47. கூறின் எவனோ தோழி!

 

47. கூறின் எவனோ தோழி!

 

பாடியவர்: நல்வெள்ளியார்

இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 7-ன் உரையில் காணலாம்.

 திணை: குறிஞ்சி

 துறை: சிறைப்புறமாகத் தோழி தலைமகட்கு உரைப்பாளாய்ச் சொல்லியது

 துறை விளக்கம்: தலைவன் சிறைப்புறத்தானாக இருந்து கேட்கும் நிலையில், தோழி தலைவியிடம் பேசுவதுபோலத் தலைவனுக்கும் தன் கருத்து விளங்கும்படி கூறுகிறாள்.

 பாடலின் பின்னணி:

தலைவனைப் பிரிந்ததால் தலைவி பசலை கொண்டு வாடுகிறாள். அவளது மெய்வேறுபாட்டிற்குக் காரணம் தலைவனின் பிரிவே என்பதை அறியாத அன்னை, இதனைத் தெய்வத்தால் ஏற்பட்ட நோய் என்று கருதி, கழங்கு பார்த்து வெறியாட்டு நடத்த எண்ணுகிறாள். இந்நிலையில் தலைவன் சிறைப்புறத்தானாக இருந்து கேட்கும்படி தோழி தலைவியிடம் பேசுகிறாள். புலியால் ஆண் யானை கொல்லப்பட்டதால் துயருற்ற பெண் யானை தன் கன்றைத் தழுவிக்கொண்டு வருந்தி நிற்பதை எடுத்துக்காட்டி, தலைவியின் பசலைக்கும் தலைவனின் பிரிவே காரணம் என்பதை அவனுக்கு உணர்த்துகிறாள். மேலும், அன்னை செய்யும் வெறியாட்டு இப்பசலைக்குத் தீர்வாகாது என்பதையும் குறிப்பாக உணர்த்துகிறாள்.

 

பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்             5
கானக நாடற்கு இது என யான் அது
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்                    10
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே

 

அருஞ்சொற்பொருள்:

1. களிறு – ஆண் யானை; உழுவை - புலி; அட்டென  - கொன்றுவிட்டதால்; இரும் – கரிய; பிடி – பெண் யானை

2. உயங்கு பிணி – துன்பம் தரும் நோய், துயரம்; இயங்கல் – நகர்தல்

3. நெய்தல் – நெய்தல் செடி; பாசடை – பசுமையான இலை; புரையும் – போன்ற

4. பைதல் – துன்புற்ற, வருந்திய; குழவி - கன்று; தழீஇ – தழுவி, அணைத்துக்கொண்டு; ஒய்யென –விரைவாக

5. அரும் – ஆற்றுதற்கு அரிய ; உறுநர் - பெற்றவர்; வைகும் – தங்கும்

6. கானகம் – காடு

8. அணங்கு – தெய்வம்; கழங்கு - குறி காணப் பயன்படும் காய் (பொருள்); கோட்டம் – மாறுபாடு

9. வெறி – முருகனை வழிபடும் வெறியாட்டு;  மறி – ஆட்டுக்குட்டி

10. அயரும் - செய்வாள்; முருகு – முருகன்

 

பதவுரை:

1. பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி - பெரிய ஆண் யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை

2. உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது - வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல்

3. நெய்தல் பாசடை புரையும் அம் செவி - நெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய

4. பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென – வருந்துகின்ற இளமையான தன் அழகிய கன்றைத் தழுவிக்கொண்டு விரைவாக

5. அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் - ஆற்றுதற்கரிய புண்ணைப் பெற்றவர்போல வருந்தி இருக்கும்

6. கானக நாடற்கு இது என யான் அதுகானக நாட்டின் தலைவனிடம், “இஃது உன் தலையளியின்மையால் ஏற்பட்ட நிலை” என்று நான் அதைக்  

7. கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து - கூறினால் என்ன? தோழி! உன் மெய்வேறுபாட்டை வேறு காரணத்தால் ஏற்பட்டது என்று கருதி

8. அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி - தெய்வத்தால் ஏற்பட்டதா என்பதை அறியும் கழங்கில் மாறுபட்ட குறியைக் காட்டி

9. வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – இந்நோய்க்குத் தீர்வு வெறியாட்டே என்று கருதிய மனத்துடன் ஆட்டுக்குட்டியை அறுத்து

10. அன்னை அயரும் முருகு நின் - அன்னை மேற்கொள்ளும் முருக வழிபாடான வெறியாட்டு உன்

11. பொன் நேர் பசலைக்கு உதவா மாறே - பொன்னைப் போன்ற பசலையைத் தீர்ப்பத்தற்குப் பயன்படாததால்   

 

கொண்டு கூட்டு: கானக நாடற்கு “இஃது என” யான் அது கூறின் எவனோ? அன்னை வேறுணர்ந்து, கழங்கின் கோட்டம் காட்டி, வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து அயரும் முருகு நின் பொன் நேர் பசலைக்கு உதவாமாறே எனக் கூட்டுக.

 

உரை:

தோழி! பெரிய ஆண் யானையைப் புலி கொன்றதாகக் கருதிய கரிய பெண் யானை

மிகுந்த துன்பத்தினால் நடந்து செல்ல முடியாமல் தவித்து, நெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவிகளையுடைய தன் குட்டியைத் தழுவியபடி, ஆறாத அரும்புண்ணால் துடிப்பவரைப்போல வருந்தித் தங்கும் கானக நாட்டின் தலைவனுக்கு, "உன் நிலைக்குக் காரணம் இதுதான்" என்று நான் உண்மையைச் சொன்னால் என்ன?

உன் மெய்வேறுபாட்டிற்குக் காரணம் தலைவனின் பிரிவே என்பதை அறியாத அன்னை, வேலனைக் கொண்டு கழங்கு பார்த்து, முருகனால் ஏற்பட்ட தெய்வநோய் என்று கருதி, ஆட்டுக்குட்டியை வெட்டி வெறியாட்டம் எடுக்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால், அன்னை செய்யும் இந்த வெறியாட்டு, உனக்கு உண்டாகியிருக்கும் பொன் போன்ற பசலை நோயைப் போக்க உதவப் போவதில்லையே!

 

சிறப்புக் குறிப்பு:

உள்ளுறை: “ஆண் யானையைப் புலி கொன்றுவிட்டது. அதனால் மிகுந்த சோகமடைந்த பெண் யானை, எங்கும் நகர முடியாமல் தன் குட்டியை இறுக அணைத்துக்கொண்டு ஒரே இடத்தில் தங்கியிருக்கிறது.” என்பது,  ”தலைவனின் பிரிவால் தலைவியின் உடல் மெலிந்து, பசலை படர்ந்து, அவனையே நினைத்து ஏங்கி முடங்கிக் கிடக்கிறாள்.” என்பதைக் குறிக்கிறது.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!