50. நாண் இலை எலுவ!

 

50. நாண் இலை எலுவ!

 

பாடியவர்: மருதம் பாடிய இளங்கடுங்கோ

இவர்‌ சேரர்‌. இவர் பாலைபாடிய பெருங்‌ கடுங்கோவின்‌ தம்பியாகக் கருதப்படுகிறார். மருதத்‌ திணையைச்‌ சிறப்பித்துப்‌ பாடியதால் இவ‌ர் மருதம் பாடிய என்ற அடைமொழியைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்றியதாக நற்றிணையில் ஒரு செய்யுளும் (50), அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (96, 176) உள்ளன.

 

திணை: மருதம்

துறை: தோழி பாணற்கு வாயில் மறுத்தது

துறை விளக்கம்: தலைவன் பரத்தையரிடம் (வேறு பெண்களிடம்) சென்று வந்ததால் கோபமுற்றிருக்கும் தலைவியின் ஊடலைத் தணிக்க, பாணன் தலைவனின் தூதனாக வருகிறான். ஆனால், பாணர்களின் கெஞ்சுதலையோ சமரசப் பேச்சையோ ஏற்க மறுத்து, தலைவனின் தவறைக் சுட்டிக்காட்டி, அவர்களைத் தோழி மனைக்குள் (வீட்டுக்குள்) நுழைய விடாமல் வாயிலிலேயே மறுத்துத் திருப்பி அனுப்புவதே "தோழி பாணர்க்கு வாயில் மறுத்தது" என்னும் துறையாகும்.

பாடலின் பின்னணி:

தலைவன் பரத்தையருடன் தொடர்பு கொண்டதால் தலைவி அவன்மீது ஊடல் கொண்டிருக்கிறாள். தலைவன் தனது பக்கம் இருந்து சமாதானம் செய்யப் பாணனைத் தூதாக அனுப்புகிறான். பாணன் வந்து தலைவியைச் சந்திக்க முயலும்போது, தோழி அவனுக்கு வாயில் மறுக்கிறாள்.

 

அதற்குக் காரணமாகத் தலைவன் முன்பு செய்த ஒரு செயலையும் தோழி நினைவுபடுத்துகிறாள். ஒருமுறை விழா நடைபெற்ற இடத்தில் பெண்கள் துணங்கை என்னும் கைகோத்துக் கூத்து ஆடினர். தலைவன் குழை, மாலை, குறுந்தொடி போன்ற அணிகலன்களை அணிந்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தான். தோழி அங்கு சென்றபோது, திடீரென அவன் அவளை எதிர்கொண்டு அணைத்தான். அவன் குழையும், மாலையும் , வளயல்களும் அணிந்திருந்ததால், அவன் யார் என்று  தோழிக்குத் தெரியவில்லை. அதனால், அவள் அஞ்சி விலகினாள். ஆனால் தலைவனோ அவளது அச்சத்தைப் புரிந்து கொள்ளாமல், “உன் நெற்றியில்  உள்ள பசலை அழகாக இருக்கிறது.” என்றான்.   அதற்கு அவள், “நீ நாணம் இல்லாதவன்!” என்று சினத்துடன் கூறி விலகிச் செல்கிறாள். இந்நிகழ்வை நினைவுபடுத்தியே தோழி, பாணனுக்கு வாயில் மறுக்கிறாள்.

 

அறியா மையின் அன்னை அஞ்சி
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடுமிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்              5
’கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று’ என
’யாணது பசலை’ என்றனன் அதன் எதிர்
’நாண் இலை எலுவ!’ என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறு நுதல் அரிவை; போற்றேன்                   10
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே

 

 

அருஞ்சொற்பொருள்:

1. அறியாமையின் – அறியாமையால்; அன்னை – தலைவி (தலைவியைத் தோழி அன்னையே என்று அழைக்கிறாள்)

2. குழையன் – காதில் கழை அணிந்தவன்; கோதையன் – மாலை அணிந்தவன்;

 குறும் பைந்தொடியன் – சிறிய பசுமையான வளையல் அணிந்தவன்

3. விழவு – திருவிழா; துணங்கை - பெண்கள் கைகோத்துக் கூடி ஆடும் கூத்து;

தழூஉகம் – தழுவுதல், அணைத்தல்

4. நெடு நிமிர் தெரு – நீண்ட உயர்ந்த தெரு; கை புகு கொடும் இடை - ஒருவர் மற்றொருவரை எதிர்கொள்ளும் வளைந்த (குறுகிய) இடம்

5. நொதுமலாளன் – அயலான்; கதுமென – விரைவாக

6. போற்று – எச்சரிக்கையாக இரு

7. யாணது – அழகானது; பசலை - காதல் அல்லது துயரத்தால் உடலில் தோன்றும் நிறமாற்றம்

8. எலுவன் – தோழன்; வந்திசினே

9. செறுநர் – பகைவர்; விழையும் – விரும்பும்; செம்மலோன் – சிறந்தவன், பெருமையுடையவன்

10. நறு நுதல் – மணமுள்ள நெற்றி. அரிவை – இளம்பெண்

11. சிறுமை – தாழ்வு; பெருமை – உயர்வு

 

பதவுரை:

1. அறியாமையின் அன்னை அஞ்சி என் - அறியாமையால், தோழி, அஞ்சி

2. குழையன் கோதையன் குறும் பைம் தொடியன் நம் – காதில் குழை அணிந்தவனாகவும், மாலை அணிந்தவனாகவும், குறுகிய பசுமையான வளையல் அணிந்தவனாகவும்

3. விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல - விழாவில் நடைபெறும் துணங்கை ஆட்டத்துடன் தழுவுதலுக்குச் செல்லும்போது,

4. நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை - நீண்ட உயர்ந்த தெருவில், ஒருவர் மற்றொருவரை எதிர்கொள்ளும் வளைந்த இடத்தில்,

5. நொதுமலாளன் கதுமென தாக்கலின் -  அயலானாகிய அவன் விரைந்து வந்து என்னை எதிர்கொண்டதால்,

நீ நாணம் இல்லாதவன், தோழனே!” என்று கூறி வந்துவிட்டேன்.கேட்போர் உளர்கொல் இல்லைகொல்? போற்று என – இதைக் கேட்பவர் யாரேனும் உள்ளார்களோ, இல்லையோ? எச்சரிக்கையாக இரு என்று நான் கூற,

7. யாணது பசலை என்றனன் அதன் எதிர் - “உன் பசலை அழகாக உள்ளது” என்றான்; அதற்கு எதிர்மொழியாக,

8. நாண் இலை எலுவ என்று வந்திசினே - “உனக்கு வெட்கம் இல்லை, தோழனே” என்று கூறி வந்துவிட்டேன்.

9. செறுநரும் விழையும் செம்மலோன் என - பகைவர்களாலும் விரும்பப்படும் சிறந்தவன் என்று,

10. நறு நுதல் அரிவை போற்றேன் - மணமுள்ள நெற்றியை உடைய தலைவியே! நான் அவனைப் போற்றவில்லை

11. சிறுமை பெருமையின் காணாது துணிந்தே - என் சிறுமை (அறியாமை) பெரிதாக இருப்பதை உணராமல், அவனுடைய பெருமையை ஆராயாமல் துணிந்து பேசிவிட்டேன்.

 

கொண்டு கூட்டு: குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் நெடு நிமிர் தெருவில் கதுமெனத் தாக்கலின், ‘கேட்போர் உளர்கொல் இல்லைகொல்? போற்று’ என யான் கூற, ‘யாணது பசலை’ என்றனன். அதன் எதிர், ‘நாண் இலை, எலுவ!’ என்று வந்திசினே. நறு நுதல் அரிவை! செறுநரும் விழையும் செம்மலோன் என அவனைப் போற்றாது, என் சிறுமை பெருமையின் காணாது துணிந்தேனே எனக் கூட்டுக.

 

உரை:

அன்னையே! முன்பொரு நாள் நான் விழா நடைபெற்ற இடத்தில் பெண்கள் ஆடும் துணங்கை ஆட்டத்தைக் காணச் சென்றேன். அப்போது குழையும் மாலையும் சிறிய பசுமையான வளையல்களும் அணிந்திருந்த நம் தலைவன், அயலானைப்போல எனக்கு எதிர்ப்பட்டான். நீண்ட உயர்ந்த தெருவில் உள்ள வளைந்த இடத்தில் அவன் விரைந்து வந்து என்னை எதிர்கொண்டதால் நான் அஞ்சி, “இவ்வாறு செய்யும் உன்னைக் கேட்பவர் யாரேனும் உள்ளார்களோ, இல்லையோ? எச்சரிக்கையாக இரு!” என்று கூறினேன்.

ஆனால், அவன் என் அச்சத்தையும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், “உன் பசலை அழகாக உள்ளது” என்றான். அதற்கு நான், “நீ நாணம் இல்லாதவன், தோழனே!” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.பகைவர்களாலும் விரும்பப்படும் சிறந்தவன் என்று கருதி அவனைப் போற்றியிருக்க வேண்டிய நான், அவ்வாறு செய்யவில்லை. என் அறியாமை மிகுதியையும் அவனுடைய பெருமையையும் ஆராயாமல் துணிந்து அவ்வாறு பேசிவிட்டேன்.


 

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!