52. நீங்கல் செல்லேம்!

 

52. நீங்கல் செல்லேம்!

 

பாடியவர்: பாலத்தனார்

இவர் நப்பாலத்தனார் என்றும் அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக நற்றிணையில் உள்ள இரண்டு செய்யுட்கள் (52, 40) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவர் வல்வில் ஓரியைச் சிறப்பித்துப் பாடியிருப்பதால், இவர் வல்வில் ஓரியின் அவைக்களப் புலவராகவோ அல்லது ஆதரவு பெற்ற புலவராகவோ இருந்திருக்கலாம்.

 திணை: பாலை

 துறை: தலைமகன் செலவு அழுங்கியது

 துறை விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்டச் செல்லத் திட்டமிட்டிருந்தான். ஆனால், தலைவியைவிட்டுப் பிரிய முடியாததால் தன் பயணத்தைக் கைவிட்டான்.

 பாடலின் பின்னணி:

தலைவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான பொருளை ஈட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறான். பொருள் ஈட்டுதல் வாழ்க்கையின் கடமையாக இருந்தாலும், தலைவியின் அன்பையும் பிரிவுத் துயரத்தையும் நினைக்கும்போது அவனால் அவளை விட்டுப் பிரிய முடியவில்லை. தலைவியின் கூந்தலில் மலர்களின் மணமும், அவள் உடலில் இயற்கையான மணமும் கமழ்கின்றன. அவளைத் தழுவிப் பெற்ற இன்பத்தை நினைத்த தலைவன், “இத்தகைய இன்பத்தை விட்டுப் பிரிந்து செல்வதை என்னால் ஏற்க முடியாது” என்று தன் நெஞ்சிடம் கூறுகிறான். இறுதியில், எவ்வளவு பெரிய செல்வம் கிடைத்தாலும், தலைவியைப் பிரிந்து சென்று ஈட்டும் செல்வத்தைவிட, அவளுடன் இணைந்து வாழ்வதே இனிமையானது.” என்ற கருத்தை வெளிப்படுத்துகிறான்.

 

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்           5
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி                 
கை வளம் இயைவது ஆயினும்                   10
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே

 

அருஞ்சொற்பொருள்:

1.மாக்கொடி – கரிய கொடி; அதிரல் - காட்டு மல்லிகை; பாதிரி – பாதிரி மலர்

2. தூத் தகட்டு – தூய இதழ்களையுடைய; வேய்ந்த – சூடிய

3. நாற்றம் - மணம்; மரீஇ – கலந்து, பொருந்தி

4. சுணங்கு - தேமல்; ஆகம் – மார்பு;  முயங்கி – தழுவி

5. வீங்கு - மிக்க; உவர் - இனிய; கவவுதல் – தழுவுதல்

6. ஆள்வினை - முயற்சி

8. இலை – இல்லை

9. மழவர் – மழநாட்டு[1] வீரர்கள்; வள் ஓரி – பெரிய வள்ளலான ஓரி

10. கை வளம் - கையில் உள்ள பெரிய செல்வம்; இயைவது – கிடைப்பது

11. ஐது – மென்மை; அம்ம – வியப்பிடைச்சொல்

 

பதவுரை:

1. மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரி - கரிய கொடியையுடைய  காட்டு மல்லிகை மலரோடு, பாதிரியின்

2. தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் - தூய இதழையுடைய பாதிரிப் பூக்கள் சேர எதிரே மலர்களை வைத்துக் கட்டிய மலர் மாலையைச் சூடிய கூந்தலின்

3. மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் – மணம் கமழும் நாற்றத்தை நுகர்ந்து, நாம் இவளின்

4. சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி - அழகுத்தேமல் பரந்த மார்பினைச் சேர்த்துத் தழுவி,

5. வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் - மிக்க இனிமையான அவளுடைய தழுவலை விட்டுப் பிரிந்து செல்லமாட்டோம்.

6. நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் - நீயோ, பொருளீட்டும் முயற்சியே சிறந்தது என்று எண்ணி, ஒவ்வொருநாளும்

7. பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே - தலைவியைப் பிரிந்து வாழும் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பி, அதிலிருந்து மனம் மாறாமல் இருக்கிறாய்.

8. அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர் - என் நெஞ்சே! உனக்கு என்னிடம் அன்பே இல்லை; இருந்தாலும் நீ வாழ்க! கடுமையாகப் போரிடும்

9. மழவர் பெருமகன் மா வள் ஓரி – மழநாட்டு வீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளன்மையுள்ள ஓரியின்

10. கைவளம் இயைவது ஆயினும் – ஓரியின் அளவற்ற கொடை, செல்வவளம் கிடைக்கப்பெறினும்

11. ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே – அஃது இவளோடு இணைந்து முயன்று ஈட்டும் பொருளால் கிடைக்கும் இன்பத்தைக் காட்டிலும் சிறந்தது இல்லை. எனவே, நீ மட்டும் செல்வாயாக!

 

கொண்டு கூட்டு: மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித் தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல் மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம். நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே. அன்பு இலை, வாழி என் நெஞ்சே! வெம்போர் மழவர் பெருமகன் மா வள் ஓரி கை வளம் இயைவது ஆயினும், ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே என்று கூட்டுக.

உரை:

என் நெஞ்சே! ! கரிய கொடியையுடைய காட்டு மல்லிகைப் பூவுடன் தூய இதழையுடைய பாதிரிப் பூக்கள் மலர்களைச் சேர்த்துக் கட்டிய  மலர் மாலையைச் சூடிய இவளுடைய கூந்தலின் மணம் கமழும் நறுமணத்தைப் பெற்று, இவளுடைய தேமல் பொருந்திய மார்பை நான் தழுவி அடைந்த இன்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல என்னால் இயலாது.

ஆனால் நீயோ, பொருள் தேடும் முயற்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று எண்ணி, நாள்தோறும் தலைவியைப் பிரிந்து வாழும் வாழ்க்கையை விரும்புகிறாய். என் நெஞ்சே! நீ என்னிடம் அன்பில்லாதவனாக இருக்கிறாய்; இருந்தாலும் வாழ்க!

கடுமையான போரைச் செய்யும் மழவர் தலைவனான  மிகுந்த வள்ளன்மையுடைய ஓரியின் அளவற்ற செல்வம் கிடைத்தாலும், உன்னுடன் கூடிச் செய்யும் அப்பொருள் இவளோடு இணைந்து வாழ்வதால் கிடைக்கும் இன்பத்தைக் காட்டிலும் சிறந்தது இல்லை. ஆகவே, நீ மட்டும் செல்வாயாக!

 



[1].  மழவர் நாடு அல்லது மழநாடு என்பது தொண்டை நாடு, கொங்கு மண்டலம், கர்நாடகம் ஆகியவற்றின் இடையே உள்ள நிலப் பகுதியை குறிப்பிடப்படுவதாகும். மழநாடு சேர மரபினரின் கிளைக் குடியினரால் ஆளப்பட்ட பகுதியாகும். மழநாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கும்.

 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!