41. அரிவையின் குறுநடைக் கூட்டம்

 

41. அரிவையின் குறுநடைக் கூட்டம்

 

பாடியவர்: இளந்தேவனார்

இளந்தேவனார் என்பவர் நற்றிணையில் ஒரு பாடலும் (41) மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் என்ற புலவர் அகநனூற்றில் மூன்று பாடல்களும் (58, 298, 328) இயற்றியதாகக் காணப்படுகிறது. இருவரும் ஒரு காலத்தில் வாழ்ந்ததால், ஒருவர் ‘இளந்தேவனார்’ என்றும் மற்றொருவர் ‘மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை மற்றும் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் ஆகியோர்  'இளந்தேவனார்' என்பவரும் 'மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்' என்பவரும் ஒருவரே என்று கூறுகின்றனர்.

 

திணை: பாலை

 

துறை: பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது

 

துறை விளக்கம்: "ஆண்கள் தங்கள் கடமைக்காகவும் பொருள் ஈட்டுவதற்காகவும் பிரிந்து செல்வது உலக வழக்கம்; அவர் விரைவில் கடமையை முடித்து திரும்பி வந்துவிடுவார்" என்று உலக இயல்பை எடுத்துக்கூறி, தலைவியின் மனதைத் தேற்றுவதற்காகத் தோழி ஆறுதல் கூறுகிறாள்.

 

பாடலின் பின்னணி:

ஒருவன் பொருள் தேடுவதற்காகத் தன் ஊரிலிருந்து வெகுதொலைவு சென்றிருக்கிறான். கணவனின் பிரிவால் அவனது மனைவி வருந்துகிறாள். வருத்தத்தில் இருக்கும் மனைவியைப் பார்ப்பதற்கு அவள் தோழி வருகிறாள். தலைவியின் மனநிலையை அறிந்துகொண்ட தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

"ஆண்கள் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து செல்வது உலக இயற்கை. பொருள் தேடச் செல்லும்போது, சில சமயங்களில் அவர்கள் வறண்ட நிலப் பகுதியில் செல்ல வேண்டியிருக்கும். அவ்வாறு செல்லும்போது அவர்களுக்கு நீர்வேட்கை அதிகமாகும். அங்குக் குடிப்பதற்கு நீர் கிடைப்பது அரிது. ஒரு சில இடங்களில் பாறைகளின் இடுக்குகள் வழியே நீர் வந்து சிறிய கிணற்றில் தேங்கியிருக்கும். அதைப் பருகி அவர்கள் தங்கள் தாகத்தைத் தணித்துக்கொள்வார்கள்.

 

விருந்தினர்களுக்கு நெய் கலந்து சமைத்த இறைச்சி உணவை அளித்து, விருந்தோம்பல் செய்து சிறப்பாக இல்லற வாழ்க்கை நடத்தும் தன் மனைவியை அன்போடு தழுவி இன்பம் அனுபவிப்பதற்காகத்தான் ஆண்கள் இவ்வாறு சென்று பல இன்னல்களைச் சந்தித்துப் பொருள் ஈட்டுகிறார்கள். உன் கணவர் விரைவில் வந்துவிடுவார்; வருத்தப்படாதே." என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

 

பைங் கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ           5
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே                10

 

அருஞ்சொற்பொருள்:

1. பைங்கண் – பசுமையான கண்; பரூஉ - பருத்த; தாள் – கால்

2. களரி – களர்நிலம்

3. சுரன் – பாலைவழி; பைபய – மெல்ல

4. பாஅர் - பாறை; மலிதல் – நிறைதல்; கூவல் – கிணறு

5. சேண் - தொலைவு; மாதோ – அசைச்சொல்

6. எல்லி – இரவு நேரம்

7. கிளர்தல் - ஒளிர்தல்; அரிவை - பெண் (தலைவி) ; துழந்து – துழாவி;

அட்ட - சமைத்த

8. விளர் - கொழுப்பு; ஊன் - இறைச்சி; அம் – அழகிய; எறிந்த – படிந்த

9. வியர் - வியர்வை; பொறித்த – பெற்ற

10. கூட்டம் – கூடுதல்

 

பதவுரை:

1. பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த – பசுமையான கண்களையுடைய யானையின் பருத்த கால்கள் மிதித்ததால் ஏற்பட்ட

2. வெண் புறக் களரி விடு நீறு ஆடி - வெண்மையான நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து

3. சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய - காட்டுவழியின் தொடக்கத்தில் ஏற்பட்ட வருத்தம் மெல்ல

4. பாஅர் மலி சிறு கூவலின் தணியும் - பாறைகள் நிறைந்த இடத்தில் உள்ள சிறிய கிணற்றின் நீரால் தணியும்

5. நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ - நெடுந்தொலைவு சென்று வருந்துவர்.

6. எல்லி வந்த நல் இசை விருந்திற்கு - இரவில் வந்த நல்ல புகழ்பெற்ற விருந்தினர்க்கு

7. கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட – ஒளிரும் அணிகலன்களை அணிந்த பெண்ணே! நீ நெய் துழாவிச் சேர்த்துச் சமைத்த

8. விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி - கொழுப்புள்ள இறைச்சியிலிருந்து எழும் மணமுள்ள புகை படிதலால் நெற்றியில்

9. சிறு நுண் பல் வியர் பொறித்த - சிறிய நுண்ணிய பல வியர்வைத் துளிகள் உண்டாகுமாறு,

10. குறு நடை கூட்டம் வேண்டுவோரே - குறுகுறுவென நடக்கும் நடையினையுடைய உனது உறவை விரும்பும் உன் காதலர்        

கொண்டு கூட்டு: கூட்டம் வேண்டும் காதலர், நெடுஞ்சேண் சென்று வருந்துவாராதலின், நீ ஆற்றாயாவது நன்றன்று; இவ்வாறு குறிப்பால் பொருளை உணர்ந்து உரையை முடிக்க வேண்டும்.

 

உரை:

உன் கணவர் வெகு தொலைவு சென்றிருக்கிறார். அங்கு, யானையின் கால்கள் மிதித்து எழுப்பிய களர்நிலத்தின் தூசியில் நடந்து, வழியின் வெம்மையால் உண்டாகும் களைப்பைப் பாறை இடுக்குகளில் தேங்கியுள்ள சிறிய கிணற்றின் நீரைக் குடித்துத் தாகத்தைத் போக்கிக் கொள்வார். அங்கு அவர் தன்னை வருத்திக்கொண்டு பொருள் ஈட்டுவது ஏன் தெரியுமா?  இரவில் தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு, ஒளிரும் அணிகலன் அணிந்த நீ நெய்யிட்டு இறைச்சியைச் சமைக்கும்பொழுது, புகை படிந்த உன் நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளோடு, குறுநடையுடன் வந்து தன்னைத் தழுவும் இன்பமான இல்லற இன்பத்தை அனுபவிப்பதற்காகவே ஆகும்.

Comments

Popular posts from this blog

29. யாங்கு வல்லுநள் கொல்!

27. நெய்தல் குறுமோ எனக் கூறாதோளே

28. கள்வர்போலக் கொடியன்!