42. பாக, மறத்தற்கு அரிது!
42. பாக, மறத்தற்கு அரிது!
பாடியவர்:
கீரத்தனார்
இவரைப்
பற்றிய செய்திகளைப் பாடல் 27-ன் உரையில் காணலாம். திணை: முல்லை
துறை விளக்கம்: தன் வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வரும் தலைவன், தேரோட்டியிடம் கூறியது.
பாடலின் பின்னணி:
போரில் வென்று தன் கடமையை முடித்த கையோடு, கார்காலத்து
மேகங்கள் சூழ்ந்த மாலையில் தலைவன் தன் தேரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தான். வழியெல்லாம்
பெய்த பெருமழையால் பள்ளங்களில் நீர் நிரம்பி வழிய, தவளைகளின் பேராரவாரம் தேர்மணிகளின்
ஓசையை அறவே மறைத்துவிட்டது. தன்னைப் பிரிந்த துயரால் கூந்தலைக் கூடச் செப்பனிடாமல்
வாடிக்கொண்டிருக்கும் தலைவிக்கு, இந்த ஆரவாரத்தில் தன் வருகை தெரியாமல் போய்விடுமே
என்று தலைவன் நினைத்தான். உடனே தன் ஏவலர்களை முன்கூட்டியே வீட்டிற்கு விரைந்து சென்று,
தான் வரும் செய்தியைச் சொல்லுமாறு கூறினான்.
செய்தி
கேட்டுப் பரவசமடைந்த தலைவி, அவசர அவசரமாகத் தன் கூந்தலை நீராட்டிக் கழுவி, சில
மலர்களை மட்டுமே சூடி ஆயத்தமானாள். சரியாக அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த
தலைவனைக் கண்டதும், பிரிவால் மெலிந்த தன் உடலின் சோர்வையும் மறந்து அவனிடம்
ஓடிவந்தாள். விரிகின்ற மலர்களோடு மணம் வீசும் கூந்தல் அசைய, அவனை ஆசையோடு கட்டித்
தழுவிக்கொண்டாள். அந்தப் பரவசக் கணத்தை நினைவுகூர்ந்த தலைவன், "தேர்ப்பாகனே!
என் தலைவியின் இந்த மாபெரும் மகிழ்ச்சி நிலையை என்னால் மறக்கவே முடியாது," என
நெகிழ்ச்சியுடன் கூறினான்.
மறத்தற்கு
அரிது ஆல் பாக பல் நாள்
அறத்தொடு வருந்திய உலகு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
மணி ஒலி கேளாள் வாணுதல் அதனால் 5
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அற கழீஇ
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ 10
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே
அருஞ்சொற்பொருள்:
1. பாக – தேர்ப்பாகனே
3. பழ மழை – பழைய மழை (பருவ மழை); அவல் – பள்ளம்;
அவல் = பள்ளத்தில்
4. நா நவில் – நாவினால் எழுப்பும் ;கறங்க
- ஒலிக்க;
மாண்வினை – சிறப்பாகச் செய்யப்பட்ட
5. வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றி
6. ஏகுமின் – விரைவாகச் செல்லுங்கள்; இளையர்
– பணியாட்கள்; வல்லே – விரைவாக
7. இல் புக்கு – வீட்டில் நுழைந்து; அறியுநர்
– அறிவிப்பவர்
8. மண்ணா – கழுவாத; கழீஇ – கழுவி
9. போது - மலர்; குரல் – கூந்தல்
10. வருத்துறாஅ – வருந்தும்படி
11. அவிழ்தல் – மலர்தல்; கவைஇய – கட்டித் தழுவிய
12. மடமா – இளமையும் அழகும் பொருந்திய; அரிவை
– தலைவி;
அயர்தல் – கொண்டாடுதல்
பதவுரை:
1. மறத்தற்கு அரிதால் பாக பல் நாள் -
மறக்க முடியாதது பாகனே! பல நாள்கள்
2. அறத்தொடு வருந்திய உலகு தொழில்
கொளீஇய - வறட்சியுற்று வருந்திய உலக மக்ககள் தத்தமக்குரிய தொழிலை மேற்கொள்ளுமாறு
3. பழ மழை பொழிந்த புது நீர் அவல -
தொன்றுதொட்டுப் பெய்யும் வழக்கத்தையுடைய மழை பொழிந்த புது நீர் உள்ள
பள்ளங்களிலிருந்து
4. நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை -
நாவினால் பன்முறை ஒலியெழுப்பும் தவளைகள் தம் சுற்றத்தோடு சேர்ந்து கத்துவதால்,
சிறப்பாகச் செய்யப்பட்ட
5. மணி ஒலி கேளாள் வாள்நுதல் அதனால் -
மணிகளின் ஒலியைக் கேட்கமாட்டாள் ஒளிவிடும் நெற்றியையுடையவள்; அதனால்
6. ஏகுமின் என்ற இளையர் வல்லே –
விரைவாகச் செல்லுங்கள் என்று ஏவிய இளையர் விரைவாகச் சென்று
7. இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென -
வீட்டில் நுழைந்து வரவை அறிவிக்க, மெதுவாக
8. மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ – தூய்மை
செய்யப்படாமல் இருந்த கூந்தலை மாசு நீங்கும்படியாகக் கழுவி
9. சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
- சில பூக்களைக் கொண்டு தன் அடர்ந்த கூந்தலில் செருகிக்கொண்ட
10. அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
- அவ்வேளையில் நான் வீட்டுக்குள் சென்று புக, தன் மெய் வருந்தும்படி வந்து
11. அவிழ் பூ முடியினள் கவைஇய - பூக்கள்
விழும்படி அவிழ்ந்த கூந்தலையுடையவளாய் என்னை அணைத்துக்கொண்ட
12. மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே
- அந்த இளமை அழகும் பொருந்திய என் மனைவி மகிழ்ந்து என் வரவைக் கொண்டாடிய நிலை
கொண்டு கூட்டு: வாணுதல் மணியொலி கேளாள்; அதனால் ஏகுமின்
என்ற இளையர் இல்புக்கு அறியுநராக, கூந்தல் மாசறக் கழீஇச் சில்போதுகொண்டு, குரல்
அழுத்திய அந்நிலை, யாம் சென்று புகுதலின், முடியினள் கவைஇய அரிவை மகிழ்ந்து அயர்
நிலை மறத்தற்கு அரிதாகலின், வினைமுற்றி மீளும் இப்போது அந்நிலை நினைவில்
எழுகின்றது எனச் சேர்த்துக் கூட்டுக.
உரை
தேர்ப்பாகனே!
முன்பொருநாள், இன்றுபோல் நான் பணிமுடித்து வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். பல
நாட்களாக இடைவிடாமல் பெய்யும் தன் கடமையைச் செய்த மழையினால் பள்ளங்கள் அனைத்திலும்
புதிய நீர் நிரம்பியிருந்தது. அங்குள்ள தவளைகள் தம் சுற்றத்தோடு சேர்ந்து எழுப்பிய
பேரொலியால், என் தேர்க்குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஓசையைத்
தலைவி கேட்கமாட்டாள் என்று நினைத்தேன். எனவே, என் ஏவலர்களை விரைந்து சென்று என்
வரவை அறிவிக்கச் செய்தேன். அவர்கள் சென்று அறிவித்தவுடன், என்னைப் பிரிந்திருந்த
காலத்தில் எவ்வித ஒப்பனையும் செய்யாதிருந்த தன் கூந்தலைத் தூய்மையாக்கி, சில
மலர்களை மட்டும் சூடிக் காத்திருந்தாள். நான் மெல்ல வீட்டுக்குள் நுழைந்தவுடனே,
பிரிவால் மெலிந்த தன் உடல் மேலும் வருந்தாமல், மலர்கள் அவிழும் அளவிற்கு வேகமாக வந்து என்னைக்
கட்டித் தழுவினாள். இளமையும் அழகும் பொருந்திய என் தலைவியின் அந்தப்
பெருமகிழ்ச்சியான நிலையை என்னால் இன்றும் மறக்க இயலாது!
Comments
Post a Comment