நற்றிணை - கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து
பாடியவர்:
பாரதம் பாடிய பெருந்தேவனார்
இவர் பாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று
அழைக்கப்பட்டார். இவர் இயற்றிய பாரதம்
இப்பொழுது கிடைக்கவில்லை. இவர் இயற்பெயர்
பெருந்தேவனார். இவர் எட்டுத்தொகை
நூல்களில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை மற்றும் ஐங்குறுநூறு ஆகிய ஐந்து நூல்களுக்கும்
கடவுள் வாழ்த்து எழுதிச் சேர்த்தவர்.
மா நிலம் சேவடி ஆக தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய 5
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே!
அருஞ்சொற்பொருள்:
1. மா – பெரிய; சேவடி – சிவந்த அடி; தூ – தூய
2. வளை - சங்கு; நரலுதல் - ஒலித்தல்; பௌவம்
- கடல்; உடுக்கை – ஆடை
3. விசும்பு – ஆகாயம்; மெய் - உடல்
4. பசுங்கதிர் – குளிர்ச்சியான கதிர்; மதியம்
- திங்கள்; சுடர் – கதிரவன்
5. பயின்று – பொருந்தி
7. தீது – குற்றம்; திகிரி – ஆழி (சக்கராயுதம்)
பதவுரை:
1. மா நிலம் சேவடி ஆக தூநீர் - பெரிய
நிலமே தன் சிவந்த அடியாகவும், தூய்மையான
நீர் நிறைந்த
2. வளை நரல் பௌவம் உடுக்கை ஆக -
சங்குகள் முழங்கும் கடலே தனக்கு
ஆடையாகவும்
3. விசும்பு மெய் ஆக திசை கை ஆக - வானமே தனக்கு உடலாகவும், திசைகள் கைகள்
ஆகவும்
4. பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக –
குளிர்ச்சியான கதிர்களையுடைய திங்களுடன்,
ஞாயிறு ஆகியவற்றைக் கண்களாகவும் கொண்டு
5. இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய - காணப்படும்
எல்லாவற்றிலும் பொருந்தி
நின்றும் தன்னகத்தே அடக்கியும் உள்ள
அவன்
6. வேத முதல்வன் என்ப - வேதங்களுக்கு முதல்வன் என்பர்
7. தீது அற விளங்கிய திகிரியோனே – குற்றமற்ற ஆழியையுடையவனே
உரை:
பெரிய நிலம் தன் சிவந்த அடிகளாகவும், தூய
நீரில் சங்குகள் ஒலிக்கின்ற கடல் ஆடையாகவும், ஆகாயம் உடலாகவும், திசைகள் கைகளாகவும்,
கதிரவனையும் குளிர்ச்சியான கதிர்களையுடைய திங்களையும் இரண்டு கண்களாகவும் கொண்டு, எல்லாவுயிர்களிடத்தும்
தான் பொருந்தி இருப்பது மட்டுமல்லாமல், எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கியுள்ள
திருமால் வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் என்பர். குற்றந்தீர விளங்கிய ஆழியையுடைய
அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோமாக!
சிறப்புக் குறிப்பு:
திருமால் தன் கையில் ஆழியை வைத்திருப்பதாகக் கருதப்படுவதால், திகிரியோன்
என்பது திருமாலைக் குறிக்கிறது.
வேதங்களின்
முதல்வன் திருமால் என்று பரிபாடலிலும் பகவத் கீதையிலும் கூறப்பட்டிருப்பது இங்கு
ஒப்பு நோக்கத் தக்கது. உதாரணமாக, திருமாலைப் போற்றும் பரிபாடலின் மூன்றாவது
பாடலில், திருமால் வேதங்களின் பொருளாகவும், அதன் தலைவனாகவும் இருக்கும் தகைமை
விரிவாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ”வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ” என்று அப்பாடலில் கூறப்பட்டுள்ளது[1].
பகவத் கீதையில் தான் வேதங்களின் வடிவம் என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்[2].
Comments
Post a Comment