51. யாங்குச் செய்வாம் கொல் தோழி?
51.
யாங்குச் செய்வாம் கொல் தோழி?
பாடியவர்: பேராலவாயர்
இவர் மதுரைப் பேராலவாயர்
என்றும் அழைக்கப்படுகிறார். “ஆலம்” என்ற சொல்லுக்கு நஞ்சு என்று பொருள். “ஆலவாய்”
என்பது சிவபெருமானின் திருப்பெயர்களுள் ஒன்று. மதுரையில் உள்ள சொக்கநாதப்
பெருமானின் கோயிலும் ஆலவாய் எனப்படுகிறது. மதுரையைச் சார்ந்தவராகிய இப்புலவருக்கு,
மதுரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் பெயரால் “ஆலவாயர்” என்ற பெயர்
வழங்கப்பட்டிருக்கலாம்.
பேராலவாயர் பாடிய ஆறு
பாடல்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அவை அகநானூறு 87, 296; நற்றிணை 51,
361; புறநானூறு 247, 262 ஆகியன.
திணை: குறிஞ்சி
துறை விளக்கம்:
தலைவியின் உடல் மற்றும்
மனமாற்றத்திற்கான உண்மையான காரணத்தை அறியாத அன்னை, அவளுக்கு முருகனின் அணங்கு
ஏற்பட்டதாக எண்ணி வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துகிறாள். இதனால் வருந்தும் தலைவி,
அருகில் சிறைப்புறமாக நிற்கும் தலைவன் கேட்கும்படி, தோழியிடம் மறைமுகமாகப் பேசுகிறாள்.
தலைவியும் தலைவனும்
காதலித்து வந்தனர். தலைவன் பிரிந்திருந்ததால் தலைவி உடல் வேறுபட்டு,
மனத்துயருற்றாள். அவளுடைய இந்த மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை அறியாத அன்னை,
இது முருகனின் அணங்கால் ஏற்பட்டது என்று கருதுகிறாள். எனவே, வேலனை அழைத்து
வெறியாட்டு நடத்த ஏற்பாடு செய்கிறாள்.
அந்த வேளையில் தலைவன்
அருகிலேயே சிறைப்புறமாக வந்திருக்கிறான். அவன் கேட்கும்படி தலைவி தோழியிடம்
பேசுகிறாள். “இவ்வளவு பெருமழையும் இடியுமாக இருக்கிறது; அதோடு வேலனும்
வெறியாட்டிற்காக வந்துவிட்டான். இனி இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்வது?”
என்று அவள் மறைமுகமாகக் கூறுகிறாள்.
இதன் மூலம், தன் உடல்
வேறுபாட்டிற்குக் காரணம் தெய்வக்குற்றம் அன்று;
தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட காதல் நோயே என்பதை அவன் உணர வேண்டும் என்று தலைவி
குறிப்பாக உணர்த்துகிறாள். மேலும், தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும்
என்ற குறிப்பும் இதில் அடங்கியுள்ளது. பாடலின் இறுதியில் வரும் களிற்றின் செயல்கள்
தலைவனுடைய செயல்களுக்கு உள்ளுறையாக அமைந்துள்ளன.
யாங்குச் செய்வாம்கொல் தோழி ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே வானம் பெயலொடு 5
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெருந் தண் குளவி குழைத்த பா அடி
இருஞ் சேறு ஆடிய நுதல கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த 10
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே.
அருஞ்சொற்பொருள்:
1. யாங்கு –
எவ்வாறு; கழை – மூங்கில்
2. காம்பு –
மூங்கிலின் தண்டு; விடர் – மலைப்பிளவு; சிலம்ப –
எதிரொலிக்க; உடன்று – வருந்தி
3. வரை – மலை,
பாறை; மிளிர்தல் – புரளுதல்; வீங்கு
செலல் – விரைந்து செல்லுதல்
4. கடுங்குரல் –
கடும் முழக்கம்; ஏறு – இடி; கனை
துளி – பெருமழைத்துளி; தலைஇ –
தொடங்கி
5. பெயல் ஆனாதே – மழை
பெய்வது நிற்கவில்லை; பெயலொடு – மழையோடு
6. மின்னு நிமிர்ந்தன்ன –
மின்னல் நிமிர்ந்து நிற்பது போன்ற; வேலன் –
முருகனை வழிபட்டு வெறியாட்டு நிகழ்த்தும் பூசாரி
7. பின்னு விடு –
பின்னிய கூந்தலை விடுதல்; முச்சி –
கூந்தலின் உச்சியில் அமைந்த கொண்டை; அளிப்பு ஆனாதே –
காத்தல் இயலாதாயிற்று
8. குளவி –
காட்டுமல்லிகை; குழைத்த – மிதித்துக் குழைத்த; பா அடி –
பரந்த அடி
9. இருஞ்சேறு – கரிய
சேறு; ஆடிய – பூசிய, அப்பிய; நுதல் –
நெற்றி; கொல்களிறு – கொல்லும் வலிமையுடைய
ஆண்யானை
10. பேதை –
அறியாமையுடையது; ஆசினி – ஆசினிப் பலா மரம்; ஒசித்த –
முறித்த
11. வீ –
மலர்; ததர் – செறிந்து பரவுதல்; வேங்கை –
வேங்கை மரம்; மலைகிழவன் – மலைநாட்டுத் தலைவன்
பதவுரை:
1. யாங்குச் செய்வாம்
கொல் தோழி ஓங்கு கழை - நாம் என்ன செய்வோம்?தோழி! உயர்ந்த மூங்கில்கள் நிறைந்த
2. காம்புடை விடர் அகம்
சிலம்ப பாம்பு உடன்று - மூங்கில்களையுடைய மலைப்பிளவுகளில் எதிரொலிக்க, பாம்புகள்
வருந்தி
3. ஓங்கு வரை மிளிர ஆட்டி
வீங்கு செலல் - உயர்ந்த பாறைகளில் புரண்டு துடிக்கச் செய்து, விரைந்து செல்லும்
4. கடும் குரல் ஏறொடு கனை
துளி தலைஇ - கடும் முழக்கமுடைய இடியுடன் பெருமழை பெய்யத் தொடங்கி
5. பெயல் ஆனாதே வானம்
பெயலொடு - மழை பெய்வதை நிறுத்தாமல் வானம் தொடர்ந்து பெய்கிறது; அந்த மழையோடு
6. மின்னு நிமிர்ந்தன்ன
வேலன் வந்து என - மின்னல் நிமிர்ந்து நிற்பது போன்ற வேலன் வந்ததால்
7. பின்னு விடு முச்சி
அளிப்பு ஆனாதே - பின்னிய கூந்தலின் உச்சியில் உள்ள பூவை அப்படியே காத்துக்கொள்ள
இயலாத நிலை ஏற்பட்டது.
8. பெரும் தண் குளவி
குழைத்த பா அடி - பெரிய குளிர்ந்த காட்டுமல்லிகைக் கொடியைத் தன் பரந்த கால்களால்
மிதித்துக் குழைத்த
9. இரும் சேறு ஆடிய நுதல
கொல் களிறு - கரிய சேற்றைப் பூசிய நெற்றியையுடைய கொல்லும் வலிமை கொண்ட ஆண்யானை
10. பேதை ஆசினி ஒசித்த -
அறியாமையால் ஆசினிப் பலா மரத்தை முறித்து,
11. வீ ததர் வேங்கைய மலை
கிழவோற்கே - மலர்கள் உதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின் கீழ் தங்கியிருக்கும்
மலைநாட்டுத் தலைவனுக்கு
கொண்டு
கூட்டு:
தோழி! காம்புடை விடரகம்
சிலம்ப, பாம்பு உடன்று ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்குசெலல் கடுங்குரல் ஏறொடு
கனைதுளி தலைஇப் பெயல் ஆனாதே வானம்; பெயலொடு மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தெனப்
பின்னுவிடு முச்சி அளிப்பு ஆனாதே; பெருந்தண் குளவி குழைத்த பா அடியும், இருஞ்சேறு
ஆடிய நுதலும் உடைய கொல்களிறு பேதை ஆசினியை ஒசித்த வீ ததர் வேங்கை மலைகிழவோற்கே
யாங்குச் செய்வாம் கொல் எனக் கூட்டுக.
உரை:
தோழி! உயர்ந்த
மூங்கில்கள் நிறைந்த மலைப்பிளவுகளில் எதிரொலிக்கும் வகையில் இடியுடன் கூடிய
பெருமழை தொடர்ந்து பெய்கிறது. அந்த இடியால் அஞ்சிய பாம்புகள் உயர்ந்த பாறைகளில்
புரளுகின்றன. இவ்வாறு மழை ஓயாத நிலையில், மின்னல் நிமிர்ந்து நிற்பது போன்ற வேலைக்
கையில் ஏந்திய வேலனும் வெறியாட்டிற்காக வந்துவிட்டான். அவன் வெறியாட்டுச் சடங்கில்
தலைவியின் கூந்தலில் உள்ள பூவை எடுத்துப் பயன்படுத்துவதால், அவள் பின்னிய
கூந்தலின் உச்சியில் உள்ள பூவை அப்படியே காத்துக்கொள்ள முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. அதேபோல், பெரிய குளிர்ந்த காட்டுமல்லிகைக் கொடியைத் தன் பரந்த
கால்களால் மிதித்துக் குழைத்து, கரிய சேற்றைத் தன் நெற்றியில் பூசிய கொல்லும்
வலிமையுடைய ஆண்யானை, அறியாமையால் ஆசினிப் பலா மரத்தை முறித்து, மலர்கள் உதிர்ந்து
பரவிய வேங்கை மரத்தின் கீழ் தங்கியுள்ளது. இத்தகைய மலைநாட்டுத் தலைவனுக்கு நாம்
இனி என்ன செய்ய முடியும்? என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
சிறப்புக்
குறிப்பு:
உள்ளுறை: இப்பாடலில்
களிற்றின் செயல்கள் தலைவனின் செயல்களுக்கு உள்ளுறையாக அமைந்துள்ளன. பெரிய குளவிக்
கொடியை மிதித்துக் குழைக்கும் களிறு, தலைவியின் நலத்தை நுகர்ந்து அவளை வாடவிட்ட
தலைவனைக் குறிக்கிறது. களிறு நெற்றியில் கரிய சேற்றை அணிந்திருப்பது, தலைவனால் ஏற்படும்
பழிச்சொல்லைக் குறிக்கிறது. அறியாமையால் ஆசினி மரத்தை முறித்தது, தலைவன்
அறியாமையால் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தாமதித்ததைக் குறிக்கிறது. இறுதியாக,
மலர்கள் உதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின் கீழ் களிறு தங்கியிருப்பது, தலைவன்
சிறைப்புறமாக வந்து தங்கியிருப்பதற்கு உள்ளுறையாக அமைகிறது. இதன்
மூலம், தலைவி தன் காதல் நோயைத் தீர்க்க வேண்டியவன் தலைவனே என்றும், இனியும்
தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் மறைமுகமாக உணர்த்துகிறாள்.
Comments
Post a Comment