48. எம் கண் உளபோலச் சுழலும்
48. எம் கண் உளபோலச் சுழலும்
பாடியவர்: பாலை
பாடிய பெருங்கடுங்கோ
திணை: பாலை
துறை: பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது
துறை விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரியப்போகும் எண்ணத்தை உணர்த்தியபோது, அதனை அறிந்த தோழி சொல்லியது.
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைப்
பிரிந்து செல்ல எண்ணுகிறான். அவனுடைய பிரிவைத் தோழி உணர்கிறாள். அவன் செல்லும் வழி
கொடிய பாலைநில வழியாகும். அங்கு மறவர்கள் வழிப்போக்கர்களைக் குறிவைத்து அம்புகளை
எய்யத் தயாராக உள்ளனர். எனவே, தலைவன் அந்த ஆபத்தான காட்டைக் கடந்து செல்லாமல், தங்களிடையே
தங்க வேண்டும் என்று தோழி அறிவுறுத்துகிறாள்.
அன்றை
அனைய ஆகி இன்றும் எம்
கண் உள போலச் சுழலும் மாதோ
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப்பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை 5
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே
அருஞ்சொற்பொருள்:
1. அன்றை அனைய – அன்றைய நாளைப் போன்ற
2. மாதோ – மாது+ஒ, மாது, ஓ இரண்டும் அசைச்சொற்கள்
3. புல் இதழ் – மெல்லிய இதழ்; கோங்கு – கோங்கு
மரம்;
குடைப் பூ – குடை போன்ற மலர்
4. வைகுறு – வைகறை; நினைய – நினைக்கும்படி
5. புறவு - காடு; அணி - அழகு; கடம் – காடு
6. கிடின் - ஒலிக் குறிப்பு; இடிக்கும் - ஒலிக்கும்;
கோல் தொடி மறவர் – திரண்ட தோள்வளை அணிந்த வழிப்பறி செய்யும் வீரர்கள்
7. வடி – கூர்மை; நவில்தல் – செய்தல்; வடி
நவில் - கூர்மையாகச் செதுக்கப்பட்ட; வினையர் – கொலைத்தொழில் புரிவதில் திறமையுடையவர்கள்
8. அமர் - போர்; உறுதர – வந்தபொழுது
9. எமர் இடை - எங்களிடையே; உறுதர – வந்தபொழுது;
ஒளித்த - மறைந்துகொண்ட
பதவுரை:
1. அன்றை அனைய ஆகி இன்றும் எம் -
அன்றைக்கு இருந்ததைப் போன்றே இன்றைக்கும் எமது
2. கண் உள போல சுழலும் மாதோ -
கண்ணுக்குள் இருப்பதுபோலச் சுழல்கிறது!
3. புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை
பூ - மென்மையான இதழ்களைக் கொண்ட கோங்கு மலரின் குடைபோன்ற
மலர்
4. வைகுறு மீனின் நினைய தோன்றி - வைகறைக் காலத்து விண்மீனைப்போலத் தோன்றி
5. புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை
- காட்டை அழகுசெய்த பூவின் மணத்தையுடைய
காட்டில்
6. கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
- ‘கிடின்’ என்று ஒலிக்கும் வகையில்
ஒன்றுடன் ஒன்று மோதும் வலிமையான தோள்வளைகளை அணிந்த மறவர்கள்
7. வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது –
கூர்மையாக்கப்பட்ட அம்புகளை எய்வதில்
வல்ல மறவர்களுக்கு அஞ்சாமல்
8. அமர் இடை உறுதர நீக்கி நீர் - போரிட வந்த அவர்களுடன் போரிட்டு அவர்களை
விரட்டி, நீர்
9. எமர் இடை உறுதர ஒளித்த காடே -
என்னுடைய உறவினர் வந்தபோது மறைந்துகொண்ட காடு
கொண்டு கூட்டு: அன்றை அனையவாகி இன்றும் எம் கண்ணுளபோலச்
சுழலும் எனக் கூட்டுக.
உரை:
அன்று நீ தலைவியோடு
உடன்போக்காகச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இன்றும் எம் கண்முன்னே
நிகழ்வதைப்போல நினைவில் சுழன்று கொண்டிருக்கின்றன. சிறிய புறவிதழ்களையும்
மென்மையான இதழ்களையும் உடைய குடை போன்ற கோங்கு மலர்கள், அதிகாலையில் தோன்றும்
விண்மீன்களைப்போலக் காட்சியளித்தன. அவை நிறைந்திருந்ததால் காடு அழகுபெற்று,
எங்கும் மலர்களின் மணம் வீசியது.
அத்தகைய
காட்டுவழியில், திரண்ட வீர வளையல்களை அணிந்த மறவர்கள் ‘கிடின்’ என ஒலிக்குமாறு
தங்கள் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் கூர்மையான அம்புகளை எய்வதில்
வல்லவர்களாகவும், அஞ்சாத கொடுந்தொழில் புரிபவர்களாகவும் இருந்தனர். அவர்கள்
உம்முடன் போரிடுவதற்காக வந்தபோது, நீ அவர்களுக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்று,
அவர்களைப் போரிட்டு விரட்டினாய். ஆனால், அதற்குப் பின்னர் எம் உறவினர்கள் உம்மைத்
தேடி அங்கு வந்தபோது, அவர்களை எதிர்கொள்ளாமல் நீ காட்டில் ஒளிந்துகொண்டாய்.
Comments
Post a Comment