44. மலைநாடன் மகளை இனிக் காண்பது அரிது
44. மலைநாடன் மகளை இனிக் காண்பது அரிது
பாடியவர்: பெருங்கௌசிகனார்
இவர் நற்றிணையில் இரண்டு செய்யுட்கள் (44, 139)
இயற்றியுள்ளார். இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் பத்துப்பாட்டில் உள்ள
மலைபடுகடாம் என்ற பாடலை இயற்றியுள்ளார். நற்றிணைப்
பாடல்களை இயற்றிய பெருங்கௌசிகனாரும், மலைபடுகடாம் இயற்றிய இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனாரும்
ஒருவரே எனச் சிலர் கருதுகின்றனர்.
திணை: குறிஞ்சி
துறை: இற்செறிப்பின் பிற்றை
ஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது
துறை
விளக்கம்: தலைவியின் களவுறவு தெரிந்ததால் அவளை
வீட்டில் அடைத்து வைத்த பிறகு, மறுநாள் வழக்கமான சந்திப்பு இடத்திற்கு வந்த தலைவன்
அவளைக் காணாமல் தன் நெஞ்சிடம் பேசுகிறான்.
பாடலின் பின்னணி:
களவொழுக்கத்தில்
தலைவியோடு காதல் கொண்ட தலைவன், அவளை வழக்கமாகத் தினைப்புனத்தில் சந்தித்தான். களவொழுக்கம்
வெளிப்பட்டதால் தலைவி இற்செறிக்கப்பட்டிருந்தாள். தினை விளைந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்ததால், தினைப்புனத்தில்
அவளைச் சந்திக்கும் வழக்கமான வாய்ப்பு இனி இல்லாமல் போகிறது.
இற்செறிப்புக்கு
மறுநாள் தலைவன் தான் வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வந்து தலைவியைக் காணாது வருந்துகிறான்.
தலைவி தன் தோழியர் கூட்டத்துடன் அருவியில் நீராடியதும், நீண்ட நேரம் நீராடியதால் அவள்
கண்கள் சிவந்திருந்ததும், குறிப்பாகப் பார்க்காமல் பொதுவாகத் தன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்துத் தன் வீட்டிற்குச் சென்ற பழைய
நிகழ்வுகளும் அவன் நினைவுக்கு வருகின்றன.
"வளைந்த
கதிர்களைக் கொண்ட தினை விளையும் காலத்தில், பெரிய சுற்றத்தையுடைய குறவர்கள் விழா
எடுத்து மகிழும் முற்றத்தையும், ஆசினிப் பலா மரங்கள் நிறைந்த தோட்டத்தில்
மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தில் மேகங்களின் இயக்கத்தைக் காணும் நல்ல
மலைநாட்டின் தலைவனுடைய மகளான இவளை, இனி நான் காண்பது அரிது" என்று எண்ணித்
தலைவன் தன் நெஞ்சிடம் கூறி வருந்துகிறான்.
பொரு
இல் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனை வயின் பெயர்ந்த காலை நினைஇய
இனிக்காண் பரியள்என் நெஞ்சே புனத்த 5
நீடு இலை விளை தினை கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்
குடம் காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து 10
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே
அருஞ்சொற்பொருள்:
1.பொரு - ஒப்பு ; ஆயம் – கூட்டம்
2. பேர் அமர் மழைக்கண் – விருப்பத்தைத் தரும் பெரிய குளிர்ந்த
கண்கள்
3. குறியா நோக்கம்
- இயல்பாகப்
பார்ப்பதுபோலப் பார்க்கும் குறிப்பற்ற பார்வை;
முறுவல் – புன்னகை;
நல்கி – தந்து
4. மனை வயின் - வீட்டுக்கு; பெய்ர்ந்த - சென்ற;
காலை – பொழுது; நினைஇய – நினைத்து வந்த
6. கொடுங்கால் – வளைந்த தாள், தண்டு
7. கொழுங்குரல் – கொழுத்த தினைக்கதிர்; கோடல்
– காந்தள் மலர்; கண்ணி – தலையில் அணியும் மாலை, பூமாலை;
8. அல்குதல் - தங்குதல்; அயர்தல் – களைப்பாறுதல்,
பொழுதுபோக்குதல் ; முன்றில் – வீட்டின் முற்றம்
9. ஆசினி – ஆசினிப் பலா; படப்பை – தோட்டம்;
நீடிய - நீண்ட
10. சினை - கிளை; விளக்கத்து – வெளிச்சத்தில்
11. மழை – மேகம்; இயக்கம் - நகர்ச்சி
பதவுரை:
1. பொரு இல் ஆயமோடு அருவி ஆடி - ஒப்பற்ற
தோழியர் கூட்டத்துடன் அருவியில் நீராடி,
2. நீர் அலை சிவந்த பேர் அமர் மழைக்கண்
- அருவிநீர் அலைத்தலால் சிவந்த பெரிய விருப்பம் தரும் குளிர்ந்த கண்களில்
3. குறியா நோக்கமொடு முறுவல் நல்கி -
யாரையும் குறித்து நோக்காத பொதுப்பார்வையுடன் புன்னகையை நமக்குத் தந்து
4. மனை வயின் பெயர்ந்த காலை நினைஇய –
அவள் தன் வீட்டிற்குச் சென்றதை நினைத்து
5. இனிக்காண் பரியள்என் நெஞ்சே
புனத்த – இனி காண்பதற்கு அரியவள்; நெஞ்சே! தினைப்புனத்தில்
6. நீடு இலை விளை தினை கொடும் கால்
நிமிர - நீண்ட இலையையுடைய நன்கு விளைந்த தினையின் வளைந்த தாள் நிமிரும்படி
7. கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல
- கொழுமையான கதிர்களைக் கொய்வதைக் கருதி, திரண்ட பல
8. பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில்
- பெருங்கூட்டமான குறவர்கள் தங்கி
மகிழும் முன்றிலில்
9. குட காய் ஆசினி படப்பை நீடிய -
குடம்போன்ற காய்களைக் கொண்ட ஆசினிப்பலாத் தோட்டத்தின் நீண்ட
10. பன் மர உயர் சினை மின்மினி
விளக்கத்து - பல மரங்களின் உயர்ந்த கிளைகளிலுள்ள மினிமினிகளின் வெளிச்சத்தில்
11. செல் மழை இயக்கம் காணும் - வானில்
செல்கின்ற மேகங்களின் ஓட்டத்தைக் காணும்
12. நன் மலை நாடன் காதல் மகளே - நல்ல
மலைநாடனின் காதல் மகளானவள்
கொண்டு கூட்டு: நெஞ்சே, நாடன் காதல்மகள், அருவியாடி,
நோக்கமொடு, முறுவல் நல்கிப் பெயர்ந்த காலை நினைஇய, காண்பரியவள் எனக் கூட்டுக.
உரை:
நெஞ்சமே!
ஒப்புமையில்லாத தன் தோழியருடன் அருவியில் நீராடி, நீர் அலைத்ததால் சிவந்த பெரிய
குளிர்ச்சியான கண்களால் ஏதும் அறியாதவள்போல நம்மைப் பார்த்துப் புன்னகை
புரிந்துவிட்டுத் தன் இல்லத்திற்குச் சென்றாளே, நீ அவளையே நினைக்கின்றாய்! இனி அவளைக் காண்பது அரிது.
அவள் எத்தகைய மலைநாட்டின் தலைவனுடைய
மகள் தெரியுமா? தினைப் புனத்தில் நீண்ட இலைகளுக்கு நடுவே விளைந்து வளைந்த
கதிர்களைக் கொய்யக் கருதிப் பெருத்த கூட்டமாகக் குறவர்கள் தங்கள் முற்றத்தில்
தங்கி மகிழ்வர். அங்கே குடம் போன்ற காய்களைக் கொண்ட ஆசினிப் பலா மரங்கள் நிறைந்த
தோட்டம் இருக்கும். அம்மரங்களின் உயர்ந்த கிளைகளில் மின்மினிப் பூச்சிகள்
விளக்குகளைப்போல ஒளிவீச்ச இரவில் செல்லும் மேகங்களின் அழகிய இயக்கத்தைக் காணும்
நல்ல மலைநாடனின் அன்புமகள் அவள்.
சிறப்புக் குறிப்பு:
நாளை
தினை அறுவடை செய்ய வேண்டியிருப்பதால், மழை பெய்து அறுவடைக்கு இடையூறு ஏற்படுமோ என்ற
நோக்கத்துடன், தலைவியின் தந்தையும் மற்றவர்களும் மின்மினிப் பூச்சிகளின் மெல்லிய ஒளியில்
வானில் நகரும் மேகங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே தலைவி இற்செறிக்கப்பட்டுள்ளாள்;
எனவே, தினை அறுவடை முடிந்துவிட்டால், தினைப்புனத்தில் தலைவியைச் சந்தித்து வந்த
வழக்கமான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
இந்தச்
சூழ்நிலையை உணர்ந்த தலைவன், இனியும் காலம் தாழ்த்தினால் தலைவியை அடைவது
அரிதாகிவிடும் என்பதை எண்ணுகிறான். ஆகவே, விரைவில் தலைவியை மணந்து கொள்ள வேண்டும்
என்ற தன் ஆவலைத் தன் நெஞ்சத்திடம் உரையாடுவதுபோல வெளிப்படுத்துகிறான்.
இவ்வாறு
பார்க்கும்போது, இப்பாடலில் இயற்கைக் காட்சியான மேகம், மழை, மின்மினிப் பூச்சி, தினை
அறுவடை ஆகியவை வெறும் பின்னணிக் காட்சிகளாக இல்லாமல், தலைவனின்
உள்ளத்தில் உருவாகும் அவசரத்தையும் பிரிவின் அச்சத்தையும் வெளிப்படுத்தும் உளவியல்
குறியீடுகளாக அமைகின்றன. தினை அறுவடை என்பது ஒரு வேளாண் நிகழ்வு மட்டுமல்ல;
தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான சந்திப்புகளின் ஒரு காலகட்டம் முடிவடைவதற்கான
அறிகுறியாகவும் அமைகிறது.
எனவே, “இனிமேல் சந்திக்கும்
வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ?” என்ற அச்சமே “இனிமேல் திருமணத்தைத் தாமதிக்கக்
கூடாது” என்ற தலைவனின் முடிவாக மாறுகிறது. இது சங்க அகப்பாடல்களில் இயற்கை
நிகழ்வும் காதலர்களின் அக உணர்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதற்கு நல்ல
எடுத்துக்காட்டாகும்.
ஆசினிப் பலா: இது சாதாரண பலாப் பழத்தைவிடச் சிறியது . இனிப்பும், லேசான
புளிப்பும் கலந்த தனித்துவமான சுவையுடையது.
Comments
Post a Comment