49. அறியின் எவனோ, தோழி?
49. அறியின் எவனோ, தோழி?
பாடியவர்:
நெய்தல் தத்தனார்
தத்தன் என்பது இவர் இயற்பெயர்.
கொடியூர்கிழாரின் மகனார். நெய்தல் திணையைச் சிறப்பாகப் பாடியதனால் ‘நெய்தல் தத்தனார்’
என அழைக்கப்பட்டார். நற்றிணை 49, 130 ஆகிய இரண்டு பாடல்களும் அகநானூறு 243-ஆம் பாடலும்
இவரால் பாடப்பட்டவை.
திணை:
நெய்தல்
துறை: தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்
துறை விளக்கம்: தலைவன் சிறைப்புறமாக இருந்து தோழியின் பேச்சைக் கேட்கிறான்; தலைவியின் ஆற்றாமையை வியப்பதுபோலத் தோழி கூறி, தலைவன் விரைந்து வந்து வரைந்து கொள்ளுமாறு தூண்டுகிறாள்.
கடற்கரைச் சிற்றூரில்
பகல் முழுவதும் பரதவர்கள் கடலில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மாலைப் பொழுது
நெருங்கியதும், வலையில் சிக்கிய இறால்களையும் பிடித்த மீன்களையும் எடுத்துக்கொண்டு
அவர்கள் கரைக்குத் திரும்பினர். கடற்பறவைகளும் இரை தேடுவதை நிறுத்தி அமைதியடைந்தன.
வெண்மையான மணல் மேடுகளைக் கடந்து இருள் மெல்லப் பரவத் தொடங்கியது. புன்னை மரத்தின்
மணமும் தாழை மலரின் நறுமணமும் காற்றில் கலந்தன. அந்த நேரத்தில், தலைவன் இரவில் வருவான்
என்று எதிர்பார்த்து தலைமகள் ஆவலுடன் காத்திருந்தாள். அவளது தயக்கத்தைப் போக்கி, தலைவன்
வருவதற்குரிய இரவுப்பொழுது வந்துவிட்டது என்பதை உணர்த்தி, அவனது வருகையை ஏற்றுக்கொள்ளுமாறு
தோழி அவளை நயமாக வற்புறுத்துகிறாள். ஆனால்
தலைவன் இன்னும் வராததால், அவனுக்காகக் காத்திருக்கும் தன் ஆற்றாமையையும் தோழி வெளிப்படுத்துகிறாள்.
படு
திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே
முடிவலை முகந்த முடங்கு இறா பரவைப்
படுபுள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே
கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து 5
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என
சென்று நாம் அறியின் எவனோ தோழி
மன்றப் புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே 10
அருஞ்சொற்பொருள்:
1. படுதிரை - பெரிதாக எழும் அலை; கொழீஇய – கொண்டுவந்து குவித்த; எக்கர் – மணல்
மேடு
2. தொடியோர் – வளையல் அணிந்த பரதவ மகளிர்;
மடிந்தென – தூங்கியதால், உறங்கியதால்; புலம்பின்று - தனிமையுற்று
3. முடிவலை - முடிச்சுகளையுடைய வலை; முகந்த
- எடுத்த; முடங்கு - வளைந்திருக்கும்; பரவை – கடல்
4. படுபுள் – இரை தேடும் பறவைகள்; ஓப்பல்
– விரட்டுதல்; மாய்ந்தன்று – கழிந்தது
5. கோட்டுமீன் – சுறாமீன்; எறிந்த – கொன்ற
(பிடித்த); உவகையர் - மகிழ்ச்சியுடையவர்;
வேட்டம் – வேட்டை, மீன்பிடிக்கும் தொழில்; மடிந்து – கைவிட்டு
6. எமர் - எம்மவர்; அல்கினர் – தங்கினர், ஓய்ந்தனர்;
ஏமார்த்தல் – மனம் கலங்குதல்
8. மன்றம் – ஊர்ப்பொதுவிடம்; மா - பெரிய; சினை
- கிளை; நறு வீ – மணம்மிக்க மலர்
9. முன்றில் – வீட்டின் முன்புறம்
10. சேர்ப்பன் – கடற்கரைத் தலைவன்
பதவுரை:
1. படுதிரை கொழீஇய பால் நிற எக்கர் - பெரிய அலைகள் கொண்டு வந்து குவித்த பால் போன்ற
வெண்ணிற மணல் மேடுகள்
2. தொடியோர் மடிந்து என துறை புலம்பின்
– வளையல் அணிந்த இளமகளிர் தம்
வீடுகளில் உறங்கியதால் கடற்கரைத் துறை தனிமையுற்றது.
3. முடிவலை முகந்த முடங்கு இறா பரவை - முடிச்சுகளையுடைய வலையில் பிடிக்கப்பட்டு வந்த
வளைந்த உடலையுடைய இறால்களைத் தின்ன வரும் கடற்
4. படுபுள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே -
பறவைகளை விரட்டியதால் பகலும் கழிந்தது;
5. கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம்
மடிந்து - சுறாமீன்களைப் பிடித்த மகிழ்ச்சியுடையவராய், தம் வேட்டையை விடுத்து
6. எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என –
எம்மவர்களும் மனையில் தங்கினர்; யாம் மனம் கலங்கினோம் என
7. சென்று யாம் அறியின் எவனோ தோழி - சென்று நாம் அவனிடம் (தலைவனிடம்) கூறினால்
என்ன, தோழி?
8. மன்றப் புன்னை மா சினை நறு வீ -
மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
9. முன்றில் தாழையொடு கமழும் - வீட்டு முற்றத்தில் இருக்கும் தாழையோடு சேர்ந்து
மணங்கமழும்
10. தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல்
ஊர்க்கே - தெளிந்த கடலைச் சார்ந்த நெய்தல்நிலத் தலைவன் வாழும் சிறிய நல்ல ஊருக்கு
கொண்டு கூட்டு: தோழி! தெண்கடற் சேர்ப்பன் வாழும் சிறுநல் ஊர்க்குச்
சென்று, “துறை புலம்பின்று; பகல் மாய்ந்தன்று; எமரும் வேட்டம் மடிந்து அல்கினர்; யாம்
ஏமார்ந்தனம்” எனக் கூறி, அவன் கருத்தை அறியின் எவனோ? எனக் கூட்டுக.
உரை:
தோழி! பெரிய அலைகள்
கொண்டு வந்து குவித்த பால் போன்ற வெண்மையான மணல் மேடுகளில் விளையாடிய வளையல்
அணிந்த இளமகளிர் தத்தம் வீடுகளுக்குச் சென்று உறங்கியதால் கடற்கரைத் துறை
தனிமையுற்றது. முடிச்சுகளையுடைய வலைகளில் பிடித்து வந்த வளைந்த இறால்களைத் தின்ன
வரும் கடற்பறவைகளை விரட்டுவதால் பகற்பொழுதும் கழிந்தது. கொம்பினையுடைய சுறா முதலிய
மீன்களைப் பிடித்த மகிழ்ச்சியுடைய எம்மவரும் மீன்பிடித் தொழிலை முடித்து வீடுகளில்
தங்கிவிட்டனர். இவ்வாறு இரவுப்பொழுது வந்துவிட்டது; நாமும் தலைவன் வராததால் மனம்
கலங்கியிருக்கிறோம். ஆகவே, புன்னை மரத்தின் பெரிய கிளைகளில் உள்ள மணமிக்க மலர்கள்
வீட்டுமுற்றத்தில் உள்ள தாழை மலர்களோடு சேர்ந்து மணம் வீசும், தெளிந்த கடலைச்
சார்ந்த தலைவன் வாழும் அந்தச் சிறிய நல்ல ஊருக்குச் சென்று, “நாம் இவ்வாறு
ஆற்றாமையுடன் இருக்கிறோம்” என்று கூறி அவன் கருத்தை அறிந்தால் என்ன, தோழி?
Comments
Post a Comment