்ளன.

 திணை: குறிஞ்சி

 துறை: வரைவு நீட்டிப்ப தோழி சிறைப்புறமாகச் சொல்லியது

 துறை விளக்கம்: தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருந்துகிறாள். தலைவன் அருகில் மறைந்திருந்து கேட்கும்படி, தோழி தலைவியிடம் கூறுவதுபோலப் பேசி, இனியும் காலம் தாழ்த்தாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறாள்.

 பாடலின் பின்னணி:

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். தலைவன் திருமணம் செய்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். இதனால் தலைவி உடல் மெலிந்து, துன்புற்று இருக்கிறாள். தலைவியின் இந்த நிலைக்குக் காரணம் தலைவனின் பிரிவும், திருமணம் தாமதிப்பதுமே என்பதைத் தோழி அறிந்திருக்கிறாள். ஆனால், தலைவியின் தாய் இதை அறியாதவள்போல் இருக்கிறாள்.

 தோழி, “தலைவியின் நோயைத் தீர்க்கும் மருந்து மலைப்பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த அருவி நீர்தான்” என்று கூறுகிறாள். அப்போது தலைவியின் தாய், “மலையில் பெய்த பெருமழையால் காட்டாற்றில் பெருக்கெடுத்து வரும் புதிய இனிய ஆற்று நீரில் இவள் நீராடினால், இவளுடைய நடுக்கம் தீரும்; எனவே அங்கு சென்று நீராடட்டும்” என்று கூறுகிறாள். அதைக் கேட்ட தோழி வியந்து, “நாம் மறைத்து வைத்த காதலை அன்னை அறிந்துவிட்டாளோ? அல்லது இரக்கத்தினால் இப்படிக் கூறினாளோ?” என்று தலைவியிடம் கேட்கிறாள்.

 

ஆனால், தோழி தலைவன் கேட்குமாறு கூறுவதின் மறைபொருள் தலைவியின் துயரத்துக்கு உண்மையான மருந்து தலைவனுடன் திருமணமாகி வாழ்வதே என்பதால் அவன் அவளை விரைந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

 

 

யான் அ·து அஞ்சினென் கரப்பவும் தான் அ·து
அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ
எவன்கொல் தோழி அன்னை கண்ணியது
வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்
ஆர் கலி வானம் தலைஇ நடு நாள்                5
கனை பெயல் பொழிந்தென கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆடப் பெறின் இவள்                   10
பனியும் தீர்குவள் செல்க என்றோளே

 

 

அருஞ்சொற்பொருள்:

1. யான் – நான்; கரப்பவும் – மறைத்தாலும்

2. கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை; அருளினள் கொல்லோ – இரக்கப்பட்டாளோ

3. எவன்கொல் – என்ன காரணமோ; கண்ணியது – எண்ணியது

4. வான் உற - வானைத் தொடுமாறு ; நிவந்த - உயர்ந்த;

கவாஅன் – மலைப்பக்கம், மலைச்சாரல்

5. ஆர் கலி – மிகுந்த முழக்கமுடைய; வானம் – மேகம்; தலைஇ – பொருந்தி, தொடங்கி;

நடுநாள் – நள்ளிரவு

6. கனை பெயல் – பெருமழை; கானகம் – காடு,  கல் யாறு – கற்கள் நிறைந்த ஆறு

7. முளி இலை – முதிர்ந்து உதிர்ந்த இலை; முகிழ் – அரும்பு;

இணர் – மலர்க்கொத்து

8. வி\ருந்தின் – புதுமையான; தீம் – இனிய; மருந்து – நோய் தீர்க்கும் பொருள்

9. தண்ணென - குளிர்ச்சியாக

10. முனியாது –  வெறுப்பின்றி; தீர்குவள் - தீர்வாள்

11. பனியும் – நடுக்கமும்

 

பதவுரை:

1. யான் அது அஞ்சினென் கரப்பவும் தான் அது – நான் அதற்கு அஞ்சி (உன் காதல் நோயை) மறைத்திருந்தாலும், அன்னை அதனை

2. அறிந்தனள் கொல்லோ அருளினள் கொல்லோ – அறிந்தாளோ? அல்லது இரக்கத்தால் அவ்வாறு கூறினாளோ?

3. எவன்கொல் தோழி அன்னை கண்ணியது – தோழியே! அன்னை கருதியது என்னவோ?

4. வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன் – வானைத் தொடுமாறு உயர்ந்த பெரிய மலையின் சாரலில்,

5. ஆர் கலி வானம் தலைஇ நடு நாள்– பேரொலியுடைய மேகம் பொருந்தி நள்ளிரவில்

6. கனை பெயல் பொழிந்தென கானக் கல் யாற்று – பெருமழையைப் பொழிந்ததனால், காட்டிலுள்ள கற்கள் நிறைந்த ஆற்றில்

7. முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்  -  உதிர்ந்த இலைகளையும் அரும்புகளுடன் கூடிய மலர்க்கொத்துகளையும் அடித்துக்கொண்டு வரும்,

 8. விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – புதுமையான இனிய நீர் மருந்தாகவும் அமையும்.

9. தண்ணென உண்டு கண்ணின் நோக்கி – அதைக் குளிர்ச்சியாகப் பருகி, அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு,

10. முனியாது ஆடப் பெறின் இவள் – வெறுப்பின்றி நீராடினால், இவளுடைய

11. பனியும் தீர்குவள் செல்க என்றோளே – நடுக்கமும் தீர்ந்துவிடும். எனவே அங்கு செல்வீராக என்று அன்னை கூறினாள்.

 

கொண்டு கூட்டு: யான் அது அஞ்சினென் கரப்பவும், தான் அது அறிந்தனள் கொல்லோ, அருளினள் கொல்லோ? தோழி! அன்னை கண்ணியது எவன்கொல்? வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன், ஆர் கலி வானம் தலைஇ, நடுநாள் கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும். தண் என உண்டு, கண்ணின் நோக்கி, முனியாது ஆடப் பெறின், இவள் பனியும் தீர்குவள்; செல்க என்றோளே என்று கூட்டுக.

 

உரை:

தோழியே! நான் நம் காதல் தொடர்பை அஞ்சிக் கொண்டிருந்ததால் அன்னையிடம் மறைத்திருந்தேன். அவள் அதனை அறிந்துகொண்டாளோ? அல்லது இரக்கத்தினால் இவ்வாறு கூறினாளோ? அவள் கருதியது என்னவென்று தெரியவில்லை.

வானைத் தொடுமாறு உயர்ந்த பெரிய மலையின் சாரலில், பேரொலியுடன் கூடிய மேகங்கள் நள்ளிரவில் பெருமழையைப் பொழிந்தன. அந்த மழையால், காட்டில் உள்ள கற்கள் நிறைந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, முதிர்ந்த இலைகளையும் அரும்புகளுடன் கூடிய மலர்க்கொத்துகளையும் அடித்துக்கொண்டு வந்தது. அவ்வாறு புதிதாகப் பெருக்கெடுத்து வரும் இனிய நீர் மருந்தாகவும் அமையும். அதனைப் பருகி, கண்டு, வெறுப்பின்றி நீராடினால் இவளுடைய நடுக்கமும் தீரும். எனவே அங்கு செல்வீராக என்று அன்னை கூறினாள்.

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!