43. ஓர் எயில் மன்னன்போல அழிவு வந்தது

 

43. ஓர் எயில் மன்னன்போல அழிவு வந்தது

 

 

பாடியவர்: எயினந்தையார்

இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இவர்  எயினனுக்குத் தந்தை என்பதால் எயினந்தையார் என்று அழைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர்.

 திணை: பாலை

 துறை: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது

 துறை விளக்கம்: தலைவன் பிரிந்து செல்லப் போகிறான் என்பதை அறிந்த தோழி, அவன் செல்லாமல் தடுத்து நிறுத்தியது அல்லது அவன் பயணத்தை ஒத்திவைக்கச் செய்தது.

 பாடலின் பின்னணி:

பாலை நிலத்து வெயிலில் தவித்துப் பசியால் அலைந்த செந்நாய், ஒரு மானைக் கொன்று தின்றபின் எஞ்சிய இறைச்சியே வழிப்போக்கர்களுக்கு உணவாகும் அளவுக்கு வறட்சியும் ஆபத்தும் நிறைந்த கொடிய பாலைவழியில், தலைவன் பொருள் ஈட்டப் பிரிய எண்ணுகிறான். அதனைத் தோழியிடம் அறிவிக்க, அவளோ தலைவனின் பிரிவுச் செய்தியைக் கேட்டதுமே தலைவி அடைந்த துயரத்தை எடுத்துரைக்கிறாள். பகைவேந்தனின் யானைப் படை மதிலைச் சூழ்ந்து நின்றபோது, அதைக் காக்க எவரும் இன்றி, அஞ்சற்க என்று அபயம் அளித்த துணை மன்னனும் தன்னைக் கைவிட்டுச் சென்றதால் நடுக்கமுற்று அழியும் ஒற்றை மதிலை மட்டுமே அரணாகக் கொண்ட சிற்றரசனைப்போல, தலைவனின் பிரிவைக் கேட்ட மாத்திரத்திலேயே தலைவி முற்றிலும் நிலை குலைந்துபோனாள் என்பதை உணர்த்தி, அவளது அஞ்சத்தக்க நிலையைச் சுட்டிக்காட்டித் தலைவனின் பயணத்தைத் தோழி தடுத்து நிறுத்துகிறாள்.

 

துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்            5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டென
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்         10
ஓர் எயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே

 

அருஞ்சொற்பொருள்:

1. துகில் – ஆடை (வெண்ணிற ஆடை); அவிர்தல் – ஒளிர்தல்; உருப்பு – வெப்பம்

2. என்றூழ் – கோடைக்காலம், வெயில்; கவாஅன் – மலைப்பக்கம்

3. ஓய்ப்பசி – மிக்க பசி; உயங்குதல் - வருந்துதல்; மரை – ஒருவகை மான்;

தொலைச்சி – கொன்று

4. ஆர்ந்தன - தின்ற; மிச்சில் - எஞ்சிய; சேய் – தூரம்

5. சுரம் – பாலைநிலம்; வல்சி – உணவு

6. இறத்தல் – செல்லுதல்

7. மெய் மலி உவகை – உடல் பூரிக்கும் மகிழ்ச்சி

8. இறை – அரசன்

9. பைங்கண் – பசுமையான கண்

10. களையுநர் - துன்பத்தைத் தீர்ப்பவர்

11. எயில் – மதில், கோட்டை

12. வந்தன்றால் - வந்தது; ஒழிதல் – பிரிதல்; கேட்டே – கேட்டு ( ஏ- அசைநிலை)

 

பதவுரை:

1. துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் - வெண்மையான ஆடையை விரித்தாற்போல வெயில் விளங்குவதால்  வெப்பம் உள்ள

2. என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – வெயில் நீடிய மலைப்பக்கத்தில்

3. ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி - மிகுந்த பசியையுடைய செந்நாய், வாடிய மானைக் கொன்று

4. ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு - நன்கு உண்டு எஞ்சிய மிச்சம், நெடுந்தொலைவில் உள்ள நாட்டுக்கு

5. அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் - அரிய பாலைநில வழியில் செல்வோருக்கு உணவாகும்

6. வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே - வெம்மையான அரிய வழியில் செல்லுதல் உமக்கு

7. மெய் மலி உவகை ஆகின்று இவட்கே - உடல் பூரிக்கும் உவகை தருவதாகின்றது; இவளுக்கோ,

8. அஞ்சல் என்ற இறை கைவிட்டென – அஞ்ச வேண்டாம் என்று கூறிய வேந்தன் கைவிட்டானாக,

9. பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – பசுமையான கண்களையுடைய யானைப்படையுடன் பகைமன்னன் மதிற்புறத்தே தங்கியிருக்க,

10. களையுநர் காணாது கலங்கிய உடை மதில் - தன் துன்பத்தைக் களைவாரைக் காணாமல் கலங்கிய, ஒரே ஒரு மதிலை

11. ஓர் எயில் மன்னன்போல – மட்டுமே அரணாகக்கொண்ட குறுநில மன்னன்போல

12. அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே – அழிவு வந்தது, நீ பிரிவதைக் கேட்டு.

 

கொண்டு கூட்டு: ஆரிடை இறத்தல் நுமக்கு உவகை ஆகின்று; ஒழிதல் கேட்டு இவட்கு அழிவு வந்தன்று எனக் கூட்டுக.

 

உரை:

வெண்ணிற ஆடையை விரித்தாற்போல் ஒளிரும் கடும் வெயிலுடைய ஒளிரும் நீண்ட மலைப்பகுதியில், கடுமையான பசியோடு இருக்கும் செந்நாய் ஒன்று, வாடிய மானைக் கொன்று தின்கிறது. அது தின்று எஞ்சிய இறைச்சி, தொலைதூரக் கொடிய பாதையில் செல்பவர்களுக்கு  உணவாகிறது. இத்தகைய வெப்பமும் அரிய பாதையுமான வழியில் செல்வது உனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கலாம்.

"அஞ்சாதே" என்று ஆறுதல் கூறித் துணையாக இருந்த மன்னன் கைவிட்டுச் சென்றதாலும், பகைவேந்தன் தனது யானைப்படையோடு வந்து கோட்டைக்கு வெளியே தங்கியதாலும், தன் துன்பத்தைப் போக்க ஆளின்றி மனம் கலங்கும் ஒரே ஒரு மதிலை மட்டுமே அரணாகக்கொண்ட மன்னனைப்போல, நீ பிரிந்து செல்லவிருப்பதை அறிந்ததும் இவளுக்குப் பேரழிவைத் தரும் துன்பம் வந்துவிட்டது. 

சிறப்புக் குறிப்பு:

இறைச்சி: செந்நாய் தின்று எஞ்சிய மான் இறைச்சியை வழிப்போக்கர் உண்பதைப்போல, தலைவன் பிரிந்த பின் தலைவியின் மேனி அழகைப் பசலைக் கவர்ந்து அழிக்கும் என்ற மறைபொருளைத் தோழி உணர்த்துகிறாள்.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!