45. எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

 

45. எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

 

பாடியவர்: உலோச்சனார், ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை

இப்பாடலை உலோச்சனார் பாடியதாகச் சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர். சில பதிப்புகளில் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 திணை: நெய்தல்

துறை: குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது

துறை விளக்கம்: லைவியைச் சந்திக்க உதவி கேட்டு வரும் தலைவனை உடனடியாகச் சந்திக்க விடாமல் தோழி தடுத்துத் தள்ளிப்போடுகிறாள். 

 பாடலின் பின்னணி:

தலைவன் தலைவியைக் கூடி மகிழ விரும்பி (குறை நயந்து) வருகின்றான். "நாங்கள் மீன் பிடிக்கும் எளிய குடிசை வாழ் மக்கள்; நீயோ தேர் ஊர்ந்து வரும் செல்வந்தன். நம் இருவருக்கும் இடையே குலத்தாலும் வளத்தாலும் பெரிய வேறுபாடு உள்ளது" என்று கூறித் தோழி தலைவனைத் தூர விலகி நிற்குமாறு கூறுகிறாள்.

 

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே                 5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே                       10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

 

அருஞ்சொற்பொருள்:

1.கானல் - கடற்கரைச் சோலை; நண்ணிய - அடுத்துள்ள; காமர் – அழகிய, விரும்பத்தக்க; சிறுகுடி - சிற்றூர்

2. உள்புக்கு – உள்ளே புகுந்து

3. மீன் எறி - மீனைப் பிடித்தல், மீன் வேட்டையாடுதல்; பரதவர் – நெய்தல் நில மக்கள், மீன் பிடிப்பவர்கள்

4. நுடங்கும் - அசையும்; நியமம் - அங்காடி, கடைத்தெரு ; மூதூர் – பழைமையான ஊர்

5. கடுந்தேர் – விரைந்து செல்லும் தேர்

6. உணக்குதல் - உலர்த்துதல்;

7. இனப் புள் - பறவைக் கூட்டம்; ஓப்பும் – விரட்டும், ஓட்டும்

8. புலவு - மீன் நாற்றம் , புலால் நாற்றம்; நின்றீமோ – தள்ளி நில்லுங்கள்

9. பெரு நீர் விளையுள் - கடலிலிருந்து கிடைக்கும் வளம் (மீன்); விளையுள் –

10. புரை – ஒத்த தன்மை; சமமாக இருத்தல்

11. செம்மல் – உயர்ந்தவன், சிறப்பானவன், தலைவன்;  உடைத்தே  - உண்டு

 

பதவுரை:

1. இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி - இவளோ, கடற்கரைச் சோலையை அடுத்துள்ள அழகிய சிறுகுடியைச் சேர்ந்தவள்,

2. நீல் நிற பெருங்கடல் கலங்க உள் புக்கு - நீல நிறப் பெருங்கடல் கலங்குமாறு அதன் உள்ளே புகுந்து

3. மீன் எறி பரதவர் மகளே நீயே - மீனைப் பிடிக்கும் பரதவர் மகள் இவள்! நீயோ,

4. நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர் - நெடிய கொடிகள் அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்

5. கடுந் தேர் செல்வன் காதல் மகனே - விரைந்து செல்லும் தேரையுடைய செல்வனின் அன்புக்குரிய மகன்!

6. நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி - கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைத்து,

7. இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ - அவற்றைக் கவர வரும் பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்?

8. புலவு நாறுதும் செல நின்றீமோ - எம்மிடம் புலால் நாறுகிறது. அகன்று சென்று நிற்பாயாக,

9. பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை - பெரிய கடலால் கிடைக்கும் வளத்தைக் கொண்ட எங்களுடைய சிறிய நல்ல வாழ்க்கை

10. நும்மொடு புரைவதோ அன்றே - உம்மோடு ஒத்துப்பார்க்கும் அளவுக்குச் சிறப்பானதன்று,

11. எம்மனோரில் செம்மலும் உடைத்தே - எம் பரதவர் குடியிலும் உம்மைப் போல் உயர்வானவர்கள் உண்டு.

    

கொண்டு கூட்டு: இவள் பரதவர் மகள், நீ கடுந்தேர்ச் செல்வன் காதல் மகன்; இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? புலவு நாறுதும், செல நின்றீமோ; எம் சிறுநல் வாழ்க்கை புரைவதோ அன்றே; எம்மனோரில் செம்மலும் உடைத்து எனக் கூட்டுக. 

 

உரை:

தலைவனே! என் தோழியோ கடற்கரைச் சோலையின் அருகில் உள்ள அழகிய சிற்றூரில் உள்ள, கடலில் சென்று மீனைப் பிடிக்கும் பரதவரின் மகள்.   நீயோ பெரிய கொடிகள் பறக்கும் கடை வீதிகள் உள்ள பழமையான ஊரில் விரைந்துச் செல்லும் தேரையுடைய செல்வந்தரின் அன்பு மகன்.  கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைத்து பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்?  இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது.  எனவே எம்மை நெருங்காது சற்றுத் தள்ளியே நிற்பாயாக.   பெரிய கடல் தரும் பயனால் நாங்கள் எளிய நல்ல வாழ்க்கையை வாழ்கின்றோம்.  அஃது உன்னுடையதைப் போன்று உயர்வானது அன்று என்றாலும், எங்கள் நடுவிலும் உயர்ந்தோர் உள்ளனர்!

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!